குஜராத் மாநிலம் உனா நகரில் பசுவின் தோலை உரித்ததாகக் கூறி தலித் சமூகத்தைச் சேர்ந்த 7 பேரை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
இது தொடர்பாக 17 பேரை குஜராத் காவல்துறை கைது செய்துள்ளது. மாநில அரசின் மூத்த அமைச்சர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதலும் மற்றைய உதவிகளையும் செய்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலத்தில் இப்படி ஒரு சம்பவம் என்றவுடனேயே ராகுல் காந்தி உடனே அங்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் சொல்கிறார், நிதி வழங்குகிறார். ராகுல் மட்டுமல்ல கெஜ்ரிவால், மாயாவதி போன்றோரும் பாதிக்கப்பட்டோருக்காக உருகி, உருகி கண்ணீர் வடிக்கின்றனர்.
ஆனால் இதே சம்பவம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடைபெற்றால் ராகுல் பதறுவது இல்லை… கண்ணீர் வடிப்பது இல்லை… ஆறுதல் சொல்ல நேரடி விஜயம் இல்லை. ஏன் இந்த முரண்பாடு?
கடந்த பீகார் தேர்தலில் உ.பி. சம்பவத்தை வைத்து பிரச்சாரம் செய்த காங்கிரசாரும் மற்றவர்களும் வர இருக்கின்ற உ.பி., குஜராத் தேர்தலுக்கு இந்த சம்பவத்தை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த பிரச்சினைக்காக அமளியில் ஈடுபட்டிருந்தபோது ராகுல்காந்தி தலையில் கை வைத்துக் கொண்டு அமைதியாக தூக்கிக் கொண்டிருந்தார். இந்தப் படம் எல்லா தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. தலித் மீது உண்மையான அக்கறை இருந்தால் அது பற்றிய காரசார விவாதத்தின் போது ராகுல் காந்தி தூங்கியிருப்பாரா?
காங்கிரஸ் கட்சியின் அடுத்த அகில இந்திய தலைவராகவும், அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் அடையாளம் காட்டும் ராகுலின் உண்மையான தகுதி இதுதான். ஐயோ பாவம் காங்கிரஸ்.