எம்புரான் திரைப்படமல்ல தீயசக்தி

திரைப்படம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. எதற்காக இதைப் பயன்படுத்துகிறோம் என்ற அடிப்படையில் விளைவு மாறுபடுகிறது. சிறிது காலத்துக்கு முன்பு உண்மைகளை பிரதிபலிக்கும் வகையில் `தி காஷ்மீர் பைல்ஸ்’, `தி கேரளா ஸ்டோரி’ ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. இவற்றுக்கு மக்களிடையே மகத்தான வரவேற்பு கிடைத்தது. உண்மையான சம்பவங்களை அடித்தளமாகக் கொண்டு திரைப்படம் சுவாராஸ்யமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இப்போது வெளியிடப்பட்டுள்ள மலையாள திரைப்படமான எம்ரான் திரைப்படமல்ல, தீய சக்தியே என்பதை நாட்டு நலனில் நாட்டம் கொண்ட அனைவரும் நன்கு உணர்ந்துள்ளனர். இதுபற்றிய வாதங்களும், எதிர்வாதங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. எம்புரான் திரைக்கதையை முரளி கோபி உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்துள்ளார்.

1999ல் காந்தகாருக்கு விமானம் கடத்தப்பட்டது. ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவனாக செயல்பட்ட மசூத் ஆசாத் இந்த விமானத்தை கடத்தியதை தகவல்கள் உறுதிப்படுத்தின. எம்புரான் திரைப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் சையீத் மசூத். இப்பெயர், மசூத் ஆசாத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பை பாரதம், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தடைசெய்துள்ளன. இப்படிப்பட்ட அமைப்பை மகிமைப்படுத்தும் வகையில் எம்புரான் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மைய கண்ணோட்டம் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. நாச வேலை செய்பவர்களாக ஹிந்துக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நாச வேலையால் பாதிக்கப்பட்டவர்களாக முஸ்லிம்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா சம்பவம் திரித்து வெளியிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படும் என்றெல்லாம் படத்தில் காட்சி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோரை கேவலப்படுத்தும் வகையிலும் காட்சிகள் உள்ளன. இது படைப்பாளிகளுக்கான சுதந்திரம் என்று கூறுவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது. இரண்டு சமூகங்களுக்கு இடையே இத்திரைப்படம் பகைமையை வளர்க்கிறது. கலவர நெருப்பை மூட்டி விடுகிறது.

உளவுத்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்படுவதை படம் காட்சிப்படுத்தி உள்ளது. கற்பனை என்ற பெயரில் பயங்கரவாதத்துக்கு துணை போவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இப்படத்துக்கு நிதி அளித்தது யார்? என்பதையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். தேசவிரோத சக்திகள் இப்படத்துக்கு தாராளமாக நிதியை வாரி வழங்கியுள்ளனர். பாரதத்துக்கு எதிராகவும், பயங்கராவாதத்துக்கு ஆதரவாகவும் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மக்களின் பார்வைக்கு தகுதியற்றது என்பதே தேசபக்தர்களின் நிலைப்பாடு.

காரிருளில் வெளிச்சக்கீற்றாக நடிகர் மோகன்லாலில் வருத்தம் அமைந்துள்ளது.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி