உத்தரகண்ட் கலவரம் திட்டமிட்ட சதி; அதிகாரிகள் சரமாரி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, ‘மதரசா’ எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வி குறித்து கற்றுத் தரப்படும் கட்டடத்தை இடித்த போது ஏற்பட்ட கலவரத்தில், ஆறு பேர்பலியாகினர்.

இதையடுத்து, சம்பவ இடத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, கலவரக்காரர்களை கண்டதும் துப்பாக்கியால் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, நீதிமன்ற உத்தரவுப்படி, சட்ட விரோதமாக கட்டப்பட்டு உள்ள கட்டடங்கள் முறையாக நோட்டீஸ் அளிக்கப்பட்ட பின் இடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதி யில் உள்ள பன்புல்புரா என்ற இடத்தில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மதரசா பள்ளி கட்டடத்தை இடிக்க, ஏற்கனவே பல முறை நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பன்புல்புரா பகுதியில் உள்ள மதரசா கட்டடத்தை இடிக்க, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். அப்போது, ஜே.சி.பி., வாகனம் வாயிலாக மதரசா கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், ஜே.சி.பி., வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. பன்புல்புரா போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த போலீசாரை தாக்கினர்; போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு எரித்தனர். இதில், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின.

இந்த வன்முறையில் ஆறு பேர் உயிரிழந்தனர்; 50 போலீசார் உட்பட நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதையடுத்து, ஹல்த்வானி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கலவரக்காரர்களை கண்டதும் சுட போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் முதலில் நான்கு பேர் பலியானதாக செய்தி வெளியாகிய நிலையில், தற்போது ஆறு பேர் பலியாகியுள்ளதாக நைனிடால் கலெக்டர் வந்தனா சிங் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, அவர் நேற்று கூறியதாவது:இந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டோர் கற்களை சேகரித்து வைத்திருந்து, மொட்டை மாடியில் இருந்து கற்களை வீசியுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தி, பன்புல்புரா போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

இந்த மதரசா கட்டடம் மட்டும் இடிக்கப்படவில்லை. சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களும் தான் இடிக்கப்படுகின்றன. இதில் சம்பந்தப்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹல்த்வானியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது; 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வதந்தி பரவுவதை தடுக்க, ஹல்த்வானியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே நேற்று இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஹல்த்வானியில் அமைதி மற்றும் சட்டம் – ஒழுங்கை உறுதி செய்யும்படி காவல் துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.