ஆவினில் அடுத்த முறைகேடு

எடை குறைந்த ஆவின் பால் கவர் வழங்கி ஆவின் நிர்வாகம் தினமும் ரூ. 2 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்ததாக குற்றச்சாடு எழுந்த சில நாட்களில் ஆவினில் மற்றொரு ஊழல் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் தலைவர் பொன்னுச்சாமி தெரிவிக்கையில், ‘ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்வதற்காக முறையான டெண்டர் விடப்படவில்லை. ஏற்கனவே ஆவின் சார்பில் பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்படும் நிறுவனத்தை தவிர்த்து 1 கிலோவிற்கு 30 ரூபாய் அதிகம் விலை கொடுத்து ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆவின் நிறுவனத்தில் 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஆவின் அளவு குறைந்த பால் பாக்கெட் வினியோகம் என்ற சர்ச்சை முடிவதற்குள் அடுத்ததாக, சர்வதேச செஸ் போட்டியை வைத்து நடந்துள்ள இந்த முறைகேடு வெளியாகியுள்ளது. டெண்டர் விடாமல்ஒப்பந்தம் கொடுக்க ஆவின் அதிகாரிகளை துாண்டியது யார், எத்தனை ஆயிரம் கிலோ பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்பட்டது, இதனால் ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? என்பது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.