உ.பியில் மூளை அழற்சிக்கு முடிவுரை எழுதும் முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் மூளை அழற்சி நோய் நெடுங்காலமாக தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. ஜப்பானிஸ் `என்செபிலிட்டிஸ்’ என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடப்படும் மூளை அழற்சி அல்லது வீக்கம் பல்வேறு காரணங்களால் உக்கிரமடைந்து கொண்டே வந்தது.
இதனால் ஆண்டுக்காண்டு இறப்பு அதிகரித்தது. மக்களிடையே அதிருப்தி மேலோங்கியது. அப்போதைய ஆட்சியாளர்களைக் கண்டித்து எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. தர்ணா, பாத யாத்திரை, தீப்பந்த ஊர்வலம், கையெழுத்து இயக்கம் போன்றவற்றையெல்லாம் பாஜகவினர் முன்னெடுத்த போதிலும், சமாஜ்வாதி அரசு இதைப் பொருட்படுத்தவில்லை. பகுஜன் சமாஜ் ஆட்சியில் இருந்தபோதும், இதில் கவனத்தை செலுத்த முன்வரவில்லை.
2000 முதல் 2004 வரையிலான காலத்தில், மூளை அழற்சியால் பாதிக்கப்பட்டோர் 4,889. இதில் 1,056 பேர் இறந்து விட்டனர். மூளை அழற்சியால் பாதிக்கப்பட்டவர்களில், சுமார் 21 சதவீதத்தினர் பலியாகி உள்ளனர். 2005 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் நிலைமை மேலும் மோசமாகி விட்டது. மூளை அழற்சியால் பாதிக்கப்பட்ட 17,010 பேரில், 3,653 பேர் இறந்து விட்டனர்.
2010 முதல் 2016 வரையிலான கால கட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறத்தாழ கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சமமாகவே இருந்தது. ஆனால் உயிரிழப்பு சற்று குறைந்து 2,866 ஆக ஆனது. 2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மூளை அழற்சியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,800. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,100. மூளை அழற்சி நோய் உருவாவதற்கும், பரவுவதற்கும் பல்வேறு சுகாதாரக் கேடுகளே காரணம். தூய்மையற்ற குடிநீர், அசுத்தமான வாழ்விடங்கள், தண்ணீர் பல வாரங்களாக தேங்கி இருத்தல், மனிதர்களின் குடியிருப்பு அருகே பன்றிகளை வளர்த்தல், கொசுக்களை விரட்டியடிக்கவோ, கட்டுப்படுத்தவோ முனைப்பார்ந்த நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் மூளை அழற்சி தொடர்ந்து கொண்டே இருந்தது. சுமார் 40 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் லட்சக்கணக்கானோர் உடல் ரீதியாக ஊனமடைந்துள்ளனர்.
பாஜக எதிர்வரிசையில் இருந்தபோது கோரக்பூர் எம்.பி.யாக செயல்பட்ட இப்போதைய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மூளை அழற்சியை முடிவுக்கு கொண்டு வர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதாது என்று பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார். குறிப்பாக சுகாதார மையங்களில் இரவு நேரத்தில் மருத்துவர் எவரும் பணியில் இருப்பதில்லை. மருத்துவ வசதிகளும் போதுமான அளவில் இல்லை. லக்னோவுக்கோ அல்லது வாரணாசிக்கோ நோயாளிகளைக் கொண்டு செல்ல அதிக நேரம் ஆகும். இதற்குள் சம்பந்தப்பட்ட நோயாளி இறந்து போக வாய்ப்புள்ளது. கடந்த கால அரசுகள், இந்த பிரச்சினைகளை சரியான முறையில் கையாளவில்லை.
யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வரானதையடுத்து, சுகாதார வசதி மேம்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மை பாரத திட்டம், ஜல்ஜீவன் திட்டம் போன்றவற்றை கொண்டு வந்துள்ளது. இதை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து தொய்வின்றி அமலாக்கி வருகிறார். இதற்கு அண்மை காலத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரமே சான்றாக உள்ளது. 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், மூளை அழற்சியால் பாதிக்கப்பட்டோர் 5,450 பேர். உயிரிழந்தோர் 150 பேர் மட்டுமே. அதாவது பாதிக்கப்பட்டோரில் மூன்று சதவீதத்தினர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். பல மாவட்டங்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள் உரிய நடவடிக்கைளை எடுத்திருந்தால் லட்சக்கணக்கான உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும். ஆனால் அதை கடந்த கால அரசுகள் செய்யாததால், இதை ஒரு மருத்துவரீதியான சவாலாகவே எடுத்துக் கொண்டு யோகி ஆதித்யநாத் சாதித்துக் காட்டியுள்ளார்.
மூளை அழற்சியால் குழந்தைகளே பெருமளவில் பாதிப்புக்கு ஆளாவது வழக்கம். ஏனெனில் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மூளை அழற்சியால் உயிரிழந்ததை பொதுநல நாட்டம் கொண்ட எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. இது யோகி ஆதித்யநாத்தின் உள்ளத்தில் அறக்கனலை கொழுந்து விட்டு எரிய வைத்தது. இதுதான் உத்தரப்பிரதேசத்தில் மூளை அழற்சி நோய்க்கு முடிவுரை எழுதியே தீர வேண்டும் என்ற முனைப்பை அவருக்கு ஏற்படுத்தியது. மூளை அழற்சி நோய் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டும்தான் அதிகமாக இருந்தது. மற்ற பிராந்தியங்களில் இதன் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. இந்தப் பகுதி பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்ததும் ஒரு காரணமாகும். பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் கிழக்கு உத்திரப்பிரதேசத்தை வலுப்படுத்தி உள்ளதன் வாயிலாக, மூளை அழற்சி போன்ற நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாதனையாளராக யோகி ஆதித்யநாத் மிளிர்கிறார்.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி