அவரவர் கற்பனையில் ஆர்.எஸ்.எஸ் காவிரி ஒன்றே, படித்துறைகள் பல!

சென்னை மாம்பலம். 1968 ஆரம்பம்.  காலை நேர ‘பாரத மாதா ஷாகா’ முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நிக்கர் அணிந்து, கையில் தண்டவுடன். என் வயதிருக்கும் ஒரு இளைஞன். அதிரடியாக என்னை மறித்து “நானும் கம்யூனல் ஆகணும்” என்றான். ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர ஆசைப்படுகிறான் என்று புரிந்துகொண்டேன். “நானும் தேசியவாதி ஆகணும் என்று சொல்லப்பா” என்றேன். சங்கம் பற்றி ஊடக பிரச்சாரத்தில் தடுமாறிய எத்தனையோ பேரில் இவனும் ஒருவன் என்று தோன்றியது. பெயர் வாசு, தனியார் நிறுவனத்தில் வேலை என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அப்போது மாம்பலம் ஷாகா முக்ய சிக்‌ஷக் (பொறுப்பாளர்) கணபதிராமன். அவரை சந்திக்கச் சொல்லிவிட்டு நடந்தேன் (இன்று திருவாளர் ஏஷியன் பெயிண்ட்ஸ் வாசுதேவன் பணி ஓய்வு பெற்ற பின் மாம்பலம் பகுதியில் தேசிய / சேவை பணிகளுக்கு பெருமளவு ஊக்கம் தந்து வருகிறார் என்று கேள்விப்பட்டேன்).

எல்லாருக்கும் சங்க அறிமுகம் வாசுஜி போல பரபரப்பில்லாத அமைதியான காலை நேரத்தில் வாய்ப்பதில்லை. தற்போது ஸ்ரீரங்கம் வாசிகளான ஒரு தம்பதிக்கு சங்க அறிமுகம் பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்வயம்சேவகர்கள் மூலம் கிடைத்தது. முகநூலில் அந்த தம்பதியின் ஒரு பதிவிலிருந்து இந்தத் தகவல் எனக்கு கிடைத்தது (இந்த மாதிரி நல்லதெல்லாம் கூட முகநூலில் கிடைக்கிறது. “தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம்; தீயைக் கொண்டு மூடரெல்லாம் ஊரைக் கூட எரிக்கலாம்”!) ப்ரியா…ராம்குமார் என்ற அந்த தம்பதிக்கு முதல் சங்க தரிசனம் கிடைத்த ஆந்திர பிரதேச நகரை சற்றே எட்டிப் பார்ப்போமா?

“விசாகப்பட்டினம். 27 வருடங்களுக்கு முன். 1997 செப்டம்பர் 14. ஞாயிறு காலை 6.30 மணி. எங்கள் வீட்டுக் கதவு தடதட என்று பூகம்பம் வந்தது போல அதிர்கிறது. பயங்கர இடி சத்தம் வேறு! ஒரு நொடி தூக்கி
வாரிப் போட்டது. என்னன்னு யோசிக்கிறதுக்குள்ள அடுத்த பிளாட் நண்பர் கதவைத்தட்டி  “ராம்குமார் காரூ…..நம்ம HPCL எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில LPG எரிவாயு கசிந்து பெரிய தீ விபத்து!” என்ற பயங்கரச் செய்தியைச் சொல்கிறார். அலறிய என் கணவர் அடுத்த நிமிஷமே பைக்ல கிளம்பிட்டார்.

ஆலைக்கும் எங்கள் குடியிருப்புக்கும் 14 கி.மீ தொலைவு! இவரும் மற்ற அலுவலர்களும் காலை 7.45 க்கு ஆலையை அடைந்தபோது … ஏற்கனவே அங்கு திரண்டிருந்தனர் நாற்பது, ஐம்பது “பொடிப் பசங்கள்”! என் கணவருக்கே அப்போது 28 வயதுதான். அவரை விட 4,5 வயது இளையவர்கள் அவர்கள். தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் இடிபாடுகளுக்குள் புகுந்து உடல்களை அப்புறப்படுத்துவதாகட்டும்,  இடிபாடுகளில் உயிருடன் யாராவது சிக்கியிருக்கிறார்களா என்று தேடுவதாகட்டும் … கொஞ்சம் கூட அயராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள் (இவர்கள் வந்து ஒரு மணிநேரம் ஆன பிறகுதான் கடற்படை தளத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து சேர முடிந்தது).

“யார் நீங்கல்லாம்?” என்று அந்த இளைஞர்களை என் கணவர் கேட்க, அவர்கள் சொன்னது … “நாங்க ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள்” (பி.கு: அன்று வரை ஆர்.எஸ்.எஸ் என்றால் கோட்ஸே மட்டுமே என்று மூளையில்  திணிக்கப்பட்டிருந்த எங்களைப் போன்றவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்றால் தேச சேவை மட்டுமே என்பது புரிந்தது).”  நேர்த்தியான எழுத்து மூலம் எழுத்தாளர்…மொழிபெயர்ப்பாளர் திருமதி ப்ரியா ராம்குமார் விஜயபாரதம் வாசகர்களுக்கு அறிமுகம் ஆனவர்தான்.

“ஸ்ரீ குருஜி அமரர் ஆனார்” என்று தலைப்பிட்டு ‘தியாகபூமி’ வார இதழ் வெளியிட்ட சிறப்பிதழை கையில் எடுத்துக் கொண்டு ‘த மெயில்’ ஆங்கில மாலை நாளிதழின் ஆசிரியர் வி.பி.வி. ராஜனை சந்தித்தேன். நான் இதழியல் பயின்றுகொண்டிருந்த கல்லூரிக்கு அவர் பிரின்ஸ்பாலும் கூட. “ஓஹோ, கோல்வல்கர்  காலமாகிவிட்டாரா? உங்க அடுத்த குருஜி யாரு?” என்று கேட்டாரே பார்க்கலாம்! “அடுத்த சர்சங்கசாலக் யார் என்று கேட்கணும் சார்” என்றேன். ஸ்ரீ குருஜி காலமானது 1973 ல். சங்கப்பணி தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது. ஆனாலும் மிக உயர்ந்த நிலையில் உள்ள பத்திரிகையாளருக்குக் கூட சங்கத்தின் அகில பாரத தலைவர் பொறுப்பின் பெயர் என்ன என்று தெரிந்திருக்கவில்லை. எனவே ஸ்ரீ குருஜி வாழ்வில் நடந்த சம்பவங்களை துணுக்குகளாகத் தொகுத்து ‘ராஷ்ட்ர சிற்பி ஸ்ரீ குருஜி’ என்ற தலைப்பில் கையடக்க நூலாக்கி எல்லா பத்திரிகை அலுவலகங்களிலும் ஏறி இறங்கி வழங்கிவிட்டு வந்தோம். ஆனந்த விகடன் மட்டும் ”I miss India in Miss India contests” என்று ஸ்ரீ குருஜி தேசத்தில் நுழையும் அன்னிய மோகத்தை விமர்சிக்கையில் சொன்னதை மட்டும் பிரசுரித்துவிட்டு பிறவிப்பயன் அடைந்ததாக நினைத்துக் கொண்டது!

ஒன்று புரிந்தது. ஊருக்குள் உலா வருவது அறியாமை மட்டுமல்ல, அது உதாசீன மனப்பான்மை. சங்கப் பணி வளர வளர, ஹிந்து ஒற்றுமையால் ஏற்படும் சக்தியை ஊரார் உணர்கிறார்கள். சங்கத்தின் அருமை பெருமை கண்ணில் படுகிறது, காதில் விழுகிறது. இப்படித்தான் பின்னாளில் சுதர்ஸன்ஜி சர்சங்கசாலக் ஆன போது, கல்கி கட்டுரையாளர் ஒருவர் சங்க காரியாலயத்தில் முகாமிட்டு, புதிய தலைவரின் பூர்வீகம் நம்ம செங்கோட்டையாமே என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான் புறப்பட்டுப் போனார்!

