இராமநாதபுரத்தில் ஹிந்துப் புனரெழுச்சி மகாநாடு!

1981 ஜூலை 27 ஆம் நாள் தமிழகத்தின் வரலாற்றிலேயே ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். ஹிந்து சமுதாயத்தில் மீண்டும் ஒரு புனரெழுச்சி ஏற்படுத்துவதற்காக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு, இந்து முன்னணி மற்றும் ஆரிய சமாஜம் போன்ற ஹிந்து இயக்கங்கள் ஒருங்கிணைந்து நடத்திய மாபெரும் மகாநாட்டில் ஹிந்து சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த சமுதாய தலைவர்களும் சாதாரண மக்களும் ஒன்று திரண்டு ஹிந்து சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரிவினைகள் குறிப்பாக, ஜாதி பிரிவினைகள் மற்றும் தீண்டாமை போன்றவற்றை அறவே ஒழிக்கவும் தாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதை வலியுறுத்தவும் சபதம் ஏற்ற நாள்.

ராமநாதபுரம் மீண்டும் வரலாறு படைக்கின்றது

சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க முன் நின்றது இராமநாதபுரம் 1897-ல் சுவாமிகள் குறிப்பிட்டார். ‘’நீண்ட இரவு கழிந்து கொண்டிருக்கிறது. கசப்பான துன்பங்கள் ஓடுகின்றன. இறந்த உடல் போல் தோன்றியது இன்று விழித்தெழுகிறது.

நமது தாயகம் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்து எழுகிறாள். இனி அவளை யாரும் தடுக்க முடியாது. அவள் மீண்டும் உறங்கப்போவதில்லை. வெளி சக்திகள் ஏதும் இனி அவளை பின்னால் தள்ளி நிறுத்த முடியாது. விஸ்வரூபம் பூண்ட அவள் எழுந்து கால்களில் நிற்கின்றாள்.’’

அன்று அவர் கூறியது இன்று மீண்டும் நினைவுறுத்தியது ராமநாதபுரம் மகாநாடு. மீனாட்சிபுரத்திலும் இராமநாதபுரத்தின் மற்ற பகுதி பகுதிகளிலும் இஸ்லாமிய சக்திகள் பண பலத்தால் ஏழை எளிய ஹரிஜனங்களைக் கவர்ந்து சென்றதால் விழிப்புற்ற ஹிந்து சமுதாயம் ராமநாதபுரம் இதுவரை கண்டிராத மகாநாட்டைக் கூட்டியது. இம் மகாநாட்டில் சொற்பொழிவாற்றிய சமய தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அனைவரும் ஹிந்து சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களும் சமம் என்கிற கருத்தையும் ஹிந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர்.

காலையிலும், மாலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஏராளமான ஹிந்து மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து திரளாக கலந்து கொண்டனர். ஹிந்து ஒருமைப்பாட்டை வலியுறுத்த கூட்டப்பட்ட இரண்டாவது மகாநாடாகும் இது. இதற்கு முந்தைய மகாநாடு ஜூலை 17ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற்றது நினைவிருக்கும்.

ஆரிய சமாஜத்தின் பிரதிநிதிகள் நடத்திய வேத வழிபாட்டுடன் ஆரம்பமாகிய இராமநாதபுர மகாநாட்டிற்கு சிருங்கேரி மற்றும் காஞ்சி சங்கராச்சாரியார்கள் மற்றும் மதுரையைச் சார்ந்த ஸ்ரீ சித்த நரஹரி சுவாமிகள் ஆசிகளும் நன்கொடைகளும் அனுப்பி வைத்தனர்.

மகாநாட்டு தீர்மானங்கள்

ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்த ஏழை எளிய மக்களை விலைக்கு வாங்கி கூட்டம் கூட்டமாக இஸ்லாமியர்கள் மதமாற்றி வருவதால் ஹிந்து சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் எழுந்துள்ள பேராபத்துகளை சுட்டிக்காட்டுகின்ற விதத்திலும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்கின்ற முறையிலும் பல்வேறு தீர்மானங்கள் இம்மகாநாட்டில் தீட்டப்பெற்றன. சட்ட பூர்வமாக தேவைப்பட்டால் அரசியல் சட்டத்தை திருத்தியும் இந்த மதமாற்றங்களை முழுமையாக தடை செய்ய இம்மகாநாடு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

பல்வேறு சமய ஸ்தாபனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்று வருகின்ற நிதி உதவி குறித்தும் அந்த நிதி எந்த விதத்தில் செலவிடப்படுகிறது என்பது குறித்தும் ஆராய வேண்டும் என்று அரசிடம் கோரப்பட்டுள்ளது.  கல்வி மற்றும் சமூக சேவை போன்ற திட்டங்களுக்கு என்கின்ற போர்வையில் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதியுதவி ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களை பிற மதங்களுக்கு மதமாற்றுவதற்காக பயன்படுத்தப்படுவதை ஒரு தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. ஹிந்து   சமுதாயத்திலுள்ள பிளவுகளை பயன்படுத்திக் கொண்டு வெளி சக்திகள் ஒட்டுமொத்த மதமாற்றம் நடத்துவதை தடுக்க ஹிந்து சமுதாயம் விழித்தெழ வேண்டும் என்றும் மகாநாடு கோரியுள்ளது.

