பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அக்டோபர் 9 அன்று காலமானார். அவர் மிகவும் மென்மையான அணுகுமுறை கொண்ட தொழிலபதிபர். தனது சாம்ராஜ்யத்தை நேர்மையாகவும் அதே சமயம் பரிவாகவும் நடத்தி வந்தவர். ஆனாலும் மென்மைக்குள்ளும் ஒரு நெஞ்சுரமிக்க வலுவான தொழிலதிபராக இருந்தார். 1998ம் ஆண்டு ரத்தன் டாடா தனது கனவு திட்டமான, டீசல் காரான டாடா இண்டிகாவை சந்தையில் அறிமுகம் செய்தார். ஆனால் எதிர்பார்த்தபடி விற்பனை இல்லாததால் டாடா நிறுவனத்தை அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவன
மான ஃபோர்டிடம் விற்க முடிவு செய்தார்.
1999ல் ஃபோர்டு நிறுவன அலுவலர்கள் பாரதத்துக்கு வந்து டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அமெரிக்கா சென்ற ரத்தன் டாடா, ஃபோர்டு நிறுவன தலைவர் பில் ஃபோர்டுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பில் ஃபோர்டு, ஆதிக்க மனப்பான்மையுடனும், ரத்தன் டாடாவை அவமதிக்கும் வகையிலும் பேசினார்.
பயணிகள் காரை பற்றி எதுவும் தெரியாமல் எதற்காக இந்த தொழிலில் ஈடுபட்டீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சந்திப்பு நடைபெற்ற பிறகு தான் தங்கியிருந்த இடத்துக்கு வந்த ரத்தன் டாடா, நிறுவனத்தை விற்கப் போவதில்லை என்றும் தொடர்ந்து நடத்துவது என்றும் முடிவெடுத்தார்.
2008ல் நடந்த உலக பொருளாதார நெருக்கடியின் போது, ஃபோர்டு திவால் ஆகும் நிலையில் இருந்தது. டாடா மோட்டார்ஸ் அப்போது ஒரு வெற்றிகரமான நிறுவனமாக மாறிவிட்டது. ஃபோர்டு பங்குகளில் இருந்த ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகிய இரண்டு கார் கம்பனிகளை வாங்க டாடா முன்வந்து, ஜூன் 2008 ல் (2.3 பில்லியன் அமெரிக்க டாலர்) சுமார் 20,000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
இதன் மூலம் ஃபோர்டு திவாலில் இருந்து தப்பியது. ஏளனம் பேசிய ஃபோர்டு தலைவர் பில் ஃபோர்டு ரத்தன் டாடாவிற்கு நன்றி
தெரிவித்தார்.
=========
ரத்தன் டாடா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்
நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு அனைத்து பாரதியர்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அன்னாரது மறைவால் நமது நாடு விலை மதிப்பற்ற ஒரு ரத்தினத்தை இழந்துள்ளது. பாரதத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல ரத்தன் டாடா அவர்கள் பல சிறந்த யுக்திகளை வகுத்து செயல்படுத்தினார் எனக் கூறினால் அது மிகையாகாது. சமகால பாரத தொழில்துறையின் முன்னோடிகளில் மூத்தவராக இருந்தவர். சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்தார். தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலன் என பலதரப்பட்ட விஷயங்களில் ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தெளிவான சிந்தனை தனித்துவம் வாய்ந்தது. பிடிக்க முடியாத உயரங்கள் எட்டிய பின்னும், ரத்தன் டாடா கடைபிடித்த எளிமையும், பணிவும் நம் எல்லோருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம். நம் நினைவில் நீங்காது என்றும் அவர் இருப்பார். அன்னாருக்கு நமது பணிவான வணக்கங்கள் மற்றும் இதய பூர்வமான அஞ்சலிகள். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
டாக்டர். மோகன் பாகவத்
ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர்
தத்தாத்ரேய ஹோசபாலே
ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச் செயலாளர்