இல.கணேசன் காலமானார்

தஞ்சாவூரில், லட்சுமிராகவன் —- அலமேலு தம்பதிக்கு மகனாக, 1945 பிப்ரவரி 16ல்,  9 குழந்தைகள் கொண்ட எளிய குடும்பத்தில், இல. கணேசன் பிறந்தார். அண்ணன்கள் இல.சேஷன் மற்றும் இல.நாராயணன் இருவரும் ஷாகா சென்றார்கள். 1948ம் ஆண்டு, சங்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் ஆர்.எஸ்.எஸ் ப்ரச்சாரக்காக அவரது அண்ணன் இல. நாராயணன் இருந்தார். அவர் மூலமாக சங்கத்திற்கு அறிமுகமாகி, சங்க ஸ்வயம்சேவக்கானார்.

தனது சிறுவயதில்,  தஞ்சாவூர் அரண்மனையில் நடைபெற்ற ஷாகாவிற்கு சென்றவர். 1959ல் முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முடித்து, பின்னர் அரசுப் பணியில் சேர்ந்து, பட்டுக்கோட்டைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். 1968ல், சங்கத்தின் இரண்டாம் ஆண்டு, 1969ல் நாக்பூரில் மூன்றாம் ஆண்டு பயிற்சிகளை முடித்தார். சங்கத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, அக்கா ராஜேஸ்வரியின் திருமணம் முடிந்த பின்னர்,  அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு, 1970ல் சங்க ப்ரச்சாரக் ஆனார்.

முதலில் நாகர்கோவிலில் நகர் ப்ரச்சாரக்காக இருந்தார். சங்கத்தின் பல மூத்த அதிகாரிகளோடு நெருங்கிப் பழகி, தாய் அன்புக்கு கோபால்ஜி என்றால், தந்தை அன்புக்கு சூரிஜி என தனது வழிகாட்டிகளை அவ்வப்போது நினைவு கூர்வார். சங்கப் பாடல்களான, “பாரதத் தாயை பணிந்து வணங்கும்…”, “கண்ணா உன் சந்நிதியில்…” “கேசவனை நாம் வணங்குவோம்…” போன்ற நிறைய தேசபக்தி பாடல்களை எழுதி உள்ளார். எமர்ஜென்சியின் போது, தனது பெயரை ‘ராமானுஜம்’ என மாற்றிக் கொண்டு, தலைமறைவாக இருந்து, மாற்றுக் கொள்கை உள்ளவர்களையும் சந்தித்து, அநீதிக்கு எதிராக மக்களைத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டார். எமர்ஜென்சி நேரத்திலும், சங்க வேலை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. குருபூஜை விழா, மதுரையில் ஷிபிர் என அனைத்தும் சிறப்பாகவே நடந்தது. ஒரு பக்கம் சங்க வேலை, மறுபக்கம் எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டம் என இரண்டையும் நன்றாகவே கையாண்டார்.

பல மாவட்டங்களில் பொறுப்பாளராக இருந்து பின்னர், மண்டலப் பொறுப்பாளராகி, மாநில இணை அமைப்பாளராக (சஹ ப்ராந்த) ப்ரச்சாரக்காக இருந்த போது, 1991ல் பா.ஜ.க.வுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  தமிழக பாஜக தலைவர், தேசிய அமைப்புச் செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர்,  அமைப்புச் செயலாளர் என பல முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.  தனது அயராத உழைப்பால் தமிழக பாஜகவின் முகமாக மாறினார். பட்டித்தொட்டி எங்கும், பாஜக கிளைகள் பரவ காரணமாக இருந்தார்.

தமிழின் மேல் மிகுந்த பற்று கொண்டதன் காரணமாக தனது கையெழுத்தை தமிழிலேயே போடுவார், எழுத்தார்வம் மிக்கவர். விஜயபாரதத்திற்கு நிறைய கட்டுரைகளை எழுதி உள்ளார். ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்துள்ளார். ‘பொற்றாமரை’ என்னும் இலக்கிய அமைப்பையும் தொடர்ந்து நடத்தி வந்தார்.

பாஜகவின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி,  முரளி மனோகர் ஜோஷி, மோடி என பலருடன் நெருங்கிப் பழகியவர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, ராஜ்யசபா உறுப்பினரானார். பின்னர் 2021ல், மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேற்குவங்க மாநிலத்தில் சில மாதங்கள் கூடுதல் பொறுப்பாக மாநில ஆளுநராக கவனித்து வந்தவர், 2023 முதல் நாகலாந்து மாநில ஆளுநராக செயல்பட்டு வந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர், தமிழக முதல்வர் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். அன்னாரது மறைவிற்கு விஜயபாரதத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.