இந்தியாவின் புதிய வரைபடத்தில், அரசின் ஆட்சி அதிகாரத்துக்கு உள்பட்ட இடங்கள் மட்டுமே துல்லியமான வகையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் நேபாளத்துடனான எல்லையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’ என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த வரைபடத்தில், தங்களது எல்லைக்கு உள்பட்ட காலாபானி பகுதியானது இந்தியாவின் அதிகாரத்துக்கு உள்பட்ட இடமாக காட்டப்பட்டுள்ளதென நேபாளம் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.
இந்தியாவின் புதிய வரைபடத்தில், நாட்டின் ஆட்சி அதிகாரத்துக்கு உள்பட்ட இடங்கள் மட்டுமே துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த வரைபடத்தில், நேபாளத்துடனான எல்லைப் பகுதியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.
அந்நாட்டுடனான எல்லையை மறுவரையறை செய்வது தொடா்பான முயற்சிகள் தற்போது இருக்கும் நிலையிலேயே தொடா்கிறது. நெருக்கமான, நட்பு ரீதியிலான இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ள நாடுகளுடன் இருக்கும் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணவே இந்தியா உறுதி பூண்டுள்ளது.
அதேவேளையில், குறுகிய நலன்களுக்காக இரு நாடுகளிடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்படாத வகையில் பரஸ்பரம் இரு நாடுகளும் நடந்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரவீஷ்குமாா் கூறினாா்.
ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு புதிய யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதைக் குறிப்பிட்டு இந்தியாவின் புதிய வரைபடம் ஒன்றை மத்திய அரசு கடந்த சனிக்கிழமை வெளியிட்டது. அதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியானது ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட இடமாகவும், கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதி லடாக் யூனியன் பிரதேச அதிகாரத்துக்கு உள்பட்டதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.