கட்சியில் இருந்து அங்கிதா தத்தா நீக்கம்

காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் பிரிவின் மூத்த தலைவர் பி.வி ஸ்ரீனிவாஸ் மீது தொல்லை, துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார் அசாம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அங்கிதா தத்தா. 4 தலைமுறையாக காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த இவர், ஸ்ரீனிவாஸ் மீது அளிக்கப்பட்ட புகார்கள் மீது கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, புகார் அளித்து ஆறு மாதங்கள் ஆகியும், ராகுல், பிரியங்கா, சோனியா, மல்லிகார்ஜுன் கார்கே, உள்ளிட்ட எவரும் இதனை விசாரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அங்கிதா கூறியிருந்தார். இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என கூறி புகார் அளித்த அங்கிதா தத்தாவை 6 ஆண்டுகளுக்கு அக்கட்சியில் இருந்து காங்கிரஸ் தலைமை நீக்கியுள்ளது. அசாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள திஸ்பூர் காவல் நிலையத்தில் ஸ்ரீனிவாஸ் மீது அங்கிதா தத்தா புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாசுக்கு எதிரான அங்கிதா தத்தாவின் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முறையற்ற முறையில் காஅங்கிரஸ் தலைமை கையாண்டதற்காக கடுமையாக சாடினார். காங்கிரஸ் கட்சி அதைத் தீர்க்கத் தவறினால், அசாம் காவல்துறை இந்த விவகாரத்தில் தலையிடும் என்று அவர் உறுதியளித்தார். இந்த புகார்கள் கூறப்பட்ட அடுத்த நாளே ஸ்ரீனிவாசை கர்நாடக தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக அக்கட்சியின் தலைமை நியமித்துள்ளது நினைவு கூரத்தக்கது.