நாடு முழுதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அறிமுகம் செய்வது தொடர்பான ஆலோசனையில் மத்திய சட்ட ஆணையம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களும், மத அமைப்புகளும் கருத்து தெரிவிக்கலாம் என, சட்ட ஆணையம் அறிவித்திருந்தது.
பொது சிவில் சட்டம் என்பது, மதத்தின் அடிப்படையில் இல்லாமல் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரேமாதிரியான பொதுவான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதே ஆகும். இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமலாக்கப் போவதாகவும், வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்த சட்ட வரைவு மசோ தாவை உருவாக்குவதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு குழுவை உத்தராகண்ட் மாநில அரசு கடந்த ஆண்டு அமைத்திருந்தது. இந்தக் குழு பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை உருவாக்கியுள்ளது. விரைவில் இந்த மசோதாவை தாக்கல் செய்யப் போவதாகவும் அந்தக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் கூறியதாவது: இந்த மசோதா, நாட்டில் மதச்சார்பற்ற கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும். நாட்டில் உள்ள பல்வேறு மதங்களின் திருமணச் சட்டங்கள், தனிநபர் சட்டங்கள், சட்ட ஆணைய அறிக்கைகள் மற்றும் கட்டுக்குள் வராத பிரச்சினைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பொது சிவில் சட்ட வரைவு மசோதா, தயாராகி உள்ளது. இது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இந்தக்குழுவுக்கு இதுவரை 2.3 லட்சம் பேரிடமிருந்து யோசனைகள் வந்துள்ளன. மேலும் 20 ஆயிரம்பேரை குழு உறுப்பினர்கள் சந்தித்து கருத்துகளைக் கேட்டுள்ளனர். அதைக் கொண்டே வரைவு மசோதா தயாராகியுள்ளது. இவ்வாறு நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் கூறினார்.