ஆரம்பமாகிறதா அமெரிக்காவின் ஆக்டோபஸ் ஆட்டம்?

பங்களாதேஷ் போல பாரதத்தில் ரத்தக்களரியை ஏற்படுத்த பிரிவினைவாதிகளை தூண்டுவது யார்? மர்ம சந்திப்புகளால் ஏற்பட்டுள்ள சந்தேக வளையத்தில் அமெரிக்கா. சாட்டை சொடுக்குகிறது பாரதம்.

மெரிக்க ராஜதந்திரிகள் (தூதரக புள்ளிகள்) பிரிவினைவாதக் கண்ணோட்டம் கொண்ட உமர் அப்துல்லா, அஸாதுதீன் ஓவைசி, மு.க.ஸ்டாலின், ஆதித்ய தாக்கரே போன்ற அரசியல்வாதிகளை சந்தித்துப் பேசியுள்ளது, சந்தேகத்தை கிளப்புகிறது. இந்தச் சந்திப்பு ராஜதந்திர ரீதியானது மட்டுமல்ல. அதற்கு அப்பாலும் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. பாரதத்தின் உள்நாட்டு விவகாரங்களில் அனாவசியமாக தலையிட அமெரிக்கா முன்னெடுப்புகளை முடுக்கி விட்டுள்ளது என்றே கருத வேண்டியிருக்கிறது. பாரதத்தின் அண்டை நாடுகளில் நடைபெற்ற, நடந்து வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக உற்றுநோக்கும்போது இந்த சந்தேகம் விஸ்வரூப
மெடுக்கிறது.

அமெரிக்காவுக்கு ஒரு வகையான ஆதிக்கத் திமிர் மனோபாவம் எப்போதுமே உண்டு. உலகின் உச்ச நாடாக அமெரிக்காவே தொடர்ந்து நீடிக்க வேண்டும். தனக்கு இணையாக எந்த நாடும் வளரக் கூடாது. மற்ற நாடுகளை மட்டம் தட்டி வைக்க வேண்டும். தனது எண்ணத்திற்கு ஏற்ப பிற நாடுகளில் செயல்படும் அரசியல்வாதிகளை ஊக்குவிக்க வேண்டும். அப்படி யாரும் செயல்படாவிட்டால், யாரெல்லாம் அதிருப்தியாளர்களாக இருக்கிறார்களோ அவர்களை அடையாளம் கண்டு வளைக்க வேண்டும் என்பது அமெரிக்க வெளியுறவு கோட்பாடாகும். எஸ் பாஸ் என்று ஆமாம் சாமி போடுபவர்களை எல்லா நாடுகளிலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய அமெரிக்கா தயங்காது. இதற்காக ஜனநாயகத்தை காவுகொடுக்கவும் அமெரிக்கா எப்போதும் பச்சைக் கொடி காட்டி வந்துள்ளது என்பதற்கு கடந்தகால சரித்திர நிகழ்வுகள் வலுவான சான்றுகளாக உள்ளன.

அண்டை நாடான பங்களாதேஷில் நடைபெற்றதை கவனிப்போம். அங்கு கலவரம் தூண்டி விடப்பட்டது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உயிருக்கு ஆபத்தான நிலையில் தப்பியோடி பாரதத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தெரிவித்த கருத்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பங்களாதேஷில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதற்கு மூலகாரணம் அமெரிக்காதான். அமெரிக்காவின் பேச்சை கேட்காததால்தான் என்னை உருட்டித் தள்ளி விட்டனர் என்று ஷேக் ஹசீனா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இப்போது பங்களாதேஷில் ஒரு பொம்மை அரசு அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கிறது. சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற வங்கியாளரும், பொருளியல் வல்லுநருமான முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இயங்கி வருகிறார். அவர் அமெரிக்காவின் கைப்பாவையாகவே உள்ளார். அவர் எப்போதாவது தேர்தலில் நின்றுள்ளாரா? அல்லது எந்த அரசியல் கட்சியிலாவது அங்கம் வகித்துள்ளாரா? எதுவுமே இல்லை. அவருக்குள்ள ஒரே தகுதி அமெரிக்காவின் தீவிர விசுவாசி என்பது மட்டுமே.

