”இண்டியா கூட்டணி என்பது ஊழல் கூட்டணி,” என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். பா.ஜ., சார்பில், நீலகிரி மாவட்டம் பொன்விழா நகரில், மத்திய இணை அமைச்சர் முருகனின் முகாம் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. அலுவலகத்தை திறந்து வைத்து, மத்திய அமைச்சர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி என்பது ஊழல் கூட்டணி. காங்கிரஸ் எம்.பி., திராஜ் சாஹூவிடம் இருந்து வருமான வரி துறையினர், ௩00 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்துஉள்ளனர். ஆம் ஆத்மி மற்றும் மம்தா பானர்ஜி கட்சியினரிடம் இருந்தும், வருமான வரி துறையினர் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.
இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் ஊழலில் திளைத்து உள்ளனர். ‘சென்னையை சிங்கார சென்னை ஆக்குவோம்; சிங்கப்பூர் ஆக்குவோம்’ என, மேயராக இருந்த போது முதல்வர் ஸ்டாலின் சொன்னார். அதன்பின், ‘கூவம் ஆற்றில் படகு விடுவோம்’ என்றார். இன்றைய நிலைமையில் சென்னையே கூவமானது.
‘மழை நீர் வடிகால் வேலையை, 4,000 கோடி ரூபாய் செலவில் செய்துள்ளோம்’ என்றனர். பின், ‘1,800 கோடி ரூபாய்க்கு தான் வேலை செய்யப்பட்டுள்ளது’என்கின்றனர்.
சென்னை வெள்ள நிவாரணம் தொடர்பாக, தமிழக அரசுக்கு இதுவரை, 950 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது. மேலும், மத்திய குழுவும் சென்னையில் ஆய்வு செய்ய உள்ளது. ஆய்வுக்கு பின் அறிக்கை சமர்ப்பித்ததும், உரிய நிவாரண தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.