சென்னை ஐசிஎஃப் ஆலையில் 12 பெட்டிகள் கொண்ட வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளை முடித்து, வரும் ஜூலைக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணியில் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை 58-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப் படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக, வந்தே மெட்ரோ ரயில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில், அம்ரித் பாரத் ரயில் ஆகிய 4 வகைகளில் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவற்றில், வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப்-ல் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இது, வந்தே பாரத் வடிவமைப்பிலான நடுத்தர தொலைவிலான நகரங்களுக்கு இடையேயான ரயில் தொடராகும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் இது இயக்கப்படும். இந்த ரயில் தயாரிக்கத் தேவையான உதிரிப் பாகங்கள் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.
சில உதிரிப் பாகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. பணிகளை முடித்து, வரும் ஜூலைக்குள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, இந்த ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பிறகு, இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலை அமைப்பு ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும். அதன்பிறகு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறப்பம்சங்கள்: இந்த ரயிலில் ஏசி வசதி, பயணிகளைக் கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் இருக்கும். கண்காணிப்பு கேமரா, அதி நவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் 100 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்கமுடியும். இதுதவிர, பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளன.