ஆக்ராவில் 102 ஆண்டுகளாக கட்டுப்பட்டு வந்த சோமி பாக் மணிமண்டபம் முழுமை பெற்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. உலக அதிசயமான தாஜ்மகால் போன்றே வெள்ளை பளிங்குக்கற்களால் அற்புத கலைநயத்துடன்சோமி பாக் கட்டியெழுப்பப்பட் டிருக் கிறது. தாஜ்மகால் வீற்றிருக்கும் பகுதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இது உள்ளது. இதன் கட்டிடக்கலையைக் கண்டு பிரமிக்கும் பார்வையாளர்களில் பலர் தங்களை மறந்து இதன் கலைநயத்தை தாஜ்மகாலுடன் ஒப்பிட்டுச் சிலாகிப்பதாகக் கூறப்படுகிறது.
‘இறைவனின் தோட்டம்’ என்ற பொருள்படும் சோமி பாக் மணிமண்டபம் ராதாசோமி எனும் சமய மார்க்கத்தைத் தோற்றுவித்த தானி சுவாமிஜி மகராஜ் என்பவருக்கு வடிக்கப்பட்ட பிரம்மாண்டமான கல்லறை மாடமாகும். 1922-ம் ஆண்டில் கட்டப்படத் தொடங்கிய இந்த மணிமண்டபத்தின் கட்டிடப் பணியில் கடந்த 102 ஆண்டுகளில் தலைமுறை தலைமுறையாகப் பலர் ஈடுபட்டுவந்துள்ளனர். மிகப் பெரிய கட்டுமான இயந்திரங்கள் ஏதுமற்ற காலத்தில் மிகுந்த சிரமத்துக்கு இடையில் கடின மனித உழைப்பைச் செலுத்தி இது கட்டத் தொடங்கப்பட்டது. பின்னர் காலத்துக்கு ஏற்றார்போல நவீன கட்டுமான இயந்திரங்களும் கட்டிடக்கலைகளும் சேர்க்கப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது,
52 கிணறுகளுக்கு மேல் அடித்தளமிட்டு 193 அடி உயரத்தில் ராஜஸ்தான் மக்ரானா பளிங்கு கொண்டு கட்டப்பட்ட மணிமண்டபம் இது.ஆக்ராவின் தயால்பாக் பகுதியில்சோமி பாக் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு அனுமதி இலவசம் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். முக்கியமாக ராதாசோமி சமய மார்க்கத்தின் தொண்டர்கள் பக்தியுடன் இந்த நினைவுச் சின்னத்தைப் பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உத்தர பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா மற்றும் அயல் நாடுகளிலும் ராதாசோமி பற்றாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.