ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தான் பாரதத்திற்கான வாய்ப்புகளில் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், “இந்த நூற்றாண்டு பாரதத்துக்கு சொந்தமானது. அடுத்த தசாப்தத்தில் பாரதம் அதன் மிகப்பெரிய நடுத்தர வர்க்கம் மற்றும் அதிக இளைஞர்கள் கொண்ட மக்கள்தொகையால் ஒவ்வொரு 12 முதல் 18 மாதங்களுக்கும் ஒரு டிரில்லியன் டாலர்களை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கும். மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டம் வணிகத்தை சாத்தியமானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்குவதால், பாரதம் பசுமையான ஹைட்ரஜன் ஏற்றுமதியாளராக வெளிப்படும். உலக மந்தநிலை குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய அடுத்த பட்ஜெட் ஒரு சிறந்த வாய்ப்பாகும். மூலதனச் செலவு, வேலைவாய்ப்பு, சமூக உள்கட்டமைப்புக்கான செலவுகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவது, பாரதத்துக்கு உலகளாவிய தலையீடுகளை எதிர்கொள்ள உதவும்” என கூறினார். மேலும், தனது நிறுவனம், அதன் நிதி விவகாரம், வளர்ச்சி, என்.டி.டி.வி கையகப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் பேசினார்.