மாநில அரசில் கிரகங்கள் கால்வைத்த பின் ஹிந்துக்களை ஒடுக்க ஹிந்து சமயத்தை ஹிந்துப் பண்பாட்டை இழிவுபடுத்துவதே ஆட்சி பீடத்தார் தொழிலாகி விட்டது. வாய்த்த தலைமை அப்படி. கஞ்சாத் தோட்டத்தில் ரோஜாமலராக வந்தார் எம்.ஜி.ஆர். ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் ஹிந்து சமுதாயம் அந்த நல்ல ஹிந்துவை நினைத்துப் பார்க்கிறது.
தமிழக முதல்வராக பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பதவி வகித்தவர் என்ற சிறப்பு எம்.ஜி.ஆர்ருக்கு மட்டுமே உண்டு. 1977 முதல் 1987ஆம் ஆண்டு அவர் மறையும் வரை வேறு யாரும் முதல்வர் பதவியை நெருங்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர். வெறும் கூத்தாடிதான் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். அவருக்கு படிப்பறிவு கிடையாது, நிர்வாக அனுபவம் துளியும் இல்லை. சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார் என்றெல்லாம் கணைகள் வீசப்பட்டன.
எம்.ஜி.ஆர். மெத்தப்படித்த மேதாவி அல்லர் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் மக்களின் நாடித்துடிப்பை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இதனால்தான் மக்கள் திலகம் என்ற பெயர் இன்றுவரை அவருக்குப் மட்டுமே பொருத்தமாக உள்ளது. பொருளாதாரம் மிகவும் நுட்பமானது. நிதி சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்க நிபுணர்களே தடுமாறுவது உண்டு. ஏனெனில் பொருளாதார ரீதியான விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை யாராலும் துல்லியமாக முன்கூட்டியே அவதானிக்க முடியாது.
பொருளாதார பிரச்சினையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். இதை நன்கு உணர்ந்திருந்தார். அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை அவர் கட்டுக்குள் வைத்திருந்தார்.
சிறுவயதில் ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் அவர் பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளார். தன்னைப்போல யாரும் எதிர்காலத்தில் பட்டினி கிடக்கக் கூடாது, பசிப்பிணியால் வாடக்கூடாது என்ற உணர்வு அவர் நெஞ்சில் வலுவாக இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சத்துணவு திட்டமாக உருவெடுத்தது. காமராஜர் ஆட்சி காலத்திலேயே மதிய உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற போதிலும் அதை செம்மைப்படுத்தி மெருகேற்றியது எம்.ஜி.ஆர். தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
குழந்தைகள் வயிறார உணவு உண்டால்தான் படிப்பில் அவர்களால் கவனத்தை செலுத்த முடியும் என்பதை கல்வியியல் வல்லுனர்கள் உறுதிபட உரைக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் சேர்ந்த மாணவர்கள் வெவ்வேறு காரணங்களால் இடையிலேயே நின்றுவிடுவது உண்டு. இப்போது இந்த இடைநிற்றல் பெருமளவு குறைந்துள்ளதற்கு சத்துணவும் ஒரு முக்கிய காரணம். இப்போது இத்திட்டம் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
எம்.ஜி.ஆர். திரையில் நடித்தவரே தவிர, பொதுவெளியில் தன்னால் யாருக்கும் துன்பம் நேரக்கூடாது என்பதில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்தார். எம்.ஜி.ஆர். ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர். திமுகவில் இருந்த காலக்கட்டத்தில் கூட தன்னை நாத்திகன் என்று அவர் ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை.
பிரபல படத் தயாரிப்பாளரும் நடிகருமான சாண்டோ சின்னப்ப தேவர், மருதமலை முருகன் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். பக்தர்களின் வசதிக்காக மருதமலையில் விளக்கு வசதியை சின்னப்ப தேவர் ஏற்பாடு செய்தார். இதை தனது நண்பரான எம்.ஜி.ஆர்.தான் திறந்து வைக்க வேண்டும் என்பதில் சின்னப்பா தேவர் இருந்தார்.
கோயில் சார்ந்த விஷயங்களில் ஆர்வமோ அக்கறையோ காட்டக்கூடாது என்று திமுக பிரமுகர்கள் சிலர் எம்ஜிஆருக்கு முட்டுக்கட்டை போட்டனர். இதையடுத்து அப்போதைய முதல்வர் சி.என். அண்ணாதுரையிடம் எம்.ஜி.ஆர். இது குறித்து பேசியி பின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலம் வாக்கை ஏற்ற தி.மு.க. மறுக்க முடியவில்லை.
