அகில விருட்சத்தின் ஆணிவேர் குடும்பமே

தேசத்தின் ஆற்றலை சோதனைகளே வெளிப்படுத்து கின்றன. ஆசியப் பொருளாதார நெருக்கடி சில பத்தாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. இது ஆசிய நாடுகளையும், தென்கிழக்கு ஆசிய தேசங்களையும் மிகக்கடுமையாகப் பாதித்தது. இதிலிருந்து தப்பித்த ஒரே நாடு நம் பாரதம்தான். அமெரிக்காவில் உள்ள வால்ஸ்ட்ரீட்டில் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது அமெரிக்க பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்தது. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் பரவியது. இதில் குறைந்த அளவு பாதிப்புடன் தப்பிய ஒரே நாடு பாரதம் தான் என்று சர்வதேச நிதியமே குறிப்பிட்டுள்ளது.

பரிவு காட்டும் இயல்பு

கொரோனா பாதிப்பின்போது சுமார் 1 கோடி தொழிலாளர்கள் பாரதத்தின் மேற்கத்திய நகரங்களிலிருந்து கிழக்கத்திய கிராமங்களுக்குச் சென்றார்கள். ஆனால் பாரதத்தில் எங்குமே பட்டினி சாவு ஏற்படவில்லை. கிராமத்தில் வறுமை இருந்தது. படிப்பறிவு இல்லை. போதுமான வேலைவாய்ப்பு இல்லை. சுகாதார மேம்பாடு இல்லை என்றெல்லாம் கூறிய போதிலும் மற்றவர்களிடம் பரிவு காட்டும் இயல்பு உள்ளது. இதனால்தான் கிராமங்களில் குற்றங்களின் எண்ணிக்கை சொற்பமாக உள்ளது.  பாரதம் எத்தனையோ படையெடுப்புகளைச் சந்தித்துள்ளது. இவற்றிற்குப் பிறகும் பாரதத்தின் கலாச்சாரம் மாறுபடாமலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது. வெளிநாட்டு, உள்நாட்டு அதிர்ச்சிகளை பாரதம் எவ்வாறு தாங்கிக் கொண்டது? என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். இந்த பதிலுக்கான விடையில்தான் பாரதத்தின் உன்னத நிலை மிளிர்கிறது. பொருளாதார அம்சமாக வெளிநாட்டவர்களால் பார்க்கப்படாத சிறப்பு அம்சம் பாரதத்தின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதை வெளிநாட்டுக் கண்ணோட்டம் கொண்டவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

பிணைப்பு உண்டு

தீனதயாள் உபாத்யாயா பாரதத்தில் நல்லிணக்கம் காணப்படுவதற்கு குடும்ப ரீதியான உறவுதான் அடிப்படை என்பதை விளக்கியுள்ளார். தனிமனிதனுக்கும், உலகத்துக்கும் இடையே பிணைப்பு ஏற்பட குடும்பம்தான் ஊடகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலை இப்போதும் உயிர்ப்புடனேயே உள்ளது.

“ஒரு குழந்தை பிறந்தவுடன் குடும்பத்தினரை உணர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. படிப்படியாக இது வளர்ச்சியடைகிறது. குடும்பத்துடனான உறவு சமுதாயத்துடனான உறவாக நீட்சியடைகிறது. பிறகு இது தேசத்துடனான உறவாகவும் அதைத்தொடர்ந்து உலகத்துடனான உறவாகவும் உயர்ந்தோங்குகிறது. `வசுதைவ குடும்பகம்’ என்ற கோட்பாடு இதைத்தான் எடுத்துரைக்கிறது. விதையிலிருந்து செடி வளர்கிறது. இது மரமாக தழைத்தோங்குகிறது. பூக்கள் மலர்கின்றன. காய்கள் காய்க்கின்றன, இவை கனிகளாக பழுக்கின்றன. இதைப்போன்றதுதான் குடும்ப உறவு, அகில உறவாக பரிமளிப்பது’’ என்று தத்தோபந்த் தெங்கடிஜி எடுத்துரைத்துள்ளார்.

மோதல் இல்லை

நம் பாரதப் பார்வையில் தனிநபருக்கும் குடும்பத்துக்கும் மோதல் இல்லை. குடும்பத்துக்கும் தேசத்துக்கும் இடையே மோதல் இல்லை. தேசத்துக்கும் அகிலத்துக்கும் இடையே மோதல் இல்லை. மனிதநேயத்துக்கும் உலகத்துக்குமிடையே மோதல் இல்லை. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே மோதல் இல்லை. ஆனால் மேற்கத்திய கண்ணோட்டம் இதிலிருந்து மாறுபட்டது. அது சந்தைப் பொருளாதாரமானாலும் சரி, மார்க்சிஸ கண்ணோட்டமானாலும் சரி இரண்டுமே மோதலை அடிப்படையாக வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளன. தனிநபருக்கும் குடும்பத்துக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. சமுதாயத்துக்கும் தேசத்துக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. தேசத்துக்கும் அகிலத்துக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

குடும்பத்தை ஒழிக்க முடியாது

நமது சமூக அமைப்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பார்வையை தழுவியுள்ளது. இதிலிருந்து நாம் முற்றிலுமாக விடுபடவில்லை. குறிப்பாக பல்வேறு சட்டங்களும் இதையே பிரதிபலிக்கின்றன. இப்போதுதான் மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸமும் முதலாளித்துவமும் குடும்பத்தை அனுசரணையான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. காரல்மார்க்ஸும் அவரது சகா ஏங்கல்ஸும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் “கால ஓட்டத்தில் குடும்ப அமைப்பு முற்றிலுமாக தேய்ந்து மறைந்து விடும். ஏனெனில் குடும்பம் என்பதே தனிநபர் ஆதாயத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லெனினும் திருமணத்தை ஒழிக்க வேண்டும். குடும்ப அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இதை நடைமுறைப்படுத்தவும் முற்பட்டார். இதற்குப் பதிலாக பொதுமை சார்ந்த கம்யூன் முறையைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். ஆனால் அது தோல்வியடைந்து விட்டது. திருமணமும் குடும்பமும் சட்டப்பூர்வமாக்கப்பட்டு விட்டன.

தங்க நகைகள்

நமது குடும்ப முறை காலங்காலமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த தனித்தன்மை வாய்ந்த உறவை மேற்கத்திய கண்ணோட்டம் கொண்டவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பொருளாதார ரீதியாக வளமாக இல்லாதவர்கள் கூட தங்களால் இயன்ற அளவு சேமித்து வருகிறார்கள். நெருக்கடியான காலகட்டத்தில் இது கை கொடுக்கிறது. குடும்பங்களில் தங்கம் ஆபரணங்களாக உள்ளது. அவசரத் தேவைக்கு இதை அடகு வைக்கிறார்கள். பிறகு பணம் சேர்ந்த பின் அடகு வைத்த நகையை மீட்டுக் கொள்கிறார்கள்.

மால் கலாச்சாரம்

கிராமவாசிகள் காய்கறி விற்பவர், பெட்டிக்கடைக்காரர், செருப்பு தைப்பவர், மின்சார ஊழியர் உள்ளிட்டோரிடம் நெருக்கம் காட்டுகின்றனர். தனி மனித உறவைப் பேணுகின்றனர். ஆனால் மாநகரங்களில் மால் கலாச்சாரம் வந்து விட்டது. இந்த மால் கலாச்சாரம் மனிதர்களை முகமற்றவர்களாக முகவரியற்றவர்களாக மாற்றி விடுகிறது. இங்கு இயந்திரத்தன்மை மேலோங்கி விடுகிறது.

பொருளாதார வளர்ச்சி ரகசியம்

டேவிட் மக்கார்டு ரைட் என்ற சிந்தனையாளர் ஓபன் சீக்ரெட் ஆப் எகனாமிக் குரோத் என்ற புத்தக்தை 1957ல் எழுதினார். பொருளாதாரம் சாராத அம்சங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன என்பதற்கு பாரதமே எடுத்துக்காட்டு என்று இந்தப் புத்தகத்தில் டேவிட் மக்கார்டு ரைட் குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே பாரதத்தில்தான் தங்கம் அதிக அளவில் கையிருப்பில் உள்ளது. தங்கத்தை காப்பீடாகப் பார்க்கிறார்கள். மூலதனமாக கருதுகிறார்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது தங்க நகைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு தங்கம் கையிருப்பில் இருந்தபோதிலும் கிராமங்களில் பெரிய அளவில் குற்றங்கள் நடப்பதில்லை.

