ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) இப்போது உலகப் புகழ்பெற்ற அமைப்பு. உலகம் முழுதும் புகழ் பெறுவதற்கான வலிமையை ஏற்படுத்துவது கடந்த 99 ஆண்டுகளாக சங்கத்திற்கோ சங்க ஸ்வயம்சேவகர்களுக்கோ ஒரு போதும் குறிக்கோளாக இருந்தது இல்லை, இப்போதும் இல்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை” என்கிறார் ஆர். எஸ். எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் டாக்டர் மோகன் பாகவத்.
அப்படியானால் சங்கத்தின் நோக்கம்தான் என்ன? அவரே தெரிவிக்கிறார், கேட்போம்: “பாரத தேசத்தை எல்லா விதங்களிலும் மிக உன்னத நிலை அடையச் செய்வதே சங்கத்தின் குறிக்கோள். அதன் மூலம் உலகத்தையும் மகிழ்ச்சி, அமைதி, வளம், நல்லெண்ணம் நிறைந்ததாக ஆக்கும் வல்லமையுள்ள, ஒருங்கிணைப்பு வாய்ந்த ஹிந்து சமுதாயத்தை உருவாக்குவதற்காகவும், தனிநபர் ஒழுக்கம், தேசிய ஒழுக்கம் நிறைந்ததாக சமுதாயம் ஆவதற்காகவும் சங்கப் பணி நடைபெற்றது, நடைபெற்றுக் கொண்டிருக்
கிறது”. இன்றைய நிலையில் ஆர்.எஸ்.எஸ் உலகப்புகழ் பெறும் அளவிற்கு ஓங்கி வளர்ந்த வரலாறு என்ன என்று தெரிந்துகொள்ள மக்கள் விரும்புவது சகஜம். மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் மோகன் பாகவத் பின்வருமாறு அந்த சூட்சுமத்தை விவரிக்கிறார்:
“தன்னலமில்லாமல் மக்கள் நலத்திற்காக நேர்மையுடன் பணிபுரிவது சாதாரணமாக சமுதாயத்துக்கு எடுத்த எடுப்பில் புரிவதில்லை. எனவே சாத்விகமான முறையில் மனதிற்கு மகிழ்ச்சியை அளித்து, அனைவர் நலனுக்
காக நடக்கும் இப்பணிக்கு மக்களுடைய அன்பும் நம்பிக்கையும் கிடைப்பதற்கு முன்னதாக, இரண்டு பத்தாண்டுகள் புறக்கணிப்பும் பின்னர் ஏழு பத்தாண்டுகள் கடுமையும் கூர்மையும் கொண்ட எதிர்ப்பும் நிறைந்த சூழ்நிலையை கடந்துவர வேண்டியிருந்தது. இந்த நீண்ட கால, கடினமான சோதனைகளையெல்லாம் எதிர்கொண்டுதான் சங்க ஸ்வயம்சேவகர்கள் புகழ் பெற்றனர். இதற்கு காரணம்? அவர்களுக்கு சங்கப் பணியில் இருந்த ஈடுபாடு, களங்கமில்லாத ஒழுக்கம், அசைக்க முடியாத வீர உணர்வு, ஒருங்கிணைக்கும் திறன் … எல்லாவற்றிற்கும் மேலாக சமுதாயத்தின் மீது கொண்ட அபாரமான, எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத, தூய அன்பு.”
டாக்டர் மோகன் பாகவத் போலவே ஆர்.எஸ்.எஸ்ஸை அகில பாரத அளவில் வழிநடத்திய முந்தைய ஐந்து சர்சங்கசாலகர்களும் லட்சியத்தை தம் வாழ்வில் கடைப்பிடித்து எடுத்துக்காட்டாக வாழ்ந்தமை, நமக்கு ஊக்கமளிக்கும், மகத்துவம் வாய்ந்த விஷயம். தமது வாழ்க்கையை எடுத்துக்காட்டாக முன்
வைத்து அன்புடன் ஸ்வயம்சேவகர்களின் மனவலிமை, ஒழுக்கம், ஊக்கம், திறன் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வேகம் அளித்தது இந்த அற்புதத் தலைமை.
காலப்போக்கில் சமுதாயம் இதன் நல்ல விளைவுகளை தரிசிக்க முடிந்தது; ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
போன மாதம் பக்கத்து மாநிலம் கேரளத்தில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட மக்களை ஸ்வயம்சேவகர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றினார்கள்.
தமிழகமே 2015ல் பெருமழை வெள்ளத்தில் தத்தளித்தபோது கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை சேவா பாரதி, ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் மக்களுக்கு பரிவோடு செய்த சேவை, மக்கள் மனதில் சங்கம் அற்புதமாக இடம் பெற பாதை போட்டது.
சுனாமி பேரலை நிகழ்த்திய பேரழிவையடுத்து மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு என சங்க அன்பர்கள் தொடர்ந்து செயல்பட்டு தமிழக கடற்கரையோர சமூகங்களின் நன்றியுணர்வுடன் கூடிய அன்பான ஆதரவை வென்றார்கள்.
கொரோனா பெருந்தொற்று, குஜராத் நிலநடுக்கம், ஆந்திரா, ஒரிசா சூறாவளி சேதம் போன்றவை மாதக் கணக்கில் தலைப்புச் செய்தியாகிக் கொண்டிருந்த தருணங்களில் சந்தடியில்லாமல் மக்கள் மத்தியில் இருந்தபடி நிவாரணம் அளித்து மக்களுக்கு தெம்பு தந்து மனம் நிறைந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள்.
சுதந்திர பாரத வரலாறு எழுதப்படும்போது பிரதானமாக பதிவுசெய்யப்பட வேண்டிய அத்தியாயங்கள் இவை.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல உள்ளன, சங்கத்தை அணுகி சரியான புரிதலுடன் சமுதாயத்தின் வெவ்வேறு சமூகத்தினர் அவ்வபோது சொல்லும் கருத்துக்கள். ஒரு எடுத்துக்காட்டு:
“ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), கேரள காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் தலைமையிலான நிவாரண / மீட்புப் பணிகளுக்கு உதவுவதில் ஆர்.எஸ்.எஸ் / சேவாபாரதி அன்பர்களின் செயல்பாடுகளில் விரைவும் துல்லியமும் பளிச்சிடுகின்றன. இந்த அமைப்பைப் பற்றி முன்பு எனது பார்வை வேறு மாதிரி இருந்தது, ஆனால் நிலச்சரிவு மீட்புப் பணியில் அவர்களது அர்ப்
பணிப்பையும், ஈடுபாட்டையும் கண்டபின் என் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன். சுய ஊக்கத்தின் பேரிலான அவர்களின் நடவடிக்கை, அவர்களின் அசாதாரண ஒழுக்கம், அர்ப்பணிப்பு எல்லாமே பாராட்டுதற்குரியது. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” இது வயநாடு ஆல் இமானுவேல் சி.எஸ்.ஐ., சர்ச் பாதிரியார் பி.வி.செரியன் பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து (தினமலர், 2024 ஆகஸ்டு 4)..
(விஜயதசமி (1925) நன்னாளில் சங்கம் பிறந்தது)
கட்டுரையாளர் :
மூத்த பத்திரிகையாளர்