இந்தியாவில் முஸ்லிம்கள் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு நிலவிவருகிறது.” இப்படி கருத்து தெரிவித்திருப்பது சாதாரண அன்சாரி இல்லை. பத்து ஆண்டுகள் குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நாளன்று இவ்வாறு வாய் திறந்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவரும் அன்சாரி போலவே காங்கிரஸ்காரருமான பிரணாப் முகர்ஜி, ‘முஸ்லிம்களுக்கு பாரதத்தில் பாதுகாப்பு இல்லை’ என்ற பேச்சை ஏற்க முடியாது என்று சாட்டை சொடுக்கினார்.
முஸ்லிம்களுக்கு நம் நாட்டில் என்ன குறை? ஜனாதிபதியாக, துணை ஜனாதிபதியாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் இருந்துள்ளார்களே! இன்றும் மத்திய, மாநில அமைச்சர்களாக இருந்து வருகிறார்கள். எல்லா கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு எம்.பி., எம்.எல்.ஏ. சீட்டுகளை வாரி வழங்கி வருகிறார்களே? அரசுகளும் மைனாரிட்டி என்ற பெயரில் அவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றன. அவர்கள் வியாபாரத்திலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். மொத்தத்தில் இந்த நாட்டின் செல்லக் குழந்தைகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தானிலும் பங்களா தேஷிலும் சிறுபான்மையினரான ஹிந்துக்களின் நிலையைக் கேட்டால் கண்ணீர்தான் வரும்.
எல்லாம் தெரிந்த பிறகும் கூட ஒரு உயர்ந்த பொறுப்பில் இருந்தவர் இவ்வாறு பேசுவது கண்டனத்துகுரியது. பத்து ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு போகிற போக்கில் ஒரு நாலாந்தர அரசியல்வாதி போன்று பேசுவது அவர் வகித்த பதவிக்கு கண்ணியம் சேர்ப்பதாக இல்லை.
இப்படிப்பட்ட பேச்சை அவர் தொடர்ந்து பேச அரசியல் சாஸனப் பதவி இனி குறுக்கே நிற்காது என்று பிரதமர் நரேந்திர மோடி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார்.
மொத்தத்தில் இவரது 10 ஆண்டு பதவிக் காலத்தில் 7 ஆண்டுகள் இவரது எஜமானர்களின் தர்பார்தான் நடந்தது என்ற விஷயத்தை அன்சாரி மறைக்கப் பார்ப்பதுதான் கேவலம்.