கடுமையான தவமிருந்து சிவபெருமானிடம் வரம் பெற்றவன் சூரபத்மன். வரம் கிடைத்த செருக்குடன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினார்கள். கயிலைநாதன் திருக்குமாரன் முருகனை போருக்கு அனுப்பினான்.
முருகப் பெருமான் தன் தளபதியாகிய வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அராஜகத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். சூரபத்மன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. முருகப்பெருமான் போர்க்களத்தில் சூரனைச் சந்தித்தார். நான்கு நாட்கள் கடும் போர் நடந்தது. வரம் பெற்றவனாக இருந்ததால் போர் உக்கிரமாக நடந்தது. சூரன் தனது மாயாஜால வேலைகளை எல்லாம் நடத்திக் காட்டினான். ஆனால் அது எதுவும் முருகப் பெருமானிடம் எடுபடவில்லை. கடைசியில் முருகவேள் வேலாயுதத்தை ஏவினார். சாகாவரம் பெற்ற சூரன் அரக்க வடிவம் எடுத்துப் போராடினான். முருகப் பெருமானின் வேல் அவனது உடலை இரண்டாகப் பிளந்தது. பிளவுண்ட இரு பகுதிகளும் மயிலும் சேவலுமாகி போருக்கு வந்தது. கந்தவேளின் கருணை நோக்கினால் பகைமை நீங்கி நல்லறிவு பெற்றான். மயிலைத் தன் வாகனமாகவும் சேவலைத் தன் கொடியாகவும் ஏற்று அருளினார். ஆறாவது நாள் சூர சம்ஹாரம் ஆகியது.
தேவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அராஜகம் அழிந்தது. தர்மத்தைக் காப்பாற்றும் நோக்கம் முழுமையாக நிறைவேறியது.
சஷ்டி விரதம் இருந்து கந்தனை வணங்கினால் கஷ்டங்கள் எல்லாம் கரைந்துபோகும்.
தேச விரோத, பிரிவினைவாத, பயங்கரவாத அசுர சக்தியிடமிருந்து நாட்டைக் காக்க நாமும் வீர விரதம் ஏற்போம். டூ
திருச்செந்தூர்
சூர சம்ஹாரம் நடைபெற்ற இடம் திருச்செந்தூர். எனவே திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பார்ப்பது விசேஷமானது. எல்லா முருகன் கோயில்களிலும் அன்று சூரசம்ஹாரம் நடைபெறும். முடிந்தால் ஒரு முறை திருச்செந்தூர் சென்று சூர சம்ஹாரம் பார்த்து வாருங்கள். நமது வாழ்க்கையில் உள்ள சிக்கல்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.
சட்டியிலே இருந்தால் தான் அகப்பையில் வரும்
இது ஒரு சாதாரண பழமொழி மட்டுமல்ல. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் (அகப்பை) குழந்தை வரும் என்பதாக கிருபானந்தவாரியார் விளக்கமளிக்கிறார்.