ஐ.நா.வின் செயல் அபத்தமானது இந்தியாவுக்கு எலன் மஸ்க் ஆதரவு

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பு செய்யக்கோரி இந்தியா பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த 21ம் நுாற்றாண்டின் புவி அரசியல் யதார்த்தங்களை ஐ.நா., பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என, தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், ஐ.நா., பொது செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர் கூறியிருந்ததாவது:பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்ரிக்காவுக்கு இன்னும் நிரந்தர உறுப்பினர் இருக்கை இல்லாததை எப்படி ஏற்க முடியும்?

ஐ.நா., போன்ற அமைப்புகள் இன்றைய உலகை பிரதிபலிக்க வேண்டுமே தவிர, 80 ஆண்டுகளுக்கு முந்தைய உலகத்தை அல்ல.செப்டம்பரில் நடக்கவுள்ள எதிர்கால உச்சி மாநாடு, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களை பரிசீலிக்க மற்றும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.இதற்கு, அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலன் மஸ்க் எதிர்வினையாற்றி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

ஐ.நா.,வின் தற்போதைய அமைப்பு உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடுகளை போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவே, ஐ.நா., அமைப்புகளில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம்.பிரச்னை என்னவென்றால், அதிகப்படியான அதிகாரம் உள்ளவர்கள் அதை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடான இந்தியாவுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இருக்கை வழங்கப்படாதது அபத்தமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.