பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையிலும் நாட்டு மக்களிடையே தேசபக்தியை தூண்டும் விதமாகவும் ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றும் ‘ஹர் கர் ஜண்டா’ என்ற பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றி, தேசிய கீதத்தை குடும்பத்துடன் பாடுமாறு மத்திய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொடி ஏற்றப்படும் என்ற எண்ணம் மக்களின் இதயங்களில் தேசபக்தியின் உணர்வைத் தூண்டும், தேசியக் கொடி பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நமது அர்ப்பணிப்பின் உருவகமாகவும் மாறும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனையொட்டி மத்திய கலாச்சார அமைச்சகம் நாடு முழுவதும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் இரண்டாயிரம் நினைவுச்சின்னங்களில் மூவர்ணக் கொடியை ஏற்ற உள்ளது.