அதிக எம்.எல்.ஏ.,க்கள் அஜித் பவாரிடம்; குழப்பும் எண்ணிக்கை விவரம்

தேசியவாத காங்கிரசின் சரத் பவார் மற்றும் அஜித் பவார் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூட்டத்தில் அஜித் பவார் பேசும் போது சரத்பவாரை விமர்சித்து பேசினார். இரு தலைவர்களின் கூட்டத்தில் எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர் என்பது குறித்து விவரம் உறுதியாக வெளியாகவில்லை. குழப்பமான விவரங்களே வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொருவரும் ஒரு எண்ணிக்கையை கூறுகின்றனர். மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா- பா.ஜ., கூட்டணி ஆட்சியில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், இக்கூட்டணி ஆட்சியில் இணைந்தார். அவர் துணை முதல்வராகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். சட்டசபையில் தேசியவாத காங்கிரசுக்கு 53 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அஜித் பவாருக்கு 36 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்கு உள்ளதாக இரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இரு தரப்பினரும் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். மும்பையின் பந்த்ரா பகுதியில் அஜித்பவார் தரப்பின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அஜித் பவாரை, சகஜ் புஜ்பால் மற்றும் பிரபுல் படேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். 40 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக இத்தரப்பினர் கூறியுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்களிடம் ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரபுல் படேல் பேசும்போது,சிவசேனாவின் கொள்கையை நாம் ஏற்றுக்கொண்ட போது, பா.ஜ., உடன் கூட்டணி அமைப்பதில் ஆட்சேபனை ஏன்? மெகபூபாவும், பரூக் அப்துல்லாவும் காஷ்மீரில் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ளனர். தற்போது கூட்டணியில் இருந்து பிரிந்துவிட்டனர்.

பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பார்த்த போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. 17 கட்சிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், 7 கட்சிகளுக்கு தலா ஒரு எம்.பி., மட்டுமே இருந்தனர். மற்றொரு கட்சிக்கு எம்.பி., யாரும் இல்லை. ஆனால், அவர்கள் மாற்றத்தை கொண்டு வருவோம் என பேசுகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது என்பது நாட்டிற்காகவும், கட்சியின் நலனுக்காகவும் தான். தனிப்பட்ட நலன்களுக்காக அல்ல. பா.ஜ.,வில் 75 வயதில் ஓய்வு பெறுகின்றனர். ஆனால், 83 வயதாகியும் சரத்பவார் பதவியில் நீடிக்கிறார். 2024 தேர்தலில் மோடிக்கு போட்டியில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

அஜித் பவார் பேசும் போது, சிவசசேனாவுடன் ஆட்சி அமைக்க சரத் பவார் விரும்பவில்லை. நம்மை ஆதரிக்கும் பல எம்.எல்.ஏ.,க்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மஹாராஷ்டிரா விகாஸ் அகாதி அரசு கவிழ்ந்த போது, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சரத்பவாரை சந்தித்து பா.ஜ., வுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினர். சரத்பவாருக்கு 83 வயது ஆகிவிட்டது. பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டு அந்த முடிவை மாற்றிக் கொண்டீர்கள். இன்னும் பிடிவாதம் காட்டுவது ஏன்? சரத்பவார் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதனிடையே, தேசியவாத காங்கிரசின் தலைமைப்பதவி மற்றும் கட்சி சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திற்கு அஜித் பவார் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.