தமிழகத்தில் தி.மு.க.,வினர் குறுநில மன்னர்களாக உள்ளனர்’ என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார். பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவர் நேற்று கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வருகை தந்து, கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முன் பாதயாத்திரையை துவக்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் அரசியல் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையோடு, இந்த தொகுதி மக்களை தேடி வந்தவர் விஜயகாந்த். அவரை, சட்டசபை உறுப்பினர் ஆக்கிய தொகுதி விருத்தாசலம். ஆட்சியாளர்கள் தவறு செய்யும் போது, மாற்றம் கேட்டு வருபவர்களை அரவணைப்பது இந்த தொகுதி. ராமேஸ்வரத்தில் நான் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்த இந்த யாத்திரை, வரும் 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக, வரும் லோக்சபா தேர்தல் அமைய வேண்டும். தமிழகத்தில் தி.மு.க.,வினர் குறுநில மன்னர்களாக உள்ளனர். தவறு செய்தால், தி.மு.க., ஊராட்சி தலைவரை கூட கேள்வி கேட்க முடியாது; அந்த அளவிற்கு அடாவடியாக செயல்படுகின்றனர்.
காமராஜருக்குப் பின் இவர்கள் கொட்டத்தை அடக்க விஜயகாந்த் வந்தார். ஆனால், இப்போது அவர் நம்முடன் இல்லை. அவர் இருந்தவரை அரசியல் கட்சியினர் அவரை வசைபாடினர்; இன்றைக்கு கண்ணீர் வடிக்கின்றனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலை சோழப் பேரரசின் ராணி செம்பியன் மாதேவி, கண்டராதித்தன் ஆகியோர் கட்டினர். இது சோழப் பேரரசின் படை நிற்கும் இடம். மணிமுத்தாற்றில் குளித்துவிட்டு மூலவரை பார்த்தால், நாம் காசிக்கு சென்று புனித நீராடி அங்கிருக்கும் சிவனை பார்த்ததற்கு சமம்.
ஆனால், மோசமான தி.மு.க., ஆட்சியில், கோவிலின் தெப்பக்குளத்தை கூட சுத்தப்படுத்த முடியவில்லை. கோவிலில் இருந்து காணாமல் போன அர்த்தநாரீஸ்வரர் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு வந்தவர் பிரதமர் மோடி. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.