ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு வருடத்தில் ஒரு ஸ்வயம் சேவகரின் நூற்றாண்டு

ஆர்.எஸ்.எஸ் (சங்கம்) நூற்றாண்டு நிகழும் இந்த ஆண்டில் சங்க லட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் நூற்றாண்டு வருடம் தொடங்குகிறது.  மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைவராக வாழ்ந்த அந்த மாமனிதரின் வாழ்வையும் பணியையும் போற்றி ஊக்கம் பெறுவோம்.

 

தேச நலனை மையமாக வைத்து 1951ல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாரதிய ஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது மாமனிதர் தீனதயாள் உபாத்யாயவுடன் கட்சியை வளர்க்க அனுப்பப்பட்டவர் அடல் பிகாரி வாஜ்பாய். தொடர்ந்து பாரதிய ஜன சங்கத்திலும் பாரதிய ஜனதா கட்சியிலுமாக சுமார் 60 ஆண்டுகள் முழு நேரமாக இயக்கப் பணிக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். சுதந்திர பாரத வரலாற்றில் மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஒரு ஆட்சியை 5 வருடங்கள் முழுமையாக நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர்

குவாலியர் பகுதியில் (மத்திய பிரதேசம்) இன்றிலிருந்து சரியாக நூறு வருடங்களுக்கு முன்னால் 1924 டிசம்பர் 25 அன்று ஒரு எளிய குடும்பத்தில் பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்தார் அடல்ஜி. 1939ல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) சேர்ந்தார். அப்போது அவருக்கு 15 வயது. பட்டப் படிப்புக்
குப் பின்  ஆக்ரா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ முடித்தார். சங்க பெரியவர் கர்மயோகி பாபா சாஹப் ஆப்தேயால் ஈர்க்கப்பட்டு, சங்கத்தின் பயிற்சி முகாம்களில் பங்கேற்றார். 1947ல் 23வது வயதில் பிரசாரகர் (சங்க அமைப்பில் முழு நேர ஊழியர்) ஆனார்.

தீனதயாள்ஜி பொறுப்பேற்று வெளியிட்டு வந்த பத்திரிகை
களில் ஆரம்ப காலத்தில் அடல்ஜி பணியாற்றினார். ஜனசங்கத்தில் தேசிய செயலாளராகி நாட்டின் வடக்கு மண்டல பொறுப்பாளராக இருந்தார். 1957ல், சுதந்திரத்துக்குப் பின்னர் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் உ.பி பல்ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது தொடங்கி அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேல் எம்.பியாக இருந்து தனது பேச்சாற்றலால், சேவைகளால் மக்களுக்குத் தொண்டாற்றினார். உ.பி, ம.பி, குஜராத், டெல்லி என நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து 10 முறை லோக் சபாவுக்கும், இரண்டு முறை ராஜ்ய சபாவுக்கும் அடல்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டது  நாடு முழுவதும் அவருக்கிருந்த மக்கள் செல்வாக்கைப் பறைசாற்றுகிறது.

ஜனசங்கத்தை ஆரம்ப  காலங்களில் கட்டமைத்து  தலைசிறந்த அமைப்பாளராக விளங்கிய தீனதயாள்ஜி,  கட்சியின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மிக குறுகிய காலத்தில்,  1968ல் மர்மமான முறையில் 53 வது வயதில் உயிர் நீத்தது கட்சிக்குப் பேரிடியாக அமைந்தது. அதன்பின் கட்சிக்குத் தலைமை தாங்கும் மிக முக்கியமான பொறுப்பை வாஜ்பாய் ஏற்றார். நானாஜி தேஷ்முக், பால்ராஜ் மதோக், எல்.கே அத்வானி ஆகியோருடன் இணைந்து கட்சியைத் திறம்பட நடத்தினார்.

காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேசிய அரசியலை முன்னெடுப்பதிலும், மாநிலங்களில் ஜனசங்கத்தை வளப்பதிலும் திறமையுடன் செயல்பட்டார்.  அரசியல் சாஸனத்தை  மதிக்காமல் இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்த பின்னர், மாற்று அரசியலை முன் வைத்து கடுமையாக உழைத்தார். அதனால் 1977ல் ஜன சங்கம் முக்கிய பங்கு வகித்த ஜனதா கட்சி உருவாக்கப்பட்டு, ஆட்சியைப் பெற்றது. அதில் வாஜ்பாய் வெளியுறவுத்
துறை அமைச்சராகப் பொறுப்பேற்று பல முயற்சிகளை முன்னெடுத்தார். ஐ.நா சபையின் பொதுக்குழு கூட்டத்தில் முதன் முதலாக ஹிந்தி மொழியில் பேசினார்.

