ஆயிரமாயிரம் பீஷ்மாச்சாரிகள் உருவாக வேண்டும்

செப்டம்பர் 12 அன்று மறைந்த ஸ்ரீபீஷ்மாச்சாரி அவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். டாக்டர் மனோகர் ஷிண்டே அவர்களின் தொடர்பில் சங்கத்திற்கு வந்தார். டாக்டர் மனோகர் ஷிண்டே அமெரிக்கா செல்ல வேண்டியிருந்ததால் ஹைதராபாத்திலிருந்து பீஷ்மாச்சாரி, சென்னைக்கு வந்தார்.

சென்னையில் முதலில் செளகார்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் பகுதிகளில் சங்க பிரச்சாரகராக பணிபுரிந்தார். சங்கப் பயிற்சிகளில் கொடி கட்டி பறந்தார்.

வேத்ரசர்மா என்ற சாரிரீக் கருவியில் மிகவும் வீரத்துடன் சங்க சிக்ஷா வர்காகளில் பயிற்சி கொடுப்பார். விஜயபாரதத்தின் முன்னாள் ஆசிரியர் ஸ்ரீவீரபாகுவும், ஸ்ரீபீஷ்மாச்சாரியும் சங்க சிக்ஷா வர்காக்களில் தண்டயுத்த, வேத்ரசர்மா பயிற்சிகளில் தலைசிறந்து விளங்கினார்கள்.

ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பயத்தைப் போக்கி, துணிச்சலையும், வீரத்தையும் கொடுத்தனர். பீஷ்மாச்சாரியின் தோற்றம் முன்னாள் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் மானக் ஷா போன்று இருக்கும். அவரது மீசை, குள்ளமான உருவம், சிவந்த மேனி, தீர்க்கமான பார்வை, ஆழ்ந்த நட்பு இவை அனைத்தும் சங்க காரியகர்த்தர்களுக்கு மாபெரும் உற்சாகத்தை அளித்தன. அவரைப் பார்த்து பிரம்மிப்பு அடைந்த ஸ்வயம்சேவகர்கள் ஏராளம். அவர் சேலத்திலும் இவ்வாறே பணிபுரிந்தார். சேலம் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் கட்டுவதில் பெரும் பங்கு வகித்தார்.

பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதம் தலைதூக்கி பயங்கரவாதிகள் கொலை வெறியாட்டம் நடத்தியபோது அங்கு அமைதியை உருவாக்க நாடுமுழுவதும் இருந்து பல்வேறு சங்க காரியகர்த்தர்கள் முழு நேர ஊழியர்களாக பஞ்சாபுக்கு சென்றனர். அவர்களோடு நமது பீஷ்மாச்சாரியும் பஞ்சாப் சென்று அங்கு அமிர்தசரஸ், ஜாலியன்வாலாபாக் ஆகிய பகுதிகளில் இவரது வீரதீர பணிகள் தொடர்ந்தன.

இறுதியாக நாகபுரி அருகில் டாக்டர் ஹெட்கேவாரின் புனித பூமியில் இறைவனின் திருவடி அடைந்தார். பீஷ்மாச்சாரியின் பிரிவை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு ஒரே வழி நூறு நூறு ஆயிரமாயிரம் பீஷ்மாச்சாரிகள் உருவாக வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் உண்மையான சிரத்தாஞ்சலியாக இருக்கும். அன்னாரோடு இணைந்து பணியாற்றும் பாக்கியம் பெற்ற நான் அவருக்கு சிரத்தாஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.