உத்தவ் தாக்கரேவுக்கு அட்வைஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ‘மகா விகாஸ் அகாடி’ என்ற கூட்டணியின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி மக்களின் கடுமையான வெறுப்பை சம்பாதித்துக்கொண்டு பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவந்த நிலையில், கடந்த ஆண்டு இந்தக் கூட்டணி ஆட்சிக்கு எதிராக சிவசேனாவின் 35க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கினர். சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. பா.ஜ.க ஆதரவுடன் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக தேர்வானார். அதில் இருந்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என சொந்தம் கொண்டாடினர். இது தொடர்பான புகார் மனுக்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் விசாரனையில் இருந்தன. இந்த மனுக்களை விசாரித்து வந்த தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா கட்சி என்று அங்கீகரித்து உத்தரவிட்டது. மேலும் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான வில் அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வரவேற்றார். பால் தாக்கரேவின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி இது என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவினை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி உச்ச நீதிமன்றத்தினை நாடப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த சூழலில், இது குறித்து கருத்துத் தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், “இது தேர்தல் ஆணையத்தின் முடிவு. ஒரு முடிவு வழங்கப்பட்டவுடன் அது குறித்து விவாதம் நடத்த முடியாது. இந்த முடிவையும் புதிய சின்னத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இழந்த பழைய சின்னத்தால் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடாது. மக்கள் புதிய சின்னத்தினை ஏற்றுக்கொள்வார்கள். இந்த விவாகரம் அடுத்த 15 முதல் 30 நாட்களுக்கு மட்டுமே மக்கள் மனதில் இருக்கும். முன்பு இந்திரா காந்தியும் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.