சில சுயநல சக்திகளின் காரணமாக  ஜனதா கட்சி பிளவுபட்ட
போது, 1980ல் பாரதிய ஜனதா கட்சி உருவானது. அதன் முதல் தலைவராக வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சிக்குக் கடுமையான சோதனைகள் ஏற்பட்ட  காலகட்டங்களில் பிற தலைவர்
களுடன் இணைந்து கட்சி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார்.

கூட்டணிக் கட்சிகள் இணைந்து 1996ல் அவரை தேசத்தின் பிரதமராக தேர்ந்தெடுத்தன. அதன் மூலம் சுதந்திர பாரதத்தில் பிரதமராகப் பொறுப்பேற்ற முதல் ஸ்வயம்சேவகர் என்னும் பெருமை பெற்றார். ஆனால் அந்த ஆட்சி பெரும்பான்மை கிடைக்காததால் சில நாட்களே நீடித்தது. பின்னர் 1998ல் மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தன. 13 மாதங்கள் ஆட்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் போகரண் அணுவெடிப்பு சோதனை, நமது தேசத்தின் சக்தியை உலகுக்கு அறிவித்தது. அந்த சமயத்தில் வெளிநாட்டினர் நம் மேல் தடைகளை  விதித்த போதும் சர்வதேச பிரச்சினைகளைத்  திறம்பட எதிர்கொண்டார்.

தொடர்ந்து 1999ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி கூடுதலான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. வாஜ்பாய் பல கட்சிகள் சேர்ந்த கூட்டணி ஆட்சியை ஐந்து ஆண்டுகள் முழுமையாக, திறமையாக நடத்திக் காட்டினார். அந்த சமயத்தில்  பல முக்கியமான திட்டங்களை மேற்கொண்டார்.  நாடு முழுவதும் போக்குவரத்தைச் சுலபமாக்கி பொருளாதாரம் வளர்ச்சி பெற ‘தங்க நாற்கர சாலை’ திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

அதன் பலனாக நாட்டின் பல பகுதிகளும் சாலைகளால் இணைக்கப்பட்டன. பொருளாதாரத் துறையில் பல சீர்திருத்
தங்களைக் கொண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாடு எதிர்பாராத சவால்களைச் சந்திக்க வேண்டி வந்தது. 2001ல் நாட்டின் நாடாளுமன்றமே பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த சூழ்நிலையில்  துணிச்சலுடன் செயல்பட்டு நாட்டை வழி  நடத்தினார்.

எழுபது வருட காலம் முழுமையாகத் தேசப் பணியாற்றிய பின்னர், 85வது வயதில் உடல் நிலை கருதி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.  அதன் பின் ஒன்பது வருடங்கள் கழித்து 2018 ஆகஸ்டு 16 அன்று 94வது
வயதில் இறைவனடி சேர்ந்தார்.

வாழ்க்கை முழுவதையும் தேசத்துக்கே அர்ப்பணித்து வாழ்ந்த வாஜ்பாய் சுதந்திர பாரதத்தின் ஒரு பெரும் அரசியல் தலைவர்; மிகச் சிறந்த தேசபக்தர்; அற்புதமான பேச்சாளர்; நல்ல கவிஞர்; பல வகைகளில் முன்னோடி. அவரது சேவைகளைப் போற்றி நரேந்திர மோடி தலைமை
யிலான அரசு 2015ல் அவருக்கு நாட்டின் உயர்ந்த ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பித்தது.

மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைவராக வாழ்ந்து மறைந்த அந்த மாமனிதரின் நூற்றாண்டு வருடம் தொடங்கும் இந்தத் தருணத்தில் அவர்தம் வாழ்வையும் பணியையும் போற்றி ஊக்கம் பெறுவோம்.

கட்டுரையாளர் :

தமிழக பாஜக துணைத் தலைவர்