இயற்கை அம்மனின் பக்தர்கள் இவர்கள் படுக சமூக ‘ ஹெத்தெ’ திருவிழா

உலகெங்கிலும் வியாபித்து இருக்கும் ஹிந்துக்கள் தங்களுக்கு பிடித்த கடவுளை பலவிதமான முறையில் வழிபட்டு வருகின்றனர். உருவ வழிபாடு முறையே பிரதானமாக இருந்தாலும், இயற்கையை வழிபடுவதும் நமது வழிபாட்டு முறையில் ஒரு அங்கமாக உள்ளது. அதன்படி நீலகிரியில் வாழும் படுக சகோதர – சகோதரிகள், அவர்கள் வணங்கும் “ஹெத்தெ”வுக்கு விமரிசையாக விழா கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களைப் பற்றியும் அவர்கள் வழிபடும் முறையை பற்றியும் இந்த வாரம் காண்போம்…

நீலகிரிவாழ் படுகர் சமூக சகோதர சகோதரிகள் ஹிந்து மதத்தின் அங்கமாக விளங்கும் இயற்கை / முன்னோர் வழிபாடு செய்பவர்கள். இவர்களின் தாய் தெய்வம் ‘ஹெத்தெ’. இவர்களின் தாய்மொழியான ‘படுகு’ மொழியில் ‘ஹெத்தெ’ என்பதற்கு “முன்னோர்” என்று பொருள். உருவம், கோயில் வழிபாடு இல்லாத படுகர்கள், இறந்தவரின் ஆன்மா தம்மைக் காப்பதாக நம்புகின்றனர்.

விருந்தோம்பலில் சிறந்த இவர்கள் குறித்துச் சங்க நூலான ‘மலைபடுகடாம்’ பேசுகிறது. இவர்களின் அலாதியான உடை, பாரம்பரியம், மொழி ஆகியவை இவர்களுக்கு உரிய முத்திரையாக திகழ்கிறது. ஆதியிலிருந்து எருமை மந்தைப் பேணலையும், மலைப்புல வேளாண்மையையும், தமது வாழ்வியலாகக் கொண்டிருக்கும் இவர்களின் பெரும்பாலான தொல்சடங்குகள் எருமை மந்தைகளை ஒட்டியவையே.

படுகர்களின் மாதக் கணக்கில் இறுதி மாதத்தின் பெயர் ‘எம்மாட்டி’. எருமையை ‘எம்மெ’ என்றழைக்கும் இவர்கள், தமது மந்தைகளை இடமாற்றும் மரபினை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது இம்மாதத்தின் பெயர். நீலகிரியில் கடும் பனிப்பொழிவும், அடர் குளிரிரும் நிறைந்த இந்தக் காலத்தே, தமது மந்தைகளைப் பேண, வெப்பம் மிகுந்த, நிலகிரி மலையை ஒட்டிய பகுதிக்கு ஓட்டிச்செல்லும் மரபுப் பயணம் இது. இந்தப் பயணத்தின் அம்சமாக ‘ஹெத்தெ’ திருவிழா அமைகிறது.

எருமை மந்தைப் பேணலிற்கான குறியீடுகளைக் கொண்டு நினைவுகூரப்படும் ‘ஹெத்தெ’ தெய்வம் சார்ந்த தொன்மக் கதைகள் முழுவதும் எருமைகளோடு தொடர்புடையவை. இவர்களின் வாழிடம் வழித்தடம் ஆகியவற்றுக்கு ஏற்ப விளங்கும் ‘ஹெத்தெ’ தெய்வங்கள், தமது ஆநிரைகளைக் காப்பதற்காக வணங்கப்பட்டவை.

விழாவாக ஏறத்தாழ 1,300 ஆண்டுகளாக நிகழ்த்தப்படும் இந்தச் சடங்கின் தொடக்கம் கணிக்க இயலாதது. படுகர்களுக்கு, அவர்தம் முன்னோர்களின் வீடுகளே வழிபாட்டிடங்கள். அங்கேயே தமது சமூகம் சார்ந்த சடங்குகளை நிகழ்த்துகின்றனர்.

அவ்வகையில், ‘ஹெத்தெ’ சடங்கில் தமது வீட்டிலிருந்து கொண்டுவரும் ‘காணிக்கெ’ எனும் நாணயங்களை, தமது ‘சீலெ’, ‘மண்டரெ’, ‘துண்டு’, ‘முண்டு’, ‘பட்டு’ எனும் கலாச்சார உடையை அணிந்து வந்து, ‘ஹெத்தெ’ மூதாதையருக்கான வழிபாட்டிடமான ‘ஹெத்தெ மனெயில்’ கட்டுகின்றனர்.

உலகில் எங்கு இருந்தாலும், இந்தச் சடங்கின்போது ‘ஹெத்தெ’ மனெக்கு வந்து ‘காணிக்கை’ கட்டுவது இவர்களது மரபு. வெள்ளை உடையோடு, கால்களில் செருப்பு அணியாமல், தூய மனம், உடல் சுத்தம் ஏற்று அங்கு கூடுவார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்குகிறார்கள்.