நக்சல் ஆதரவாளர்களும் ஜிகாதி ஆதரவாளர்களும் மாறி மாறி தர்பார் நடத்தும் கேரளத்தின் எந்த ஊரும் எப்போது வேண்டுமானாலும் கலவர பூமியாகி ரத்தம் தெறிக்கும். இப்படித்தான் 1970ல் தலச்சேரியில் கலவரம் வெடித்தது. மக்கள் பயத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். எல்லார் வீட்டுக் கதவையும் தட்டி யாரும் பயப்பட வேண்டாம், சந்திரேட்டன் இங்கேதான் இருக்கிறார் … என்று சில தொண்டர்கள் தைரியம் சொல்லிவிட்டு போனார்கள். மக்கள் தெருவில் பயமில்லாமல் நடமாடத் தொடங்கினார்கள். தற்போது 86 வயதாகி திருவனந்தபுரத்தில் வசிக்கும் (என் அக்கா) சீதா ஹரிஹரன் அப்போது தலச்சேரிவாசி. முன்னாள் விமானப்படை வீரரான கணவருக்கு அங்கே தபால் துறையில் வேலை. வாழ்நாளின் பெரும்பகுதி தாம்பரம், சூலூர், சண்டீகர்… என விமானப்படை தளம் உள்ள ஊர்களிலேயே பணி.  சந்திரேட்டன் யாரென்று அக்கா கேட்டு தெரிந்து கொண்டார். ரயில்வே அலுவலரான சந்திரேட்டன் ஆர்.எஸ்.எஸ் காரியவாஹ் என்று சொன்னார்கள். பின்னாளில் 1977 ல் சங்க தடை நீக்கப்பட்ட அன்று திருவனந்தபுரத்தில் அக்கா வீட்டுக்கு வந்த எல்லோருக்கும் இனிப்பு கிடைத்தது. அக்காவுக்கு சங்க அறிமுகமோ கலவர பூமியில் கிடைத்தது!

மத்திய பிரதேசத்தில் ஒரு நகரத்தில் நடந்த சங்க முகாமை தேடிப் போன ஒரு பெரியவர் அந்த ஊர் ரிக்ஷாக்காரருக்கு ஆர்.எஸ்.எஸ் என்பதை புரிய வைக்க வேண்டியிருந்தது. ஹிந்து, காவி, பாரதமாதா என்று பல்வேறு அடையாள சொற்களை சொல்லிப் பார்த்தார். கடைசியில் சங்க சீருடையை வர்ணிக்கத் தொடங்கினார். சட்டென ரிக்‌ஷாக்காரர் “அட, அந்த நிக்கர்வாலாக்கள்தானே? அத மொதலிலேயே சொல்லிருக்கலாமே?” என்று கூறி பெரியவரை சங்க முகாமிற்கு அழைத்துச் சென்றாராம். சேலத்தில் மூன்றாவது சர்சங்கசாலக் பாளாசாகப் தேவரஸ் சங்க ஊழியர்கள் இடையே பேசிக் கொண்டிருக்கும் போது இதை தெரிவித்தார்.

முகநூலில் மிக சமீபத்தில் ஒரு பதிவர் நீண்ட ஒழுங்கான செருப்பு வரிசைப் படத்தை போட்டு, “பாருங்கள், ஆர்.எஸ்.எஸ் என்றால் எதிலும் கட்டுப்பாடுதான்” என்று சங்கப் புகழ் பாடியிருந்தார். அவரவர் அனுபவம், அவரவர் அடையாளம்!

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி தாமஸ், “அரசியல் சாசனம், ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ் ஆகிய இவைதான் பாரத மக்களுக்கு   பாதுகாப்பு” என்கிறார். நீதிபதி தாமசுக்கு சங்க அறிமுகம் கிடைத்தது எப்படி? அவரே சொல்கிறார்: “பணிக்கால தொடக்கத்தில் என்னுடன் ஒரு மாஜிஸ்ட்ரேட் வேலை செய்தார். அவர் நேர்மையாளர். அந்த ஸ்வயம்சேவகரால் சங்கத்தைப் புரிந்துகொண்டேன்”.

சங்கத்தின் அடையாளம் பற்றி நீதியரசர் தாமஸ் வெளியிட்டுள்ள இந்த ‘தீர்ப்பு’ துல்லியமானது, சரிதானே?

தொடரும்..