‘ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி கனவை தகர்த்த தி.மு.க.,’: அண்ணாமலை

கடந்த, 2023ல் தேசிய மருத்துவ ஆணையம், 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 100 மருத்துவ இடங்கள் என்ற விதியை அறிமுகப்படுத்தியது. இதன்படி, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், 15 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகள் அமைக்கப்பட்டதால், மேலும் புதிய கல்லுாரிகள் அமைக்கப்படும் வாய்ப்பு குறைந்தது.

பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதால், இந்த விதி, 2025க்கு பின் நடைமுறைக்கு வரும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. புதிய மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, 2023 நவ., 26 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க., அரசு புதிய கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்காமல் புறக்கணித்து விட்டது.

மயிலாடுதுறை, திருப்பத்துார், தென்காசி, பெரம்பலுார், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க விண்ணப்பிக்கப் போவதாக தி.மு.க., அரசு கூறியிருந்த நிலையில், அதற்கு குறித்த காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறியுள்ளது. இதனால், தற்போது, தமிழகத்தில் 900 மருத்துவக் கல்வி இடங்கள் பறிபோயிருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லுாரிகள் அமைந்தால், தி.மு.க.,வுக்கு அதனால் எந்த லாபமும் இல்லை என்பதற்காக, தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை முற்றிலுமாக புறக்கணித்து இருக்கிறது. தி.மு.க.,வால் ஆண்டுக்கு, 900 மருத்துவ இடங்கள் பறிபோயிருக்கின்றன.

ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு, தி.மு.க.,வால் முற்றிலுமாக தகர்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மத்திய அரசின் மீது பழி போடுவதை மட்டுமே வேலையாக வைத்திருக்கும் தி.மு.க., தன் இந்த கையாளாகாத தனத்துக்கு என்ன பதில் வைத்திருக்கிறது? உண்மையில் அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்குவதை விட, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் துவங்குவதில் தான் தி.மு.க., மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது.

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும், ஒரு மருத்துவக் கல்லுாரிக்குக் கூட விண்ணப்பிக்காமல், ஆறு மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லுாரிகள் அமைய இருந்த வாய்ப்பையும் தி.மு.க.,வின் கையாளாகாத தனத்தால் பறிகொடுத்திருப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்துவாரா? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.