”ஒரு நாள் எனது சுதந்திர பாரதம் ஒளிரும்”

இன்றைய வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தவர் சூர்யா சென். இளைஞர்களைத் திரட்டி புரட்சிப் படை அமைத்து ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடினார். சிட்டகாங் துறைமுகத்தில் வெள்ளையர்கள் ஒரு பெரிய ஆயுதக் கிடங்கில் ஏராளமான ஆயுதங்களை குவித்து வைத்திருந்தார்கள். அந்த ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றி சிட்டகாங் நகரை சுதந்திர நகராகப் பிரகடனப்படுத்த திட்டமிட்டார் சூர்யா சென்.

திட்டமிட்டபடி சூர்யா சென்னும் அவரது நண்பர்களும் சேர்ந்து ஆயுதக் கிடங்கை வளைத்து அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்றி, கட்டிடத்தை தீ வைத்துக் கொளுத்தினார்கள். செய்தி அறிந்து ஆங்கிலேயப் படை வருவதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றார்கள்.

சூர்யா சென் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 10,000 பரிசு என்று அந்நிய அரசு மூலை முடுக்கெல்லாம் விளம்பரம் செய்திருந்தது. இதெல்லாம் தெரிந்த பிறகும் கூட,  சாவித்திரி அம்மாள்

எனும் மூதாட்டி தனது குடிசையில் சூர்யா சென்னுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தாள். சில மாதங்களுக்குப் பிறகு ஒரு துரோகி காட்டிக் கொடுத்ததன் காரணமாக சூர்யா சென் கைது செய்யப்பட்டு, அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது சூர்யா சென்னுக்கு வயது 39.

சூர்யா

 

சென் சிறையில் கொடுமையாகத் தாக்கப்பட்டார். ஒரு சுத்தியலை வைத்து அவரது ஒவ்வொரு பல்லாக தட்டி உடைத்தனர். அனைத்து பற்களும் உடைக்கப்பட்டு வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. அப்போதும் வெள்ளையனின் வெறித்தனம் குறையவில்லை. நகங்களை பிடுங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்து அடித்தே கொன்றார்கள். பிறகு பிணத்தைத்தான் தூக்கிலிட்டு அவரின் சடலத்தை கடலில் வீசியெறிந்தார்கள்.

விடுதலை வேள்வியில் தன்னையே அர்ப்பணித்த சூர்யா சென் கடைசியாகச் சொன்ன வார்த்தை,

ஒரு நாள் எனது

சுதந்திர பாரதம் ஒளிரும்”