அபிநந்தன் பாரத விமானப்படை அதிகாரி தான். பாரத பிரதமர் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறார் என்பதும் உண்மை. கடந்த ஒரு வாரத்தில் நாட்டு மக்கள் அனைவரின் கவனமும் அபிநந்தன் மீதுதான். ஏனென்றால் அட்டைப்படக் கட்டுரை எழுதியுள்ள எஸ்.ஆர். சேகர் `பாரதம் ஏதாவது பதிலடி கொடுக்காதா?’ என்ற தவிப்பு மக்கள் அனைவர் மனதிலும் வியாபித்து இருந்தது என்று சுட்டிக்காட்டுகிறார். அதனால் புல்வாமாவுக்கு பாலாகோட்டில் பாரத விமானப்படை அழுத்தமாக பதிலடி முத்திரையை பதித்ததும் அந்த தவிப்பு தணிந்தது.
உடனே எதிரி தன் விமானங்களை பாரத எல்லைக்குள் அனுப்பிய போது பாரத விமானப்படை பாரத எல்லையின் புனிதத்தை காக்கும் விதத்தில் எதிரி விமானங்களை விண்ணில் துரத்தி, அவற்றில் ஒன்றை மண்ணில் சாய்த்தது. உலகின் கவனத்தை கவர்ந்தது. பாரதத்தை ஏறெடுத்துப் பார்க்கும் தைரியம் இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற சேதியை உலகிற்கு பிரகடனம் செய்தது. இதை சாதித்த அபிநந்தன் ஓர் அடையாளம்.
வலிமையான, விவரமான, புதிய பாரதத்தின் அடையாளம். எத்தனையோ ஆண்டுகளாக, பாரதம் எவ்வளவோ தாக்குதல்களுக்கு உள்ளாகியும் பதிலடி கொடுக்காததாலேயே பலவீன நாடு என்று புரிந்துக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த இழிநிலையை அடியோடு புரட்டிப்போட்டது, எதிரி விமானத்தை அபிநந்தன் புரட்டிப்போட்ட செயல். எனவே அபிநந்தன் ஓர் அடையாளம்.