பாரத தேசிய கொடியை ஸ்ரீநகரில் ஏற்றுவதற்காக 1992 ஜனவரி 26 அன்று பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட சங்க அமைப்பு
களின் தொண்டர்கள் திரண்டார்கள். அன்று பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம், ஜம்முவுடன் நிற்கும்படி நரசிம்மராவ் அரசு கேட்டுக் கொண்டது. குறிப்பிட்ட சிலர் மட்டும் ஸ்ரீநகர் செல்வதாக ஏற்பாடு. ஜம்முவின் பரேடு கிரவுண்ட் ல் அன்று இரவு கொட்டும் பனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல முக்கிய தலைவர்கள் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் ஸ்ரீநகர் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள். ஆனால் தொண்டர்கள் சமாதானம் அடையவில்லை. இறுதியாக வாஜ்பாய் பேசினார். அவர் எண்ணமெல்லாம் தேச நலன் ஒன்றே. ஹிந்தி தெரியாவிட்டாலும் அவர் பேச்சின் உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது. ‘பின் டிராப் சைலன்ஸ்’ என்று சொல்வார்களே அது போன்ற ஒரு அமைதி. அத்தனை பேரும் மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல வாஜ்பாய் பேச்சுக்குப் பின் அமைதியானார்கள். திட்டமிட்டபடி ஒரு சிறு குழு மட்டும் ஸ்ரீநகர் சென்றது. வாஜ்பாய் பேச்சில் இருந்த தவம் அத்தகையது.
ஆண்டு 1998. வாஜ்பாய் பாரதப் பிரதமராக பதவி ஏற்று, மே 11 போகரண் அணு சோதனைக்கு சில தினங்களுக்கு முன்பாக ஆமதாபாத்தில் பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம். வாஜ்பாய் தனது உரையில் “நான் வருகின்ற வழியில் மக்களை சந்திக்கலாம், பார்க்கலாம் என்று இருந்தேன், ஆனால் சாலை முழுக்க வெறுமையாக இருந்தது. விஐபிக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதாம்” என்றார். கூடியிருந்த கூட்டத்தை பார்த்து “அம் ஐ எ விஐபி? (Am I a VIP)”ஒரு நிமிடம் தாமதித்து “நோ ஐ அம் நாட் எ விஐபி; ஐ எம் ஏ வி ஓ பி; வெரி ஆர்டினரி பர்சன் (I am not a VIP, I am a VOP, Very Ordinary Person) ஆகவே நான் வருகின்ற பாதையில் போக்குவரத்தை எல்லாம் நிறுத்த வேண்டாம்” என்று சொன்னார். அந்த வார்த்தையை நான் நேரில் கேட்டேன். எவ்வளவு பொருள் பொதிந்தது!
ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. வாஜ்பாய் அரசில் அவர் மின்துறை அமைச்சர். அவர் சொன்ன அனுபவம்: “1999ல் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசமைக்க இருந்த நேரத்தில் ஒருமித்த கருத்தால் வாஜ்பாய் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காலையில் பதவி
யேற்பு விழா. அதற்கு பிரதமர் தயாராகி வர வேண்டும். ஆனால் வாஜ்பாய் உரிய உடையணியாமல் நிகழ்ச்சிக்கு தயாரா
காமல் இறுக்கமான முகத்தோடு இருந்தார். பிரமோத் மகாஜன், நான், அனந்தகுமார் ஆகியோர் அவரை பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைத்துவர சென்றோம். வாஜ்பாய் வர மறுத்தார். அவரோ “நான் ஏற்கனவே பிரதமராக இருந்துவிட்டேன். என் உடல் நிலையும் சரியில்லை. இந்த நாட்டை வழிநடத்திச் செல்வதற்கு அத்வானி தான் சரியான நபர். அவரை அழையுங்கள் என்று கூறிவிட்டார். இந்த செய்தி அத்வானியை எட்டியதும் அவர் நேரடியாக வாஜ்பாய் இல்லத்திற்கு வந்து எவ்வளவு பேசியும் வாஜ்பாய் ஒத்துக் கொள்ளவில்லை. திட்டவட்டமாக மறுத்தார். அத்வானியும் பிரதமராக மறுத்தார். “வாஜ்பாய் இருக்கிற வரைக்கும் வாஜ்பாய் தான் பிரதமர்” என்று அத்வானி சொல்லிவிட்டு, பிரமோத் மகாஜன் உள்ளிட்டோரிடம் “அவருக்கு உரிய உடை அணிவித்து அழைத்து வாருங்கள்” என்று சொல்லிச் சென்றார். அந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் வாஜ்பாய் கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் தான் இருந்தார்.” இதை சொல்லி குமாரமங்கலம் வியந்தார். காங்கிரஸ் கட்சியில் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்றார். பாஜகவில் அப்படி நடக்கிறதென்றால், காரணம் சங்க வளர்ப்புதான்.
கட்டுரையாளர் வழக்கறிஞர்;
ரங்கராஜன் குமாரமங்கலத்தின்
செயலராக இருந்தவர்.