‘அவசர தேவையெனில் நேரில் வாருங்கள்!’ கேரள அரசுக்கு கவர்னர் ஆரிப் கான் அறிவுரை

”மசோதா அல்லது அவசர சட்டம் தொடர்பாக, நான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில், அதன் அவசர தேவை குறித்து, கவர்னர் மாளிகைக்கு நேரில் வந்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்,” என, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்து உள்ளார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

பாரபட்சம் இருக்காது

இங்கு, மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடிக்கிறது. மாநில அரசு சார்பில் அனுப்பப்பட்ட இரு அவசர சட்டங்களில் கையெழுத்திட, கவர்னர் ஆரிப் முகமது கான் மறுத்து விட்டதாக, சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில், கவர்னர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஊடகங்கள் வாயிலாக என்னிடம் பேச வேண்டாம் என, முதல்வர் பினராயி விஜயனை கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு மசோதா அல்லது அவசர சட்டம் தொடர்பான அவசர தேவை குறித்து எனக்கு விளக்கிச் சொல்ல, அவரை கவர்னர் மாளிகைக்கு அழைக்கிறேன். நான் அவசரமாக செயல்பட வேண்டும் என, மாநில அரசு விரும்பினால், அதன் நியாயமான கோரிக்கைகள் குறித்து, கவர்னர் மாளிகைக்கு நேரில் வந்து என்னிடம் விளக்க வேண்டும். இதில் நிச்சயம் பாரபட்சம் இருக்காது; தகுதி அடிப்படையில் பரிசீலிப்பேன்.

அழைக்கக்கூடாது

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர், ‘ஆசாத் காஷ்மீர்’ என, அழைக்கக் கூடாது. இதன் வாயிலாக, பிரிவினைவாதம் மற்றும் பிராந்தியவாதத்தின் நெருப்பை மூட்ட முயற்சிக்கக் கூடாது. இது, அரசியலமைப்பு விரோதச் செயல்கள். இவற்றை செய்யக்கூடாது என, கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.