எம்ஜிஆரைப் பொறுத்த வரை தான் இறைநம்பிக்கை உடையவர் என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள ஒருபோதும் தயங்கியது இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையை எம்ஜிஆர் வெளிப்படுத்தியுள்ளார்.
கிருபானந்தவாரியார் ஆற்றிய சொற்பொழிவு காரணமாக சர்ச்சை எழுந்தது. அவர் மீது கல்வீசும் அளவுக்கு நிலைமை மோசமானது. இது பல்லாயிரக்கணக்கானோருக்கு மன வேதனையை அளித்தது. எம்ஜிஆரும் மன உளைச்சலால் தவித்தார். எம்ஜிஆர் நேரடியாகத் தலையிட்டு மோதலை தணித்தார். இதன்வாயிலாக, பொன்மனச் செம்மல் என்ற மகுடத்துக்கு பொருந்தமானவர் என்பதை அவர் நிரூபித்தார்.
எம்ஜிஆரின் இஷ்ட தெய்வம் கொல்லூரில் வீற்றிருக்கும் மூகாம்பிகை அம்மன். வாய் பேச முடியாத அசுரனை அம்மன் வதம் செய்த இடம்தான் கொல்லூராகும். இதனால்தான் அம்மனுக்கு மூகாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அவர் கொல்லூரில் அமர்ந்து தியானம் செய்தார். ஆதிசங்கரர் தியான பீடம் இப்போதும் பக்தர்களை ஈர்த்துவருகிறது.
திரைப்படம் ஒன்று அமோக மதுரையில் எம்ஜிஆருக்கு தங்க வாள் அளிக்கப்பட்டது. இது சுமார் அரை கிலோ எடை கொண்டது. இந்த தங்க வாளை மூகாம்பிகையம்மன் கோயிலுக்கு எம்ஜிஆர் காணிக்கையாக அளித்தார்.
இப்போதும் இந்த தங்க வாள் மூகாம்பிகை அம்மன் கோயிலை அலங்கரிக்கிறது. திமுகவில் சிவாஜி கணேசன் இருந்தபோது அவர் திருப்பதிக்குச் சென்றதை பிரச்சினை ஆக்கினார்கள். இதைப்போல மூகாம்பிகை கோயிலுக்கு எம்ஜிஆர் சென்றதையும் சிலர் பிரச்சினை ஆக்க முற்பட்டார்கள். ஆனால் மூகம்பிகையை நான் என் தாயாகக் கருதுகிறேன். என் தாயையும் மூகம்பிகையையும் என்னால் பிரித்துப்பார்க்க முடியவில்லை என்று எம்ஜிஆர் ஆணித்தரமாக கூறியதையடுத்து, பிரச்சினையை எழுப்பியவர்கள் செல்லாக்காசுகளாகிவிட்டார்கள்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகும் மத பாரபட்சத்தை அண்டவிட்டதில்லை. பெரும்பான்மையினர் என்பதற்காக ஹிந்துக்களை ஒதுக்கி தள்ளவேண்டும் என்றோ, சிறுபான்மையினர் என்பதற்காக முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும் என்றோ எம்ஜிஆர் ஒருபோதும் நினைத்தது இல்லை.
வேலூர் கோட்டையில் உள்ள ஆலயத்தில் மூலவர் இல்லாமல் இருந்தது மிகப் பெரிய குறையாக விளங்கியது. எப்படியாவது ஆலயத்தில் மூலவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்பதில் ஹிந்து அமைப்புகள் முனைப்பு காட்டின. இரவோடு இரவாக ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மூலவரை ஹிந்து அமைப்பைச் சேர்ந்த காரியகர்த்தர்கள் ஸ்தாபித்தனர். இதை ஹிந்து மத துவேஷிகள் ஊதிப் பெரிதாக்க முயன்றனர். ரத்தக்களரியைத் தூண்டிவிட்டனர். ஆனால் இப்பிரச்சினையில் ஹிந்துக்களின் செயல்பாடு நியாயமானதுதான் என்பதை நன்கு உணர்ந்த எம்.ஜி.ஆர்., பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவருக்கு குந்தகம் எதுவும் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது என காவல்துறையைப் பணித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ வெறியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. மாவட்டத்தின் பெயரையே கன்னிமேரி என்று மாற்றவேண்டும் என்று எல்லாம் அவர்கள் குரல் எழுப்பினார்கள். மண்டைக்காட்டில் கடலில் நீராடிய ஹிந்து பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். இதையடுத்து கலவரம் வெடித்தது. மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் எம்ஜிஆர் முன்னிலையில் ஹிந்துக்களின் உண்மையான நிலையை தாணுலிங்க நாடார் எடுத்துரைத்தார். கிறிஸ்தவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டனர். பொய்யான விவரங்களைத் தெரிவித்தனர் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் இதற்கு பிராயச்சித்தம் தேட முடிவு செய்தார்.
மத கலவரத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பதற்காக நீதிபதி வேணுகோபால் தலைமையில் ஆய்வு குழுவை எம்ஜிஆர் அமைத்தார். இக்குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலனை செய்தது. வெவ்வேறு மத வழிபாட்டு தலங்களுக்கிடையே குறிப்பிட்ட தொலைவு இடைவெளி இருக்கவேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஜெபக்கூடங்கள் என்று தொடங்கி அவற்றை சர்ச்சுகளாக மாற்றும் கலையில் வித்தகம் பெற்றிருந்தார்கள். நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரை இந்த மோசடியை நிர்மூலமாக்கியது.
கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கும் இஸ்லாமிய மசூதிகளுக்கும் அரசு பணத்தை எம்ஜிஆர் அநாவசியமாக வாரி வழங்கியதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஹிந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகமும் சம்புரோக்ஷணமும் தங்குதடையின்றி நடைபெற அவர் வழிவகை செய்தார். ஹிந்து ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே ஹிந்து ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்ளவேண்டியது அரசின் தலையாய கடமை.
சர்ச்சுகளையும் மசூதிகளையும் பாதுகாக்கவேண்டிய, பராமரிக்க வேண்டிய பணி அரசைச் சார்ந்தது அல்ல. ஏனெனில் இவற்றுக்கு கோடிக்கணக்கில் சொத்து உண்டு. இந்த வருவாயைக் கொண்டே சர்ச்சுகளையும் மசூதிகளையும் செம்மையான முறையில் நிர்வகிக்க முடியும்.
இன்றைய சூழ்நிலையில் மதப் பாரபட்சமின்மை சார்ந்த உறுதிப்பாடு இன்றியமையாதது. ஆனால் துரதிருஷ்டவசமாக மத பாரட்சம்தான் தலைதூக்கியுள்ளது. ‘ஹிந்துக்களை நிந்திப்பவர்கள் முற்போக்கு வாதிகள். ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் பிற்போக்கு வாதிகள்’ என்ற மாயை எம்ஜிஆரிடம் இல்லை. இப்போதைய அரசியல்வாதிகள் பலர் இந்த மாயையின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். எம்.ஜி.ஆர். போன்ற ஒரு முதல்வர் அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழர்களுக்கு வாய்க்கவில்லை.
எம்.ஜி.ஆர் என்ற ஹிந்து…
* பரங்கிமலை தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில், ‘தோமையார் மலை’ என்று அதைப் பெயர்மாற்றம் செய்துவிடும் சர்ச் விஷமத்தை முறியடித்தார்.
* ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற தனது ‘ஆனந்த விகடன்’ தொடரில் ஹிந்துக்கள் போற்றும் பசுவை பாதுகாப்பது முக்கியம் என வலியுறுத்தினார்.
* மண்டைக்காட்டில் கிறிஸ்தவ வெறியர்கள் பகவதி அம்மனின் பக்தைகள் கடலில் நீராடப் போனபோது மானபங்கம் செய்ததைக் கேள்விப் பட்டு கொதித்துப் போன எம்.ஜி.ஆர். தமிழனை தமிழ்நாட்டில் தடுப்பதா?” என்று கர்ஜித்தார்.
* சென்னை கதீட்ரல் சாலை பெயர் மாற்றப்பட்டபோது சர்ச் அமைப்புகள் பெரிய ரகளை நடத்தி தடுத்தன. அதை சுட்டிக்காட்டிய எம்.ஜி.ஆர். ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக கண்டனக் குரல் எழுப்ப வேண்டும், மனுக்கள் குவிய வேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வழிவகை சொல்லிக் கொடுத்தார்.
* வேலூர் ஆலயத்தில் ஜலகண்டேஸ்வரர் மீண்டும் எழுந்தருளியதற்கு காரணமானவை ஹிந்து அமைப்புகள். சட்டமன்றத்தில் ஹிந்து விரோத கூச்சல் எழுந்தது. மற்ற மதத்தினருக்கு அமைப்பு இருக்கலாமானால் ஹிந்துக்களுக்கு அமைப்பு இருக்கக் கூடாதா?” என்று முதல்வர் எம்.ஜி.ஆர் எழுப்பிய கேள்விக்குப் பின் அடங்கினார்கள்.