தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டதையடுத்து, ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி சிங் என்ற ராமச்சந்திர பிரசாத் சிங், பா.ஜ.கவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் முறைப்படி பா.ஜ.கவில் இணைந்தார். பா.ஜ.கவில் இணைந்த பிறகு, அவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். நிதீஷ் குமாரை மாறி மாறி வெவ்வேறு கட்சிகளுடன் சேரும் ஒருவர் என பொருள்படும் வகையில், ‘பல்டி மார்’ என அழைத்தார். நிதீஷ் குமாருக்கு பீகார் நலனுக்காக உழைக்கும் பொறுப்பு கிடைத்தது, ஆனால் அவர் இப்போது என்ன செய்கிறார்? அவர் ஒரு நாள் ஒடிசாவில் இருக்கிறார், மற்றொரு நாள் ஜார்கண்டில் இருக்கிறார், இப்போது அவர் மகாராஷ்டிராவில் இருக்கிறார். அவர் இப்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பற்றி பேசுகிறார், ஆனால் அதில், ஒரு முக்கிய கேள்வி. உங்கள் தலைவர் யார்? தலைவர் இல்லாமல் எதிர்க்கட்சி ஒற்றுமையை எப்படி எதிர்பார்க்க முடியும்? நிதீஷ் குமார் தனது ஏழு பிறப்பிலும் பிரதமராக முடியாது” என்றார்.