ஹிந்து மக்களிடையே கலவரங்கள் ஏற்பட்டால் அதை தடுப்பதற்கும் சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படுவதற்கும், தர்மபுரம், குன்னக்குடி மற்றும் மதுரை ஆதீனங்கள், ஆர்.எஸ்.எஸ் விஸ்வ ஹிந்து பரிஷத், ஆரிய சமாஜ், இந்து முன்னணி மற்றும் ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு போன்றவைகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு உயர்மட்ட குழு ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஹிந்து சமயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல்வேறு ஹிந்து மடங்களின் தலைவர்கள் கொண்ட ஒரு மைய அமைப்பு அமைக்க மகாநாடு  கோரியுள்ளது.

ஹிந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சலுகைகள் மதமாறியவர்களுக்கு அளிக்கக்கூடாது என்றும் தாழ்த்தப்பட்ட ஹிந்து மக்களின் கோரிக்கையை அரசாங்கமும் போலீஸ் அதிகாரிகளும் முறையாக பரிசீலித்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் இம்மக்கள் மதம் மாறுவதை தடுக்கலாம் என்றும் மகாநாடு கருத்து தெரிவித்துள்ளது.

முற்பகல் சொற்பொழிவுகள்

ராமநாதபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ ஆத்மானாத சுவாமிகள் மகாநாட்டிற்கு வந்திருந்து அனைத்து சமயப் பெரியவர்களையும் பொதுமக்களையும் வரவேற்றார். மகாநாட்டின் காலை நிகழ்ச்சிகளுக்கு மதுரை ஆதீனம் சுவாமிகள் மாலை நிகழ்ச்சிகளுக்கு தர்மபுரி ஆதீனமும் தலைமை தாங்கினர்.

மதுரை ஆதினம் தவத்திரு ஞான சம்பந்த தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் பேசுகையில் ஹிந்து மக்களிடையே விழிப்பு ஏற்படுவதற்காக இறைவனே இன்றைய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறான் என்றார். இன்று நடைபெற்று வருகின்ற மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் தென்னகத்திலும் ஒரு தனி நாடு கோரிக்கை தலைதூக்கும் என்றும் அரசு இந்த மதமாற்றங்களை தடுக்க முன்வராவிடில் சமய தலைவர்கள் தங்களது மதத்தை காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் எதிராஜ மடத்தின் ஜீயர் சுவாமிகள் பேசுகையில் ஹிந்து சமுதாயத்தில் தீண்டாமைக்கு என்றுமே இடம் அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். வைணவ சம்பிரதாயத்தில் 12 ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார் பிறப்பால் தாழ்ந்த குடியைச் சார்ந்தவரேனும்   பெருமாளிடத்தில் கொண்ட பக்தியின் காரணமாக பெரும் ஞானியாகவே போற்றப்பட்டார் என்றும் அவர் கூறினார். பிற மதத்தவர்களுக்கும் ஹிந்து மதத்தின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று அவர் வைணவ மடங்களில் இன்றும் பீபி நாச்சியார் வழிபடப்படுவதை சுட்டிக்காட்டினார். எந்த ஒரு முஸ்லிமையும் ஹிந்துவாக ஏற்றுக் கொள்வதற்கும், தன்னுடைய ஆலயத்திலேயே தொண்டு புரிய அனுமதிப்பதற்கும் தான் தயாராக உள்ளதாக ஜீயர் சுவாமிகள் அறிவித்ததை கூட்டம் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றது.

முன்னாள் ராமநாதபுரம் ராஜாவின் துணைவியார் திருமதி இந்திராணி தேவி ஹிந்து சமுதாயத்தில் உள்ள ஜாதி பிரிவினைகளை கலைந்து ஒருமைப்பாடு ஏற்படுத்த விரைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். பெரியகுளம் ஜமீன்தாரிணி திருமதி வசுந்தரா ராமபத்திரன் தனது சொற்பொழிவில், இன்று எழுந்துள்ள உற்சாகத்தை குன்றாமல் வளர்த்து இன்று மதம் மாறியவர்களை  மீண்டும் தாய் மதத்திற்கு கொண்டு வரும் வரை அனைவரும் தளராது ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

− ஆகஸ்டு 7, 1981
விஜயபாரதம் வார இதழிலிருந்து

– தொடரும்.