இணைந்து செயல்பட்டால் இலக்கை எட்டலாம்

டெல்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் 94வது ஆண்டு மாநாட்டில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘பாரதத் தொழில்துறையினர் பெரிதாகச் சிந்திக்க வேண்டும். பாரதம் சுதந்திரம் அடைந்து நூறு ஆண்டுகளைக் கொண்டாடும் போது, ​​வியக்கத்தக்க மாற்றங்களை நாம் அடைய வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இலக்குகளை நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும். அரசும், தொழில்துறையும் இணைந்து செயல்பட்டால், 2030ம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர் வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதியை பாரதம் எட்டும். துபாய் எக்ஸ்போவில் அதிகம் பார்வையிடப்பட்ட மற்றும் பாராட்டப்பட்ட அரங்குகளில் பாரதத்தின் அரங்கும் ஒன்று. உலகம் பாரதத்தை நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கிறது. கொரோனா பொதுமுடக்கக் காலகட்டத்தில் நமது தொழில்துறை, சவால்களை ஏற்றுக்கொள்ளும் அதன் தனித்துவமான திறனை வெளிப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடு, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் உள்ளவை செயல்படுத்தப்பட்டு உள்ளன. எளிமையான வணிக நடைமுறை சூழலுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய யோசனைகளுக்கு செவிசாய்க்கவும், ஒவ்வொரு மட்டத்திலும் தொழில்துறையினருடன் இணைந்து செயல்படவும், மத்திய அரசு தயாராக உள்ளது’ என தெரிவித்தார்.