தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்ததுடன் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. முன்னதாக, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசின் காவல்துறை அமல்படுத்தவில்லை என்பதால், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், ”ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், அமைதியான முறையில், அணிவகுப்பை நடத்த வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த ஊர்வலத்திற்கு மூன்று தேதிகளை தேர்வு செய்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் காவல் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். காவல்துறை அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும் என்று என்று உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது நினைவு கூரத்தக்கது.