பங்களாதேஷ், பாகிஸ்தான், பாரதம், ஸ்ரீலங்கா ஆகியவை அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்கள் பிரிவின் கீழ் வருகின்றன. இந்த பிரிவின் தலைவராக உதவிச் செயலர் டொனால்ட் லூ (Donald Lu) உள்ளார். 2021 செப்டம்பர் 15 முதல் அவர் இந்த பொறுப்பை கவனித்து வருகிறார். அவருக்கு அமெரிக்க அரசில் 30 ஆண்டு அனுபவம் உள்ளது. அவர் ராஜதந்திர உறவுகளை மட்டும் கவனிக்கவில்லை. அதையும் தாண்டி இந்த தெற்கு, மத்திய ஆசிய நாடுகளின் உள் விவகாரங்களில் அனாவசியமாக தொடர்ந்து தலையிட்டு வருகிறார். இனி குறிப்பிட்ட சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் தலையீடுகள் குறித்து கவனிப்போம்.

பங்களாதேஷ்:

ஷேக் ஹசீனா 4வது தடவையாக பங்களாதேஷின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்று அமெரிக்கா கணக்குப் போட்டு வைத்திருந்தது. ஆனால் அது பலிக்கவில்லை. ஷேக் ஹசீனாவை பதவியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என அமெரிக்கா முடிவெடுத்தது. அமெரிக்காவுக்கு ஷேக் ஹசீனா தேவையான அளவுக்கு வளைந்து கொடுக்கவில்லை. 2024ம் ஆண்டு மே மாதம் டொனால்ட் லூ பங்களா
தேஷுக்குச் சென்றார். கடந்த 2 ஆண்டுகளில் அவர் பங்களாதேஷுக்கு 3 முறை சென்றுள்ளார். மே மாத பயணத்தின்போது பங்களாதேஷில் உள்ள அரசு அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள், சமூகத் தலைவர்களை எல்லாம் அவர் சந்தித்துப் பேசி மூளைச் சலவை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் வலுவான அளவில் தாக்கம் செலுத்துபவர்களையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார். இதற்குப் பிறகு
தான் பங்களாதேஷில் கலவரம் வெடித்தது. ஷேக் ஹசீனா விரட்டியடிக்கப்பட்டார்.

பாகிஸ்தான்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் டெனால்ட் லூவுக்கு முக்கிய பங்குண்டு என்று பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க வெளியுறவு ஆய்வுக் குழுவின் முன்பே அவர் இதை எடுத்துரைத்துள்ளார். உக்ரைன் விவகாரத்தின்போது பாகிஸ்தான் குறிப்பிட்ட சார்பு நிலையை எடுக்கவில்லை. இது அமெரிக்காவின் ஆத்திரத்தை உச்சப்படுத்தியது. பாகிஸ்தானில் கலவரம் வெடித்தது. இம்ரான்கான் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் இப்போது சிறையில் உள்ளார்.

ஆப்கானிஸ்தான்:

2021 ஆகஸ்டில் ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 20 ஆண்டுக்காலமாக ஆப்கானிஸ்தானில் மேலாதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவின் கெடுபிடி முடிவுக்கு வந்தது. ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே அமெரிக்காவின் ஆதிக்கம் நீடித்து வந்தது. சில வேளைகளில் உரசல்கள் ஏற்பட்டதும் உண்டு. டொனால்ட் லூ, உதவிச் செயலர் பொறுப்பை ஏற்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.

அல்பேனியா:

அல்பேனியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன. இந்நிலையில் ‘தேர்தலைப் பற்றிய எந்த விமர்சனத்தையும் அமெரிக்கா ஏற்காது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் பங்கேற்கா விட்டாலும் தேர்தல் முடிவை அமெரிக்கா அங்கீகரிக்கும்’  என அறிவித்ததையடுத்து அதிரடி திருப்பம் ஏற்பட்டது. அல்பேனியாவில் நீதியியல் சார்ந்த சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கு உறுதுணையாக இருந்ததாக அமெரிக்க செய்தியாளர்களிடம் டொனால்ட் லூ வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதில் மற்றொரு அம்சத்தையும் கவனிக்கத் தவறக்கூடாது. அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா 9 மில்லியன் டாலரை ஜார்ஜ் சோரஸ் என்ற இடதுசாரி கண்ணோட்டம் கொண்டவர் என்று அறியப்படும் கோடீஸ்வரருடன் கைகோர்த்துக் கொண்டு செலவிட்டார். அல்பேனியாவில் சோஷலிஸ்ட் அரசை நிலைநிறுத்துவதற்காக இந்தத் தொகை செலவிடப்பட்டது. இங்கே கேபிடலிசம், கம்யூனிஸம் என்பது பிரச்சினையல்ல. தங்களுக்கு அனுசரணையானவர்கள், அனுசரணையற்றவர்கள் என்பதுதான் பிரச்சினை.

