தமிழகத்தில் சைவ, வைணவ ஆலயங்களில் அதிகாலை நடைதிறந்து, சுப்ரபாத சேவையின் போது பள்ளியெழுச்சி பாடும் வழக்கம் உள்ளது. மனிதர்களை போன்றே இறைவன் உறையும் இடம் ஆலயம் என்ற கருத்தில் இரவில் தூங்கி அதிகாலை எழுந்து தனது பணிகளை தொடங்குகிறான் என்ற கோணத்தில் இறைவனை துயில் எழச் செய்யும் ஒரு பாடல். இது பக்தி நிலையில் தன்னை மறந்து இறை சேவையில் ஈடுபடும் ஒரு சாதாரண பக்தன் தனது இறைவனை தட்டி எழுப்புவது போன்று பாடப்படுகிறது. சைவ ஆலயங்களில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே என நிறைவடயும் இப்பாடல் திருப்பள்ளியெழுச்சி எனவும் வைணவ ஆலயங்களில் கௌசல்யா சுப்ரஜா எனத் தொடங்கும் சமஸ்கிருதப் பாடலும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பான கோசலையின் திருமகனே ஸ்ரீராமா என்ற பாடலும் திருவேங்கட சுப்ரபாதமாக பாடப்படுகிறது. தேசபக்தியில் திளைத்து பாரத மாதாவின் பக்தனாகவே விளங்கிய பாரதி கூட பாரத அன்னைக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கிறான். அந்நிய அடிமைத்தளையில் மூழ்கியிருந்த பாரத மக்களை துயிலெழச் செய்யும் விதமாக பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் எனத் தொடங்கி பள்ளி எழுந்தருளாயே என முடியும் 10 பாடல்களை பாரதமாதா பள்ளியெழுச்சியாகப் பாடியுள்ளார். இப்பாடலை ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் தினசரி பாடி வருகிறார்கள்.