கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், முக கவசம் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களுக்கு, அமெரிக்காவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு, அமெரிக்காவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அதிக விலை அதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 43 ஆயிரத்து, 700 ஆக உயர்ந்தது.
அதே போல் ஒரே நாளில், 130 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 550 ஆக உயர்ந்தது. இந்நிலையில், முக கவசம், ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் மற்றும் பொருட்கள் பதுக்கலை தடுக்கும் வகையில், புதிய அரசாணையை, அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ளார். அதிக விலைக்கு விற்றால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது
.நியூயார்க் மாகாணத்தில், வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டில், வைரசால் பாதிக்கப்பட்ட, இருவரில், ஒருவர் நியூயார்க்கை சேர்ந்தவராக உள்ளார். நீட்டிப்பு? நேற்று முன்தினம் மட்டும், அங்கு, புதிதாக, 5,085 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அதையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 20 ஆயிரத்து, 875 ஆக உயர்ந்தது. அங்கு, மேலும், 43 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 157 ஆக உயர்ந்தது.நாடு முழுதும், வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில், முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கியுள்ளனர். இதனால், பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், 15 நாட்கள், சமூக விலகல் முடியும் பகுதிகளில், கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது குறித்து, அமெரிக்க அரசு ஆலோசித்து வருகிறது.