தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், தி.மு.க ஆட்சியில் பெண்கள் அனைவரும் ‘ஓசி’யில் பயணம் செய்வதாக கூறினார். இதற்கு பா.ஜ.க, அ.தி.முக உள்ளிட்ட கட்சியினர், பல மூத்த தலைவர்கள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவை மாவட்டம் மதுக்கரையில் இருந்து பாலக்கரை நோக்கி சென்ற, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் அரசு பேருந்தில் ஏறிய மூதாட்டி ஒருவர், நடத்துநர் கொடுத்த இலவச டிக்கெட்டை வாங்க மறுத்துவிட்டார். நடத்துநரிடம், காசு வாங்காவிட்டால் டிக்கெட் வாங்க மாட்டேன் என திரும்ப திரும்பக் கூறினார். தமிழகமே இலவசமாக பயணம் செய்தாலும் நான் காசு கொடுக்காமல் பயணிக்க மாட்டேன் என உறுதியாக கூறினார். காசை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்குமாறு கூறினார். பின்னர், பணத்தை கொடுத்து டிக்கெட் பெற்றதுடன், மீதி சில்லரையையும் வாங்கினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.