பூட்டில்லாத வீடுகள்

வீட்டுக்கு பூட்டு போடாத கிராமங்களும் உள்ளன என்பது மேற்கத்திய கண்ணோட்டம் கொண்டவர்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் பாரதத்தில் இது சகஜமானது. காவல்நிலையத்துக்கே செல்லாத கிராமங்கள், நீதிமன்றத்துக்கே செல்லாத கிராமங்கள், மதுவை அனுமதிக்காத கிராமங்கள் ஆகியவை பாரதத்தில் அபூர்வமானவை அல்ல. சிறிய அளவில் வியாபாரம் செய்யும் பெட்டிக்கடைக்காரர்களுடன்தான் கிராமவாசிகள் வரவு செலவு வைத்துக் கொள்வார்கள். வியாபாரிக்கும், பொருளை வாங்குபவர்களுக்குமிடையே பிணைப்பு உள்ளது.

வயநாடு பேரிடர்

அண்மையில் கேரளாவில் உள்ள வயநாட்டில் வரலாறு காணாத பேரிடர் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டியது பெட்டிக்கடைக்காரர்களே. மால்கள் எல்லாம் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

தியாக உணர்வு

இயந்திரத்தனமான கண்ணோட்டத்தை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. அன்பின் அடிப்படையிலான பரஸ்பர கனிவுசார்ந்த உதவியின் அடிப்படையிலான சமூகத்தை நாம் கட்டமைத்துள்ளோம். இதற்கு அடிப்படையாக தியாக உணர்வு உள்ளது. மற்றவர்களுக்காக நமது தேவையை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனோபாவம் இயல்பாகவே தழைத்தோங்குகிறது.

பாரத மாதா

நமது வெளிநாட்டுக் கொள்கை அன்பின் அடிப்படையிலானது. சமாதான சகவாழ்வு பரஸ்பர ஒத்துழைப்பு என்பதுதான் நமது கோட்பாட்டின் பிரதான இயல்பு. இது குடும்ப உறவின் நீட்சிதான். நாம் தேசத்தை பாரத மாதா என்று போற்றுகிறோம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இப்படிப்பட்ட சிந்தனையே கிடையாது. நாம் பெண்களை அன்னையாக கருதுகிறோம். இது கலாச்சாரத்தின் அடிமட்டம் வரை ஊடுருவி உள்ளது. குடும்பத்தை தாய் தாங்குகிறாள். இதுதான் படிப்படியாக விரிவடைந்து அகிலம் முழுவதும் வியாபிக்கிறது. மேற்கத்திய கண்ணோட்டம் நிலத்தை, பெண்ணை, இயற்கையை எல்லாம் பொருளாகப் பார்க்கிறது. இதுதான் சுற்றுச்சூழலை நாசப்படுத்துகிறது. பாரதம் மேற்கொண்ட முயற்சியால்தான் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐநா பொதுச்சபை சர்வதேச பூமி தினம் என்பதை சர்வதேச பூமித்தாய் தினம் என்று மாற்றியது.

வேளாண்மையின் சிறப்பு

கொரோனா காலத்தில் பல்வேறு உலக நாடுகள் கடும் பாதிப்பால் தடுமாறின. ஆனால் பாரதம் தடுமாறவில்லை. மாறாக உலகத்துக்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது. உதவிக்கரம் நீட்டியது. கொரோனா காலத்தில் வேளாண்மை சார்ந்த உற்பத்தி உயர்ந்துள்ளது என்பதை புள்ளி விவரமே மெய்ப்பித்துள்ளது. கிராமிய வாழ்க்கை எந்த பொருளாதார நெருக்கடியையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அகில விருட்சத்தின் ஆணிவேராக குடும்பமே திகழ்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கட்டுரையாளர்: பிஎம்எஸ் முன்னாள் தலைவர்

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி