ஆணவம் நிறைந்த அரசர்களின் முறைகேடான ஆட்சியால் துயருற்ற பூமித்தாய் பரமனிடம் சென்று முறையிட்டாள். அதைத்தொடர்ந்து அவர்கள் விஷ்ணுவை அணுகியபொழுது அவர், ‘பூமித் தாயின் நிலைமையை நாம் அறிவோம். வசுதேவனின் மகனாக அவதரித்து உங்கள் துயர் துடைப்போம்’ என்று அசரீரியாக பதிலளித்தார்.
அதற்கிணங்க மகாவிஷ்ணு வசுதேவர் தேவகி தம்பதியருக்கு மகனாகப் பிறந்து யசோதை நந்தகோபன் மகனாக கண்ணன் என்ற பெயரில் கோகுலத்தில் வளர்ந்துவந்தார். தேவகியின் மகனால் தனக்கு அழிவு உண்டாகும் என்று அசரீரியின் வாயிலாக கண்ணனின் மாமனும் கொடுங்கோல் அரசனுமான கம்சன் அறிந்துகொண்டான். ஆனால் தன்னை அழிக்கவிருக்கும் குழந்தை எங்கிருக்கிறது என்று அறியாத காரணத்தால் கண்ணன் பிறந்த நேரத்தில் பறந்த அனைத்துக் குழந்தைகளையும் அரக்கர்கள் மூலமாக கொன்றுவந்தான்.
தன்னை அழிப்பதற்காக கம்ஸனால் அனுப்பி வைக்கப்பட்ட பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன் போன்ற அரக்கர்களை கண்ணன் வெகு சாதுர்யமாக அழித்துத் தன்னைக் காத்துக்கொண்டான். தன்னையும் தனது அண்ணனான பலராமனையும் ஆயர்பாடிச் சிறுவர்களையும் பாம்பு வடிவில் அழிக்க வந்த அகாசுரனைக் கொன்று அனைவரையும் காப்பாற்றினான்.
மேலும், காளிந்தி நதியில் வாழ்ந்துகொண்டு அந்த நதி நீரை நஞ்சாக்கிக் கொண்டிருந்த காளியன் என்ற பாம்பை வெற்றிகொண்டு அதை அங்கிருந்து விரட்டி ஆவினங்களும் ஆயர்களும் பயன்படுத்தும் வகையில் தண்ணீரை நஞ்சற்றதாக மாற்றினான். இவ்வாறு தனது குழந்தைப் பருவத்திலிருந்தே பல வீரதீரச் செயல்களைச் செய்து அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளான்.
கல்வி கற்கும் பருவத்தை எட்டியதும் ஸாந்தீபனீ முனிவரின் குருகுலத்தில் தங்கி குருவிற்கு பக்தி சிரத்தையுடன் பணிவிடைகளும் செய்துகொண்டு கல்வியும் கற்றுவந்தான்.
தன்னை அழிக்க வந்துள்ளவன் கோகுலத்தில் இருக்கும் கண்ணன்தான் என்பதை 15 ஆண்டுகளுக்குப் பின் கம்ஸன் உறுதியாக அறிந்துகொண்டான். அக்ரூரரை அனுப்பி கண்ணனையும் னையும் தந்திரமாக மதுரா நகருக்கு அழைத்து வரச்செய்தான். அங்கு அவர்களை அழிக்க முற்பட்ட முஷ்டிகாஸுரன் சாணூரன் என்ற இரு மல்லர்களையும் கண்ணன் மற்போரில் வெற்றிகொண்டான். பிறகு பலராமனும் கண்ணனும் கம்ஸனின் அரசவையை அடைந்தனர். கண்ணன் கம்ஸனுடன் மற்போர் புரிந்து அவனை அழித்து தேவகி, வஸுதேவர், உக்ரஸேனர் ஆகியோரைச் சிறையிலிருந்து விடுவித்தான். உக்ரஸேனரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினான். இவ்வாறு கொடுங்கோலாட்சியை அகற்றி நல்லாட்சி மலர வழிவகைசெய்தான்.
பிற்காலத்தில் துவாரகையில் ஒரு புதிய ராஜ்ஜியத்தை யாதவர்களுக்காக உருவாக்கினான். அதற்கு அவன் அரசனாக இருந்தான். அப்பொழுது தன்னைக் காணவந்த ஏழ்மை நிலையிலிருந்த குருகுல நண்பனான ஸுதாமாவை (குசேலரை) அன்புடன் வரவேற்று உபசரித்து அவரது ஏழ்மையையும் போக்கினான். கண்ணன் ஒரு உற்ற நண்பன் என்பதை இது காட்டுகிறது. யாதவர்களையும் பாண்டவர்களையும் இணைத்தான். இந்த இணைப்பு யாதவர்களின் பெரிய எதிரியான மகத அரசன் ஜராஸந்தனை முறியடிக்க பெரிதும் உதவியது. இங்கு கண்ணனின் ராஜதந்திரம் வெளிப்படுகிறது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே இருந்துவந்த பகை காரணத்தால் பாண்டவர்கள் பல இன்னல்களைச் சந்திக்கவேண்டிவந்தது. அந்நேரங்களில் கண்ணன் அவர்களுக்கு பெரிதும் உதவியுள்ளான்.
துரியோதனன் சபையில் திரௌபதியின் தன்மானத்தைக் காப்பாற்றியது, காட்டில் துர்வாஸரின் கோபத்திலிருந்து காப்பாற்றியது, கௌரவர்களிடம் தூது சென்றது, குருக்ஷேத்ர போரில் பாண்டவர் பக்கம் நின்று அவ்வப்பொழுது ஆலோசனை வழங்கியது, அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்தது, போரிலிருந்து பின்வாங்கத் துவங்கிய அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து அவன் கடமையை உணர்த்தியது, போரில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு, எப்போதும் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது, இந்திரபிரஸ்தத்தை மீட்டுக்கொடுத்தது ஆகியவற்றை அதற்கான எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம்.
கண்ணனின் உபதேசத்திலுள்ள ஒவ்வொரு சொல்லும், செயலும் பொருள் பொதிந்தவை. அது மனிதகுலத்திற்கு நல்ல படிப்பினையை வழங்குகிறது. கடினமான சிக்கலான பொறுப்பை ஏற்று நீதியின் நேர்மையின் பக்கம் நின்று நசுக்கப்பட்டவர்களை நசுக்குபவர்களிடமிருந்து காப்பாற்றி எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் பூர்த்தி செய்து, பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சமுதாய நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும்பங்காற்றி மனிதனை உயர்த்தியவன் கண்ணன்.