எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த ரஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று கலந்து கொண்டு பேசியதாவது:
நமது எல்லைகள் கூடுதல் பாதுகாப்புடன் இருந்திருந்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிஇன்னும் வேகமாக இருந்திருக்கும். எதிர்காலத்தில் நமது வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, நமது எல்லைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
எனவே, எல்லை பாதுகாப்பு படையினரின் பொறுப்பு மிக, மிக அதிகமாக இருக்க வேண்டும். அவர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். எல்லைகள் மிக முக்கியமானவை. அவைதான் நமது நாட்டின் இறையாண்மையை வரையறுக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் எல்லை பாதுகாப்பில் நமது அரசு மிக அதிக கவனம் செலுத்தியது. அதனால்தான் நமது தேசிய சக்தி நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதாரம் 10 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும். இது மிகப் பெரிய சாதனையாக இருக்கும். அதிக பணியாளர்கள் கொண்ட நாடாகவும், அதிக தொழில்நுட்பம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்ஸ், குவாண்டம் கம்யூட்டிங், பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாகவும் நமது நாடு இருக்கும்.
ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா, தற்போது 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்துள்ளது. இவ்வாறு அஜித் தோவல் கூறினார்.