அவரை இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வு கொண்டவர் எனச் சிலர் சித்திரிக்கிறார்கள்.
ஃபாஸிஸ்ட் என்கிறார்கள்.
‘சோலியை முடி’ என்று சிலர் சிலரைத் தூண்டி விடுகிறார்கள்.
அவர் இதையெல்லாம் மௌனமாகக் கடந்து போகிறார்.
நம் ஊடகங்களும் இந்த வெற்றிக் கதைகளைப் பற்றிப் பேசாமல், மௌனமாக நம்மைக் கடந்து போகின்றன.
ஆனால் – இரண்டு மௌனங்களும் ஒன்றல்ல.
இருட்டுகிற நேரத்தில் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தான் அவன். அச்சமாக இருந்தது. ‘கடவுளே! நீ எங்கிருந்தாலும் உடனே வா! வந்து என்னைத் தொடு!’ என்று கூவினான். அப்போது மெல்லப் பறந்து வந்த ஒரு பட்டாம் பூச்சி அவனைச் சுற்றிச் சுற்றி வந்து அவன் தோள் மீது அமர்ந்தது. அதைத் தட்டிவிட்டு, ‘ஐயோ! நான் கூப்பிட்டது உனக்குக் கேட்கவில்லையா, நீ பேசு! என்னோடு ஏதாவது பேசு!’ என்று கெஞ்சினான். அப்போது ஒரு குயில் போன்ற ஒரு சின்னஞ் சிறிய பறவை ‘குக்கூ குக்கூ’ என்று கூவிக் கொண்டு அவன் தலைக்கு மேல் பறந்தது. ஆனால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ‘கடவுளே! ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டு’ என்று இறைஞ்சினான். அப்போது, ஒரு பிறந்த குழந்தையின் முதல் அழுகுரல் எங்கேயோ கேட்டது. அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவன் ‘கடவுளே! இவ்வளவு கெஞ்சினேனே, என்னை ஏன் கை விட்டாய்!’ என்று புலம்பத் தொடங்கினான்.
அவன் புலம்பலுக்கு என்ன காரணம்?கடவுளைப் பற்றி நம் மனதுக்குள் பலவிதமான கற்பனைகள் இருக்கின்றன. அவருக்குப் பல முகங்கள். பல கைகள். கைகளில் ஆயுதங்கள். தலையில் கீரிடம், தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் என்று காலண்டர்களில் பார்த்த உருவங்கள் நம் அடிமனதில் ஆழப்பதிந்திருக்கின்றன. கடவுள் நேரில் தோன்றும் போது, சினிமாவில் காட்டுவது போல் வெடிச் சத்தத்துடன், கண்ணைக் கூசும் பேரொளியுடன் தோற்றம் தருவார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், எங்கும் எல்லாமுமாக இருக்கிற கடவுள் ஒரு பட்டாம் பூச்சியாகவும், சின்னஞ் சிறு குருவியாகவும் இருக்க முடியும் என்று நமக்குத் தோன்றுவதே இல்லை.
கடவுளைப் பற்றி மட்டுமல்ல, நம் நாட்டின் உயர் பதவிகளில் இருப்பவர்களைப் பற்றிய நம் அபிப்பிராயமும் அதுதான். அவர்களை எளிதில் அணுக முடியாது. பதவியில் போய் உட்கார்ந்து விட்டால் அவர்கள் நம்மைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். நாமாக அவர்களை அணுகினாலும் அவர்கள் தட்டிக் கழிப்பார்கள், அல்லது விரட்டியடிப்பார்கள். இது இந்தியா முழுக்க இருக்கும் யதார்த்தம்.
அதுதான் பிரதமர் அந்தப் பெண்ணை ஃபோனில் அழைத்த போது, திகைக்கச் செய்திருக்க வேண் டும். அதிலும் காலங் காலமாக மாநிலத்தை ஆளுபவர்களால் புறக்கணிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்து வரும் ஒருவருக்கு, அது நம்ப முடியாத ஒன்றாகத்தான் இருக்கும்.
பர்வீன் பாத்திமா, லடாக் பகுதியில் கார்கில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த இளம் பெண். 24 வயதுதான் அவருக்கு. ஒரு நாள் அவருக்கு ஃபோனில் ஓர் அழைப்பு.
‘பர்வீன் பாத்திமா?’ என்று அவர் பெயரைச் சொல்லி உறுதி செய்து கொண்டது.
‘ஆம். நான்தான் பேசுகிறேன்.’
‘நான் நரேந்திர மோடி பேசுகிறேன்.’
பிரதமரா? நம்ப முடியாத திகைப்பில் ஆழ்ந்தார் பர்வீன். மேலே என்ன பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை.
பிரதமரே தொடர்ந்து பேசினார்: ‘ திருப்பூர் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் டெய்லராகச் சேர்ந்த உங்களுக்கு அண்மையில் சூப்பர்வைசராகப் பதவி உயர்வு கிடைத்தது என்று அறிந்தேன். பாராட்டுக்கள். ஹிமயத் பயிற்சித் திட்டம் உங்கள் வாழ்க்கைக்கு உதவியிருக்கிறது என்பதை அறிய மகிழ்ச்சி. உங்கள் பகுதியில் உள்ள மற்றவர்களையும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேரச் சொல்லுங்கள்.’
‘நன்றி சார்’ என்றார் பர்வீன்.
மறுமுனையில் ஃபோன் வைக்கப் பட்டுவிட்டது.
