அயோத்தியில் சிலை பிரதிஷ்டைக்கு பிறகு ராமருக்கு அதிகாலையில் முதல் ஆரத்தி: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் போலீஸார் திணறல்

அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 16-ல் தொடங்கிய பிராணப் பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த விழாவில் முக்கிய விருந்தினர்களாக பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து மாலை ஏழு மணி வரை விழாவுக்கு வந்த சுமார் 15,000 சிறப்பு அழைப்பாளர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு கருவறை மூடப்பட்டது.
இதன் பிறகு அயோத்தி களத்தில் உள்ளிட்ட செய்தி சேகரிக்க வந்த சுமார் 700 பத்திரிகையாளர்கள் அறக்கட்டளை அனுமதியுடன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் மறுநாளான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ராமருக்கு முதல் ஆரத்தி நடைபெற்றது. காலை 7 மணிக்கு பொதுமக்களுக்கான தரிசனம் தொடங்கியது.இதற்கிடையில் ராமர் கோயில் விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அயோத்தி நகரமே சீல் வைக்கப்பட்டது போல், நகரை சுற்றிலும் 26 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றியுள்ள மாவட்டங்கள் வழியாக வரும் தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டதால் சாலைகளில் வாகனங்களை பார்க்க முடியவில்லை. சிறப்பு அழைப்பு மற்றும் அடையாள அட்டைகள் உள்ளவர்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
ஜனவரி 22 வரை பொதுமக்கள் வரவேண்டாம் என ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை முன்னறிவிப்பு செய்த போதிலும் அயோத்தியை சுற்றியுள்ள மாவட்டங்களின் மக்கள் நடைபயணமாகவே கோயிலுக்கு வரத்தொடங்கினர். தொலைதூர ராம பக்தர்களும் பல்வேறு வழிகளில் கோயிலுக்கு வந்து குவிந்துள்ளனர்.
இந்நிலையில் பல ஆயிரம் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கோயிலைச் சுற்றிலும் காத்திருந்தனர். பொதுமக்களுக்கான தரிசனம் நேற்று காலையில் தொடங்கியதும் இவர்கள் முண்டியடித்து கோயிலில் நுழைய முயன்றனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் ஐம்பதாயிரம் பேர் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.
அயோத்தி நகரினுள் ஏழுகட்டப் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளை கீழே தள்ளி விட்டு பொதுமக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டபடி நுழைந்தனர். இதில் சிலருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. இந்த நெரிசல் காரணமாக பெண்கள் மற்றும் மூத்த வயதினர் மட்டுமே தொடக்கத்தில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பிறகு கூட்டத்தை படிப்படியாக வரிசைப்படுத்தி, அனைவரையும் உள்ளே அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.