லட்சக்கணக்கான அன்பர்கள் கூடினாலும், துளியும் அசாம்பாவிதம் நடக்காத சக்திவாய்ந்த திருவிழா இது. மர வழிபாடு, முன்னோர் வழிபாடு, இயற்கை வழிபாடு, அருளாடுதல் உள்ளிட்ட பல்வேறு தொல்கூறுகளைக் கொண்ட படுகர்களின் இந்த தொல்சடங்கு நீலகிரியின் பெருமைகளுள் ஒன்று. மார்கழி மாத பௌர்ணமி முடிந்து வரும் முதல் திங்கட்கிழமையில் இந்த விழா நடைபெறும். அதன்படி, 2026 ஜனவரி 5 அன்று இவ்விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

படுக சமூகம்

நீலகிரி மாவட்டத்தின் 7 லட்சம் மக்கள் தொகையில் 2.5 லட்சம் பேர் படுக மொழி பேசும் மக்கள். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர், பந்தலூர் மற்றும் நீலகிரி முழுவதும் பரவலாக வாழ்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இவர்களை தென்னிந்தியாவின் முக்கியமான பழங்குடியினர் என ஆவணப்படுத்தி உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1812 முதல் 1941 வரை படுகர்களை “ஆதிவாசி” என்றே குறிப்பிட்டு உள்ளனர். தற்போது பிற்படுத்தப்பட்டோர் (அதாவது ஓ.பி.சி) பட்டியலில் இவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீண்டும் தங்களை எஸ்.டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என போராடி வருகிறார்கள். 1989 ல் இருந்து, மே 15 ஆம் தேதியை “படுக தினமாக” இந்த சகோதரர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

படுகர்களின் பல தெய்வ வழிபாடு

டிசம்பர், ஜனவரி மாதங்களில் வருடம் தோறும் ஹெத்தெ, ஹப்பா திருவிழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவார்கள். திருவிழாக்கள் “ஹப்பா” என அழைக்கப்படும். அவர்கள் சிவபெருமான், கிருஷ்ணர், விநாயகர், முருகன், காளி, மாரி, முனியப்பா போன்ற தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வணங்குவர். இவர்களின் முக்கிய மூதாதையர் பண்டிகைகள் தெவ்வஹப்ப, சக்களாத்தி, ஹெத்தெ, தொட்ட ஹெப்ப, காணிக்க ஹெப்ப போன்றவை மரபுவழி பண்டிகைகள் ஆகும். இவர்கள் இயற்கை வழிபாட்டை தங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாக கொண்டுள்ளனர். காலை வேளையில் சூரிய வணக்கம் செய்யாமல், அன்றாட செயல்களை தொடங்க மாட்டார்கள். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மாரி ஹப்பா, முருகர் ஹப்பா, ராமர் ஹப்பா, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்களும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

சூரியன்
படுக மொழியில் சூரியனை “ஹொத்து” என அழைக்கிறார்கள். காலையில் எழுந்தவுடன் ஹொத்துவை (சூரிய பகவானை) வணங்குகின்றார்கள். அவர்கள் சிவபெருமானின் அவதாரமாகவே சூரியனை வழிபட்டு வருகிறார்கள்.

அக்னி
“கிச்சு” என படுக மொழியில் அழைக்கப்படும் அக்னி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. தீ மிதி திருவிழாவும் அவர்களது வழிபாட்டின் ஓர் அங்கமாக விளங்குகிறது.

நீலகிரி கங்கை
நீரை படுக மொழியில் “கங்கே” என அழைக்கின்றனர். கோயிலுக்கு அருகில் கிணறு ஒன்று உள்ளது. அதனை கடக்கும் போது, அனைவரும் இறைவனை வணங்குவது போல, தொட்டு கும்பிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் மலைப்பாதையில் சிறு ஒடையை கடக்க நேர்ந்தால், ஒடை நீரை கங்கா தாயாக நினைத்து வணங்கி, “என் கால் தங்கள் மீது படுகிறது, அதற்கு என்னை மன்னியுங்கள்” என்று பிரார்த்தனை செய்து கடந்து “நீரின்றி அமையாது உலகு” என்ற வாசகத்திற்கு ஏற்ப, நீரைத் தாயாக கருதி படுகர் வசிக்கும் ஊர்களில் உள்ள நீர் ஊற்று எடுக்கும் இடத்தில் பூஜை செய்து, நீருக்கு பால் அபிஷேகம் செய்து, தங்களுக்கு நீர் தந்து உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிப்பார்கள். வருடத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நாகப்பா நமோநம
“நாகப்பா” என படுக மொழியில் அழைக்கப்படும் பாம்பை, மகாவிஷ்ணுவின் அவதாரமாகவே கருதுகின்றனர். கோயில்களில் அதனை வழிபட்டு வருகின்றனர்.

மர வழிபாடு
சில மரங்களையே புனித மரமாக கருதுவார்கள். அனைத்து கிராமத்திலும் புனித மரம் ஒன்று உள்ளது. அதை சுற்றி கற்கள் சதுர வடிவில் கட்டப்பட்டுள்ளது. மரத்தின் கீழ் ஒரு தெய்வக் கல் இருக்கும். அதையே புனித மரமாக தெய்வமாக கருதி வணங்குவார்கள்.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர்,
(www.badugaa.com)