மொத்த உரையாடலுமே ஒரு நிமிடம்தான். அந்தப் பெண்ணிற்கு அளவில்லாத மகிழ்ச்சி; அவரை விட அவர் குடும்பத்தினருக்கு. இருக்காதா பின்னே? அவர் வாழ்க்கையையே மாற்றிய திட்டமல்லவா ஹிமயத்!
காஷ்மீர், ஜம்மு, லடாக் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் சொந்தக் காலில் நின்று சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டு வரும் திட்டம் ஹிமயத். அந்தப் பகுதிகளில் வாழும், பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்ட 15 முதல் 35 வயதுக்குட்பட்ட எவரும் அந்தத் திட்டத்தில் சேரலாம். அவர்களுக்கு ஏதாவது ஒரு தொழிலில் பயிற்சி அளிக்கப்படும். (என்னென்ன தொழில்கள்? அது ஒரு நீண்ட பட்டியல், 75 தொழில்கள் இருக்கின்றன) பயிற்சிக்குப் பின், நாட்டில் ஏதேனும் ஒரு பகுதியில் உள்ள நிறுவனத்தில் அவர்களுக்கு வேலையும் தேடித்தரப்படும்.
இந்தத் திட்டத்தில் சேர்ந்த பர்வீனுக்கு, அவர் கிராமத்திற்கு அருகில் உள்ள கார்கிலில் தையல், ஆடை வடிவமைப்பு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. பின் திருப்பூரில் உள்ள SCM கார்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், அவருக்கு வேலை பெற்று தரப்பட்டது.
வருடத்தில் பாதி நாள் பனி உறைந்து கிடக்கும் லடாக் எங்கே? இந்தியாவின் கடைசி மாநிலமான தமிழ்நாட்டில் வெயிலில் குளிக்கும் திருப்பூர் எங்கே? ஆனால், பர்வீன் தயங்கவில்லை. அவருக்கு மட்டுமல்ல, அவருடன் அவரது ஊரிலிருந்து பயிற்சி பெற்ற பல பெண்களுக்கும் அதே திருப்பூரில், அதிலும் அவர் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
ஃபியாஸ் அகமதுவின் கதையைக் கேட்டால் கல்மனமும் கசிந்துருகும். ஜம்மு பகுதியில் அமைந்துள்ள டோடா மாவட்டத்தில் உள்ளது அவரது சிற்றூர். ஃபியாஸ் 2012-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேறினார். ஆனால், மேலே படிக்க முடியவில்லை. பணம் மட்டும் காரணமல்ல. அவருக்கு இதய நோய். அவரை இரண்டாண்டு காலம் படுத்தி எடுத்து விட்டது. சோதனை மேல் சோதனை. அந்த இரண்டாண்டு காலத்தில் அவரது சகோதரர் ஒருவர் இறந்து போனார். அதை அடுத்து அவரது சகோதரியும் இறந்து போனார். நாளை நாம் இருப்போமா – மாட்டோமா என்ற நிலையில் நம்பிக்கையோடு போராடினார்.
நோயிலிருந்து சற்று குணம் பெற்ற ஃபியாஸ், துயரங்களை ஒதுக்கி வைத்து விட்டு, ஹிமயத் திட்டத்தின் கீழ் ITES (Information Technology Enabled services) பிரிவில் பயிற்சிக்குச் சேர்ந்தார். பயிற்சி முடிந்த பின் அவருக்கு பஞ்சாபில் வேலை கிடைத்தது. அங்கு வேலை பார்த்துக் கொண்டே பட்டப் படிப்பில் சேர்ந்தார். இப்போது அந்தப் படிப்பை முடிக்க இருக்கிறார். எதிர்காலமே இல்லை என்று இருந்தவர், இன்னும் சில வாரங்களில் பட்டதாரியாகப் போகிறார்!
சில மாதங்களுக்கு முன், அவருக்குப் பயிற்சி கொடுத்த நிறுவனத்தில் அவரைப் பேச அழைத்திருந்தார்கள். மைக் முன் வந்த அவருக்குப் பேச்சு வரவில்லை. கண்களிலிருந்து நீர் பெருகியது. காரணம், கடந்த காலத்துக் காட்சிகள் மனதில் ஓடி மறைந்தன.
அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்தவர் ரக்கிப் – உல்-ரஹ்மான். குடும்பத்திலிருந்த பணக் கஷ்டத்தால் அவரால் படிப்பை முடிக்க முடியவில்லை. ஹிமயத் திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதில் ‘ரீடைல் டீம் லீடர்’ பிரிவில் பயிற்சிக்குச் சேர்ந்தார். இன்று அவர் ஒரு கார்ப்பொரேட் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
இப்படி, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் ஓசைப்படாமல் ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளில் வெவ்வேறான 77 தொழில்களில் 18 ஆயிரம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 5 ஆயிரம் பேர் வேலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். மற்றும் பலர் சுயமாகத் தொழில் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மௌனப் புரட்சிக்குப் பின் ஒருவர் இருக்கிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுத்தப்படுகிறது என்பதை, தனது பல வேலைகளுக்கு நடுவிலும் ஒரு கண் வைத்துக் கண்காணித்து வருகிறார். அதனால்தான் அவரால் பர்வினுக்கு வேலை கிடைத்தது மட்டுமல்ல, பதவி உயர்வு கிடைத்தது பற்றியும் தெரிகிறது.!