நேர்மை உள்ளவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும்
நட்ராஜ் ஐ.பி.எஸ்
நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆர். நட்ராஜ் ஐ.பி.எஸ்., தற்போது மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாடு மாநில அரசு பணியாளர் தேர்வாணையம், அதிரடிப்படை தலைமை பொறுப்புகளில் முத்திரை பதித்தவர். பல மொழிகள் தெரிந்தவர். எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி என பன்முகத் தன்மைக் கொண்டவர்.
விஜயபாரதம் ஆசிரியர் வீரபாகு, எஸ். நாகராஜன், அபிநவ் ஆகியோருடன் நட்ராஜ் ஐபிஎஸ் தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதிலிருந்து சில…
உங்களைப் பற்றி…
எங்கள் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்ப் பள்ளம். என் தந்தை பூர்ணம் ராமச்சந்திரன், தாயார் கமலா. எனது தந்தை சிறுவயது முதலே காந்தியவாதி. அவர் சமஸ்கிருதம் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். அவர் உமாசந்திரன் என்ற புனை பெயரில் எழுதிய ‘முள்ளும் மலரும்’ நாவல் மிகவும் பிரபலமானது. சுதந்திரப் போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர். நான் பிறந்தது திருநெல்வேலி மாவட்டம் என்றாலும் வளர்ந்தது சென்னையில்தான். பள்ளிப்படிப்பை ஹிந்து மேல்நிலைப் பள்ளியிலும் கல்லூரிப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் முடித்தேன். நேபாளத்தில் இந்திய தூதரகத்தில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றினேன். உலகிலேயே ஒரே ஒரு ஹிந்து நாடாக இருந்தது நேபாளம்தான்.
காவல்துறையில் பணிபுரியும் ஆர்வம் தங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
என் இளமைக் காலத்தில் நம் நாடு இரு போர்களை சந்திக்க வேண்டி வந்தது. ஒன்று 1962ல் சீன அத்துமீறல். மற்றொன்று 1965ல் பாகிஸ்தான் ஊடுருவல். இந்த சம்பவங்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. நம் நாட்டிற்கு சேவைசெய்ய வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. முதலில் என்.சி.சி.யில் பயிற்சி பெற்றேன். அதன் தொடர்ச்சியாக ஐ.பி.எஸ். தேர்வு எழுதி, வெற்றி பெற்றேன்.
உங்கள் பணிக்காலத்தில் நீங்கள் செய்த சாதனைகளை பகிர்ந்துகொள்ளுங்களேன்?
நான் காவல் துறையில் பணிப்புரிந்த காலத்தில் ரௌடிசம், கட்டப்பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் அடியோடு அடக்கப்பட்டன. இதனால் அமைதி நிலவியது. தென் மாவட்டங்களையே கலக்கிக்கொண்டிருந்த சீவலப்பேரி பாண்டியை அடக்க நான் மேற்கொண்ட நடவடிக்கைகளால், அவன் கொல்லப்பட்டான். நக்ஸல்களை ஒழிப்பதற்காக சி.ஆர்.பி.எப். பாதுகாப்புப் படையின் தலைமையை ஏற்று வடகிழக்கிலும் பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை தடுக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் பணிபுரிந்துள்ளேன்.
நேர்மைக்கும் கண்டிப்புக்கும் உதாரணமாகத் திகழும் நீங்கள், அரசியலில் ஈடுபட முன்வந்தது ஏன்?
நேர்மையானவர்கள் தானே அரசியலில் ஈடுபட வேண்டும்? நேர்மையானவர்கள் அரசியலுக்கு வரத் தயங்குவதால் தான் நேர்மையில்லாதவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நமக்கு வேண்டியது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஊழல், லஞ்சம் அழிய வேண்டும், நமது பாரம்பரியம் காக்கப்பட வேண்டும். மயிலாப்பூர் ஒரு பாரம்பரியமிக்க ஊர். மயில்கள் அதிகம் இருந்ததால் இது மயிலாப்பூர் என்று அழைக்கப்பட்டது. சென்னை என்ற நகரம் உருவாவதற்கு முன்னாலேயே மயிலாப்பூர் இருந்திருக்கிறது. இங்குதான் திருவள்ளுவர் வாழ்ந்துள்ளார். நான் இங்குதான் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
லஞ்சம், ஊழல்களை அழிப்பதற்கும், பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாப்பதற்கும் இங்கு நாங்கள் பலவித முயற்சிகள் செய்து வருகிறோம்.
சுவாமி விவேகானந்தர், நூறு இளைஞர்களை எனக்குக் கொடுங்கள், இந்த நாட்டை நான் மாற்றிக் காட்டுகிறேன்” என்றார். இன்றோ உலகிலேயே அதிகம் இளைஞர்கள் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. ஆனாலும், நாட்டின் முன்னேற்றம், மெதுவாகத்தானே உள்ளது? அப்படியானால், அரசியலுக்கு நேர்மையும் கண்டிப்பும் உள்ள ஆள் வேண்டுமல்லவா…? அப்போதுதான் இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி நாட்டை முன்னேற்ற முடியும்.
ஹிந்துத்துவம் பற்றிய உங்கள் கண்ணோட்டம்?
ஹிந்துத்துவம் ஒரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இதில்தான் எம்மதமும் சம்மதமே” என்ற உயர்ந்த கோட்பாடு உள்ளது. இங்கு பிற மதங்களின் மீது எந்த வெறுப்பிற்கும் இடமில்லை. ஏன்! நாத்திகத்திற்கே இங்கு இடமுண்டு. ஹிந்துக்கள் சகிப்புத்தன்மையுள்ளவர்கள் எனக் கூறுவார்கள். இது தவறானது. ஒருவரை வெறுக்கும்போது, அவருடன் சண்டை சச்சரவில்லாமல் சேர்ந்து வாழுவதற்குப் பெயர்தான் சகிப்புத்தன்மை. ஹிந்துக்கள்தான் யாரையும் வெறுப்பதில்லையே! எனவே, ஹிந்துக்களுக்கு ‘சகிப்புத்தன்மை’ கிடையாது என்பதுதான் உண்மை.
பிரதமர் நரேந்திர மோடி பற்றி?
நல்ல பிரதமர். திறமையானவர். புதிய, புதிய திட்டங்களைக் கொண்டுவருகிறார். திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுதான் முக்கியமானது.
ஆர்.எஸ்.எஸ். பற்றி…
வெள்ள நிவாரணப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஆர்.எஸ்.எஸ்., சுயநலமில்லாத கட்டுப்பாடான இளைஞர்கள் கொண்ட அமைப்பு.