பாரதம்:

பாரதத்தில் டொனால்ட் லூ பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் 1996 முதல் 97 வரை அமெரிக்கத் தூதரின் சிறப்பு உதவியாளராக இருந்தார். 1997 முதல் 2000 வரை அவர் அரசியலுக்கான அதிகாரி. 2010 முதல் 2013 வரை புதுடெல்லியை மையமாக கொண்டு இயங்கிவரும் அமெரிக்க ராஜதந்திர அமைப்பின் துணைத் தலைவர். பாரதத்தில் பணியாற்றத் தொடங்குவதற்கு முன், 1992 முதல் 94 வரை அவர் பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் அரசியல் அதிகாரியாக செயல்பட்டுள்ளார். அல்பேனிய மொழி, ரஷ்ய மொழி, ஜார்ஜிய மொழி, அஸர்பைஜானி, உருது, ஹிந்தி, மேற்கு ஆப்பிரிக்க கிரியோ மொழி ஆகியவற்றில் அவரால் சரளமாகப் பேச முடியும்.

பாரதத்தில் இவ்வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது மே மாதம் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பாரதத்துக்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் அவர் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

டொனால்ட் லூ டெல்லியை மையப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சென்னையை மையப்படுத்தியே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். உதவிச் செயலர் டொனால்ட் லூ எதற்காக தென் பகுதியை குறிவைத்துள்ளார் என்பது மர்மமாகவே உள்ளது. 2024ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜதந்திர நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அவர் முயற்சிகளை முன்னெடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை அப்படியே நம்ப முடியவில்லை. இதற்கு முன்பும், பின்பும் நடைபெற்றுள்ள நிகழ்வுகளையும் இத்துடன் சேர்த்தே எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. `டெனால்ட் லூ, பாரதத்தைப் பொறுத்தவரை வெறுக்கத்தக்க நபர், பாரதத்தில் ஜனநாயகத்தை சீர்குலைக்க துடிக்கக்கூடிய நபர். கடந்த ஆண்டு அவர் ராகுல் காந்தியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து மகிழ்வித்தார்’ என்று புனேயை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குளோபல் ஸ்டிராட்டஜி பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் பாகவத் தெரிவித்துள்ளார். ராகுல் – டெனால்ட் லூ விவகாரம் குறித்து பாரத வெளியுறவுத்துறைக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்க செனட்டில் `நாங்கள் ஜம்மு –காஷ்மீர் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். முஸ்லிம்களுக்கு எதிராகவும், மதச் சிறுபான்மையினருக்கு எதிராகவும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பது தொடர்பான செய்திகளை கூர்மையாக அலசி ஆராய்ந்து வருகிறோம். தன்னார்வ நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கப்படுகிறது. பேச்சு சுதந்திரத்துக்கு ஊறு விளைவிக்கப்படுகிறது என்பது தொடர்பான செய்திகளையும் பரிசீலித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். “புதுடெல்லியில் அறிக்கை சமர்ப்பிக்கும் அதிகாரியாக 1990களின் பிற்பகுதியில் பணியாற்றினேன். நான் எனது இளமையை வீணடித்து விட்டேன். 8 முறை நான் காஷ்மீருக்கு சென்றுள்ளேன். கார்கில் போரின் போது அங்கு சென்றதும் இதில் அடங்கும். 15,000 அடி உயரம் கொண்ட பனிச் சிகரப் பகுதியில் போர் நடைபெற்ற வேளையில் அங்கு செல்ல நான் தயங்கியதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சர்ச்சைக்கிடமான, சந்தேகத்துக்கிடமான டொனால்ட் லூ அண்மையில் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். இதை பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. ஆகஸ்ட் 26ம் தேதி ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர்களை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த அமெரிக்கத் தூது குழுவில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சக ஆலோசகர் கிரஹாம் மேயர், முதன்மைச் செயலர் ஹேரி ஆப்பிள்கார்ட், அரசியல் ஆலோசகர் அபிராம் ஆகியோரும் இடம் பிடித்திருந்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜெனிபர் லார்சன் எவ்வாறெல்லாம் மத்திய கிழக்கிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் முன்னதாக வளைப்பு வேலைகளை அரங்கேற்றினார் என்பதை இத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.

