சீடன் என்பவர் ஒரு குருவிடம் பல காலமாக இருந்தான். இறுதியில், குரு உனக்கு எல்லாம் ஏறக்குறைய நிறைவேறி விட்டது என்றார். குருவே ஏறக்குறைய என்றால் என்ன அர்த்தம் என கேட்டான் சீடன். அதற்கு குரு, நான் உன்னை இன்னொரு குருவிடம் அனுப்புகிறேன். அதுதான் உன் இறுதி பாடம் என்றார். பின்னர் ஒரு கடிதம் கொடுத்து அருகில் உள்ள நகரில் ஒருவரை சந்திக்கும்படி அனுப்பினார்.
மகிழ்ச்சியாக சென்ற சீடன், அந்த மனிதரை சந்தித்தான். அவர் ஒரு உணவு விடுதி நடத்துபவர். கடிதத்தைப் பார்த்த விடுதிகாரர், உங்கள் குரு ஏன் என்னிடம் அனுப்பி வைத்தார் என்று எனக்கு தெரியாது. நான் அந்த அளவுக்கு படித்தவன் இல்லை. இருந்தாலும் நீங்கள் இங்கு தங்கி தொடர்ந்து என்னை கவனியுங்கள் என்றார். சீடனும் அவரின் செயல்களை கவனித்தான்.
அவர் காலையில் விடுதியைத் திறப்பதும் வியாபாரம் செய்வதும் பிறகு இரவு பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு விடுதியை மூடுவதும்,மீண்டும் காலையில் எழுந்து விடுதியை திறந்து பாத்திரங்களை கழுவுவதையும் அவர் தொடர்ந்து மூன்று நாட்களாக கவனித்து வந்தான். சீடனுக்கு சலித்துவிட்டது. இதில் கவனிப்பதற்கு ஏதும் இல்லை நான் போகிறேன் என்றார். விடுதிகாரர் சிரித்துவிட்டு அனுப்பி வைத்தார்.
சீடன் மீண்டும் தன் குருவிடம் வந்தான். கோபமாக, என்னை ஏன் அங்கு அனுப்பினீர்கள். அந்த விடுதிகாரனிடம் எனக்கு கற்பிக்க எதுவும் இல்லை என்றார். குரு, ‘அங்கு நீ அடிக்கடி கவனித்த ஏதாவது ஒன்றை சொல்’ என்றார். சீடன், அந்த மனிதர் தினமும் மாலையில் பாத்திரங்களை கழுவி வைக்கிறார். மீண்டும் காலையில் அதே பாத்திரங்களை கழுவுகிறார் என்றான்.
குரு சொன்னார் இதுவே என் போதனையும். உன்னை நான் அனுப்பி வைத்ததே இதைக் கவனிக்கதான். பாத்திரங்களை இரவில் அவர் கழுவி வைத்த அதே பாத்திரங்களையே காலையிலும் திரும்ப கழுவினார். இதன் பொருள், இரவில், அதில் ஒன்றுமே இல்லாதபோது கூட அவை அழுக்காகியிருக்கின்றன. தூசு படிகிறது. அதேபோல, நீ தூயவனாக, அப்பழுக்கு இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கணமும் உன்னை தொடர்ச்சியாக தூய்மைப் படுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. எதையுமே செய்யாமல் இருந்தாலும் கால ஓட்டத்தில் நீ களங்கம் அடைகிறாய். நான் தூய்மையானவன் என்பது கூட ஒரு ஆணவம் தான். எனவே ஒவ்வொரு கணமும் புதியதாய் இரு, புதுப்பித்துக் கொண்டே இரு என்றார்.