உலக நலனை நாடும் பாரதம்

இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் 95வது ஆண்டு மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு எடுக்க வேண்டிய 5 உறுதிமொழிகள் குறித்து குறிப்பிட்டார். தேசம் வல்லரசாக அந்த உறுதிமொழிகள் மிகவும் இன்றியமையாதவை. நமது நாடு வல்லரசாக விரும்புகிறது என்றால் அது எந்த நாட்டையாவது அடக்கியாள வேண்டும் என்று விரும்புகிறதா அல்லது எந்த நாட்டின் நிலத்தையாவது அபகரிக்க விரும்புகிறதா என்றால் இல்லவே இல்லை. பாரதம் உலக நலனுக்காக உழைப்பதற்காகவே வல்லரசாக விரும்புகிறது. 1949ல் பாரதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு. ஆனால், அதன் பிறகுதான் அந்நாடு பொருளாதார ரீதியில் வேகமாக முன்னேறியது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலில் 1980 வரை பாரதம் கிடையாது. 2014ல்தான் அது 9வது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தைப் பிடித்தது. தற்போது நமது நாடு உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. நமது பொருளாதாரம் தற்போது சுமார் 3.5 டிரில்லியன் டாலருக்கு நெருக்கமாக வளர்ந்துள்ளது. அதேசமயம், நமது ராணுவம் தற்போது மிகப் பெரிய வலிமையுடன் இருக்கிறது. கல்வான், தவாங் என அனைத்துப் பகுதிகளிலும் நமது ராணுவ வீரர்கள் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தியுள்ளனர்” என கூறினார்.