லிபியாவில் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. கடாபியின் உயிரிழப்புக்கு இதுவே காரணமாகிவிட்டது. வெளிநாடுகளில் எத்தகைய வரம்பு மீறிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமெரிக்கா ஒருபோதும் தயங்காது என்பதற்கு இது உதாரணமாக உள்ளது.

இப்படிப்பட்ட ஜெனிபர் லார்சன், ஹைதராபாத்தில்  எம்.பி அஸாதுதீன் ஒவைசியை சந்தித்துப் பேசினார். முஸ்லிம்களை தூண்டி விட்டு பாரத அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க சதிவலை பின்னப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் இயல்பாகவே மேலோங்குகிறது.

மும்பையில் அமெரிக்கா துணைத் தூதராக உள்ளவர் மைக் ஹாங்கே அவர் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பாலஸ்தீன விவகாரங்களை கவனித்து வந்தார். ‘அரபு வசந்தம்’ அரங்கேறியதில் அவருக்கு முக்கிய பங்குண்டு. அவர் எகிப்தில் முஸ்லிம்களுடனும், கிறிஸ்தவர்களுடனும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அரபு மொழி, பிரெஞ்ச், தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர்.

உத்தவ் தாக்கரேயின் மகனும், மகாராஷ்ட்ர முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவை மும்பையில் சந்தித்துப் பேசியவர் இவர். கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்களை சந்தித்துப் பேசினார்கள். இதுவும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.

2023ம் ஆண்டு பாரதத்துக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸின் முன்னாள் மேயர் எரிக் கார்ஸெட்டி நியமிக்கப்பட்டார். அவர் பாரதம் மீது நல்ல அபிப்ராயம் கொண்டவர் கிடையாது. ஜூலை மாதம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நமது பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்ய பயணத்தை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு நமது வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரணதீர் ஜெய்ஸ்வால் சுடச்சுட பதிலடி கொடுத்தார். ‘பாரதம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. பாரதம் எப்படி செயல்பட வேண்டும் என்று யாரும் பாடம் நடத்த தேவை
யில்லை. எங்களது கருத்துக்களை நாங்கள் தெரிவிக்கிறோம். இதைப் போல அமெரிக்காவும் அந்த நாட்டின் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. அமெரிக்காவுடன் எல்லா
வற்றிலும் உடன்பட வேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு கிடையாது. சிலவற்றை ஏற்க
லாம். மற்றவற்றை நிராகரிக்க
லாம். எனினும் பரஸ்பர மரியாதை தொடர்ந்து நீடிக்கும். அவரவர் கருத்து அவரவருக்கு இருப்பதில் தவறில்லை’ என்று ரணதீர் ஜெய்ஸ்வால் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்க ராஜதந்திரிகளின் பாரதச் செயல்பாடுகள் சந்தேகத்தை வலுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ராஜ தந்திரம் என்ற பெயரில் பாரதத்தின் உள் விவகாரங்
களில் தலையிடவும் விரும்பத்
தகாத நிகழ்வுகளை அரங்கேற்ற சிலரை ஏவிவிடவும் அமெரிக்கா முயல்கிறது என்ற சந்தேகம், பாதுகாப்பில் அக்கறை கொண்ட பலரிடையே எழுவது நியாய
மானதே. அமெரிக்காவின் போக்கு ஏற்புடையதாக இல்லை. அமெரிக்கா தனது போக்கை திருத்திக்கொண்டால் மட்டுமே இருதரப்பு உறவு இணக்கமாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.