இலக்கில் திடமாக உள்ள இணையற்ற பிரதமர் மோடி

தி ரெக்ரூட் என்ற ஹாலிவுட் திரைப்படம் 2003ம் ஆண்டு வெளியானது.  இது  சர்வதேச  அளவில்  கவனத்தை        ஈர்த்தது. இந்த திரைப்படத்தில் அல் பசினோ என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் சிஐஏ ரெக்ரூட் ஒருவரிடம் “நீ பார்க்கலாம் அது உண்மையாகத் தோன்றலாம், ஆனால் அது உண்மையாக இல்லாமலும் இருக்கலாம். நீ கேட்கலாம். அது உண்மையாக இருக்கலாம், உண்மைக்குப் புறம்பானதாகவும் இருக்கலாம்’’ என்று கூறிய வார்த்தைகள் ராஜதந்திரத்தைப் பிரதிபலிக்கிறது.

ராஜதந்திரி தனது இலக்கிலும், தடத்திலும் உறுதியாக, தெளிவாக, தடுமாறாமல் இருக்க வேண்டும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைசிறந்த உதாரணமாக விளங்குகிறார் என்றால் மிகையன்று. அவர் அண்மையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை சீற்றம் கொள்ள வைப்பதற்காக அமெரிக்கத் தரப்பு சீண்டிப் பார்த்தது. ஆனால் பிரதமர் மோடி அமைதியாக இயங்கினார். நிதானமாக செயல்பட்டார். சிறு பிறழ்வு கூட அவரது செயல்பாட்டில் ஏற்படவில்லை.

வாஷிங்டனில் இரட்டை வேடம்

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கச் சுற்றுப் பயணத்தைத் தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றம் ஒன்று பாரத அரசுக்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுக்கும், ரா அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குனர் சமந்த் கோயலுக்கும் சம்மன் அனுப்பியது. இந்த சம்மன் எந்த அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். குர்பத்வந்த் சிங் கன்னு என்பவர் பாரதத்தில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். பாரதப் பிரதமர் அமெரிக்கா வரும் தருணத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு சாதாரண நீதிமன்றம் பாரத அரசுக்கும், அதன் உயர் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்புகிறது என்றால் அதற்கு அமெரிக்க அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது என்றுதானே அர்த்தம். இதனால் பிரதமர் மோடி கொதித்தெழுவார், கோபப்படுவார் என்று அமெரிக்கா போட்ட கணக்கு பொய்த்துப் போய் விட்டது. பிரதமர் மோடி இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர் எப்போதும் போல நிதானமாகவே இருந்தார்.

காலிஸ்தானிகளுடன் குலவல்

பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன் வெள்ளை மாளிகையில் காலிஸ்தான் ஆதரவாளர்களான சீக்கியர்கள் பலருக்கு விருந்து அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் அமெரிக்க அரசு பாதுகாப்பு அளிக்கும். டிரான்ஸ் நேஷனல் ரெப்ரஷன் எனப்படும் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு அமெரிக்கா எவ்வகையிலும் இடம் கொடுக்காது என சீக்கியர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்தனர். எல்லை தாண்டிய தாக்குதல் என்று இத்தருணத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் மோடியை சீண்டிப் பார்ப்பதற்காகவே அமெரிக்க தரப்பு இந்த அஸ்திரத்தை பிரயோகித்தது. ஆனால் பிரதமர் மோடி வெள்ளரிக்காயைப் போல குளுமையாகவே இருந்து விட்டதால் அவர் ஆத்திரப்படவும் இல்லை. ஆவேசப்படவும் இல்லை.

குவாட் உச்சி மாநாடு

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தில் குவாட் உச்சி மாநாட்டுக்கு முக்கியப் பங்குண்டு. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோருடன் பிரதமர் மோடி பயனுள்ள வகையில் கலந்துரையாடினார். குவாட் எந்த நாட்டுக்கோ, எந்த அமைப்புக்கோ எதிரானதல்ல. பரஸ்பர பாதுகாப்பையும், வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இதில் அங்கம் வகிக்கும் 4 நாடுகளின் தலைவர்களும் பிரகடனப்படுத்தியுள்ளனர். எந்த இடத்திலும் சீனா என்ற வார்த்தையையே இந்த நான்கு தலைவர்களும் உச்சரிக்கவே இல்லை. ஆனால் குவாட், சீனாவின் வல்லாதிக்கத்தை கட்டுப்படுத்துவதில் வலுவாக உள்ளது. இது மற்ற நாடுகளுக்குப் புரிகிறதோ, புரியவில்லையோ, சீனாவுக்கு நன்கு புரியும். அரசியலில் சில சமயங்களில் சிலவற்றை வெளிப்படையாகப் பேசலாம். மற்றவற்றை வெளிப்படையாக பேச முடியாது. சொல்லாமலேயே சிலவற்றை அழுத்தம் திருத்தமாக உணர்த்த முடியும். இந்த நிலைப்பாட்டைத்தான் குவாட் தலைவர்கள் எடுத்துள்ளனர்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

