புனித தேசத்தின் எல்லையும் புனிதமே!

தங்கள் வசம் இரண்டு விமானிகள் இருப்பதாகவும், ஒருவர் மருத்துவமனையில் இருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. அதை நம் நாட்டு ராணுவம் மறுத்தது. ‘ஒரே ஒரு விமானம் திரும்பவில்லை; அதை ஓட்டிய விமானி நிலை தெரியவில்லை’ என்று சொன்னது நம் விமானப் படை. அந்த ஒருவர் தான் அபிநந்தன்.

அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானிய F-16 விமானமும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைக்குள் தான் விழுந்தது. அதை இயக்கிய பாகிஸ்தானிய விமானப் படை வீரர் ‘ஷாஸஸ்- உத்-தீன்’ நம் நாட்டு வீரர் அபிநந்தனைப் போலவே பத்திரமாகத் தரையிறங்கினார். ஆனால் தப்பவில்லை.

அபிநந்தனைப் போலவே அவரையும் சுற்றி வளைத்த பாகிஸ்தானிய வெறியர்கள் அந்த விமானி பாரத நாட்டைச் சேர்ந்தவர் என்று நினைத்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்கள். வெறி கூடுதலாக இருந்ததால் அவருக்குச் சேதாரம் அதிகம். குற்றுயிரும் குலையுயிருமாக ‘ஷாஸஸ்-உத்-தின்’ பாகிஸ்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பாரத நாட்டின் இரண்டு விமானிகளைத் தங்கள் வசம் பிடித்து வைத்திருப்பதாகப் பாகிஸ்தான் விவரங்கெட்ட தனமாக டமாரமடித்தது. மரண அடி வாங்கிய ஷாஸஸ்-உத்-தீன் பாகிஸ்தானியப் பிரஜை என்று அவர்கள் உணர்ந்த சிறிது நேரத்திலேயே அந்த பாக் வீரனின் உயிர் பிரிந்தது.

பிப்ரவரி ௨௪ விடியும் முன்னதாக நம் ராணுவம் சமீப காலங்களில் நடத்திய இரண்டாவது திட்டமிட்ட அதிரடித் தாக்குதல் (சர்ஜிகல் ஸ்ட்ரைக்) நடைபெற்ற இடம் பாலாக்கோட்.

அது கட்டுப்பாட்டு எல்லைக்கு மிகத் தொலைவில் கைபர் பக்துன்க்வா பகுதியில், ஸ்ரீநகரில் இருந்து ஏறக்குறைய 400 கி.மீ தள்ளி, பாகிஸ்தானுக்குள் இருக்கிறது. அதற்கு அருகே தான் ஒசாமா பின் லேடனை அமெரிக்கா சுற்றி வளைத்த ‘அபட்டோபாத்’ இருக்கிறது.

‘பாரத ராணுவம் வந்தது; தாக்கி, திரும்பிச் சென்றது. நீங்கள் ஏன் திருப்பி தாக்கவில்லை?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘இருட்டாக இருந்தது; இழப்பு என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை’ என்று பதில் அளித்தார் பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் ‘பர்வேஸ் கட்டக்’.

 விடிந்த பின் தான் அவர்களுக்கு விவரம் தெரியும் போலும்! இரண்டாவது நாள் பதிலடி கொடுப்பதற்காக எல்லைக்கோடு அருகே அவர்கள் வந்தார்கள்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான் அமைச்சரவையை சேர்ந்த ‘ஷேக் ரஷீத்’ பயங்கரவாதிகள் மீதான நம் தாக்குதலை உறுதிப்படுத்தினார்.

உலகின் மிகப்பெரிய உளவு ஸ்தாபனங்களை வைத்துள்ள வல்லரசுகள் நமது தாக்குதலைச்  சந்தேகிக்கவில்லை; நம்மைக் கண்டிக்கவும் இல்லை.

பாகிஸ்தானின் அண்டை நாடுகள் நம்மைப் பாராட்டுகின்றன. பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியும், அமைச்சர்களுமே தாக்குதலை, இழப்பை ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால், உள்ளூரில் உள்ள வெட்டிக் கும்பல் நம் பிரதமரை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு ராணுவத்துக்கு எதிராக, தேசத்திற்கு எதிராகப் பேசித் திரிகிறது. அவர்கள் மீது ‘தேசியப் பாதுகாப்புச் சட்டம்’ பாயுமா?