கொரோனா உலகத்தை உலுக்கிய போது பிரதமர் நரேந்திர மோடி பாரத நாட்டில் உள்ள மக்களுக்காக மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கும் தேவையான மருந்துகளை தாமதமில்லாமல் அனுப்பி வைத்தார். அகிலத்தின் மருத்துவராக பாரதம் உயர்ந்தோங்கியது. இப்போது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிரான சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த பாரதம் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி அரசு இதில் முனைப்பு காட்டுகிறது. இந்தோ – பசிபிக் நாடுகளுக்கு ௫௦ கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை உபகரணங்களையும், மருந்துகளையும் அனுப்ப முன் வந்துள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

துறைமுகங்களுக்கு முக்கியத்துவம்

கடல்சார் வர்த்தகத்தில் துறைமுகங்களுக்கு முக்கியப் பங்குண்டு. குவாட் நாடுகள் கடல்சார் வர்த்தகத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இதற்கான கட்டமைப்பை வலுப்படுத்த 4 நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. செமிகண்டெக்டர் சப்ளை உள்ளிட்டவற்றை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த இந்த 4 தேசங்களும் முயற்சி மேற்கொண்டுள்ளன. துறைமுகங்கள் மேம்பாடு, கடல்சார் வர்த்தக அபிவிருத்தி போன்றவற்றால் பாரதம் பொருளாதார ரீதியாக மேலும் செழுமையுறும்.

பிரதமர் மோடியின் இலக்கு

பாரதத்தின் பொருளாதாரம் 2027-–28ல் 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக (௪௨௦ லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்தோங்கும். இது 2034-–35ல் 10 டிரில்லியன் அமெரிக்க டாலராக எழுச்சியுறும். இந்தப் பொருளாதார இலக்கில் பிரதமர் மோடி முழு கவனத்தையும் குவித்துள்ளார். டிஜிட்டல் ரெவில்யூஷன் இதற்கு பெரிதும் உறுதுணையாக உள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோருடன் பிரதமர் மோடி இதுதொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது. செமிகண்டெக்டர் உற்பத்தி, மேம்பாட்டில் பாரதம் முழுவீச்சில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. எதிர்கால பொருளாதார எழுச்சிக்கு இது உந்து விசையளிக்கும் என்பது திண்ணம்.

பாரதப் பாதுகாப்பு

இந்த அம்சத்தில் பாரதம் உறுதியாக உள்ளது. 31 பிரிடேட்டர் எம்.க்யூ.9பி ட்ரோன்களைக் கொள்முதல் செய்வது குறித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவை மட்டுமே பாரதம் நம்பியிருக்கவில்லை. பிரான்சுடனும் பாரதம் தொடர்பு வைத்துள்ளது. ஸ்கார்பியன் வகைப்பாட்டைச் சேர்ந்த 3 நீர்மூழ்கி கப்பல்களை பிரான்சிடமிருந்து கொள்முதல் செய்ய பாரதம் முன் வந்துள்ளது. மேலும் 26 ரபேல் எம் பைட்டர் ஜெட்களை கொள்முதல் செய்யவும் பாரதம் முடிவு செய்துள்ளது. ரஷ்யாவிலிருந்தும் அதிநவீன ராணுவத் தளவாடங்களை பாரதம் கொள்முதல் செய்து வருகிறது.

வெளிநாடு வாழ் பாரதியர்கள்

பாரதத்தின் நல்லெண்ணத் தூதுவர்களாக வெளிநாடு வாழ் பாரதியர்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் வெளிநாடு வாழ் பாரதியர்கள் அரசியல் ரீதியாக இறுக்கமான நிலைப்பாட்டை எடுப்பது தேவையற்றது என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். எதிரிகள் விரித்த வலையில் பிரதமர் மோடி சிக்கவில்லை. வெளிநாடு வாழ் பாரதியர்களையும் சிக்க விடவில்லை. இது பிரதமர் மோடியின் அரசியல் முதிர்ச்சியை துல்லியமாக பிரதிபலிக்கிறது.

பரஸ்பர உறவு

பாரதத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பரஸ்பர உறவு வளர்ந்தோங்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தெளிவாக இருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் குறிப்பிட்ட சார்பு நிலையை எடுப்பதோ அல்லது பாரபட்சத்தை பின்பற்றுவதோ கூடாது என்பதையும் அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் திருத்தமாக உணர்த்தி விட்டார். ஐ.நா. சபை திருத்தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இது, அதன் முன்னோக்கிய நகர்வுகளுக்கு உறுதுணையாக அமைய வேண்டும். இல்லையெனில் ஐ.நா. சபை அர்த்தத்தை இழந்து விடும் என்பதையும் பாரதம் ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளது.

பாரதம் பங்களாதேஷ் அல்ல

பங்களாதேஷில் அன்னிய  சக்திகள் அனாவசியமாக தலையிட்டு குளறுபடியை உச்சப்படுத்தி அராஜகத்தை அரங்கேற்றி உள்ளன. பங்களாதேஷின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிட்டது. பாரதத்திலும் ஸ்திரத்தன்மையை குலைக்க வெளிநாட்டு சக்திகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் பாரதம், பங்களாதேஷ் அல்ல என்பதை பிரதமர் மோடி சர்வதேச அரங்கில் உறுதிபட நிலைநாட்டியுள்ளார்.

கட்டுரையாளர்: பாதுகாப்பு விவகாரங்கள் ஆய்வாளர்

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து
தமிழில் : அடவி வணங்கி